(Reading time: 8 - 16 minutes)
Arumbu ambugal
Arumbu ambugal

சிறைச்சாலை அளித்த துயரங்களா?' அல்லது காந்தீய மார்க்கங் களில் அவர் நம்பிக்கை இழந்தது காரணமா? சிறைக்கு வெளியே இருந்தால்தான் தேசத்துக்கு அதிகமாகத் தொண்டாற்ற முடியும் என்று அவர் கருத ஆரம்பித்துவிட்டாரா? இவையெல்லாம் இல்லையென்றால் வேறு என்ன? பவானியைப் பார்க்க வேண்டும் என்ற அடக்க முடியாத ஆசையா?'

  

இப்படி நினைத்ததுமே பவானிக்கு மேனியெங்கும் சிலிர்த்தது. அவளுடைய வாளிப்பான உடல் நெளிந்து புரண்டதில் படுக்கை விரிப்பு கசங்கியது. நாணத்தில் சிவந்த முகத்தை மறைத்துக் கொள்ள அவள் தலையணையைத் தஞ்சம் புகுந்தபோது அது படாதபாடு பட்டது!

  

அவள் மெல்ல மெல்ல முகத்தைத் திருப்பிக் கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த டிரெஸ்ஸிங் டேபிள் நிலைக் கண்ணாடியில் தன் முகத்தையும் முடிந்தவரை தன் உருவத்தையும் பெருமிதம் பொங்கப் பார்த்துக் கொண்டாள். "உமாகாந்த்! இத்தனை அழகும் உங்களுக்காகத்தான் காத்திருக்கிறது. சீக்கிரம் வாருங்கள். அள்ளிக் கொள்ளுங்கள்" என்று மிருதுவான குரலில் சொன்னாள்.

  

அவள் கரம் தயக்கத்துடனேயே நீண்டு டிரஸ்ஸிங் டேபிளின் சிறிய இழுப்பறை ஒன்றைத் திறந்தது. அதில் மேலாக இருந்த கைக்குட்டைகள், உள்ளாடைகளுக்கு அடியேயிருந்த ஓர் உறையைக் கள்ளத்தனமான பாவனையோடு வெளியே எடுத்தது. மெல்ல அதனைப் பிரித்த விரல்கள் உள்ளேயிருந்த ஒரு புகைப் படத்தைச் சிறிது சிறிதாக வெளியே உறுவின. அறையின் கதவு தாளிடப்பட்டிருக்கிறதா என்று நிச்சயப்படுத்திக் கொண்டு அப்புகைப்படத்தைத் தன் அதரங்களில் ஒற்றி எடுத்தாள், பவானி. பிறகு அதனை அப்படியே தன் நெஞ்சில் தவழவிட்டுக் கொண்டு தூங்கிப் போனாள்.

  

தூக்கத்திலே ஒரு விசித்திரமான கனவு கண்டாள், பவானி. அந்தக் கனவிலும் அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் அருகில் வந்து உமாகாந்தன் நின்று, "பவானி ! பவானி !" என்று அழைத்தான். அவள் எழுந்திருக்காதது கண்டு அவனுக்குக் கோபம் வந்தது. "ஹூம், உனக்காகத்தானே, உன் பிரிவாற்றாமையால்தானே நான் சிறையிலிருந்து தப்பி ஓடி வந்தேன். இப்படி என்னை அலட்சியம் பண்ணுகிறாயே! என்னை ஸி.ஐ.டி.க்கள் துரத்தி வருகிறார்கள். சீக்கிரம் எனக்கு அடைக்கலம் தந்து மறைத்து வைத்துக் காப்பாற்று. தூங்கியது போதும். விழித்தெழு !" என்றான்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.