(Reading time: 9 - 18 minutes)
Vata malli
Vata malli

Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 23 - சு. சமுத்திரம்

வாடா மல்லி, அத்தியாயம் - 23

  

ந்தச் சேரியின் சேரிக்குள், சராசரி நாளைவிடச் சுவையான நாள்.

  

சென்னையிலுள்ள அத்தனைப் பேட்டைகளிலிருந்தும் ‘அலி அலியான’ கூட்டம். பெரும்பாலானவர்கள் பட்டுச் சேலை கட்டியிருந்தார்கள். ‘கில்ட்டோ,’ ‘'கவரிங்கோ’ அல்லது தங்கமோ அத்தனை நகைகளும் கழுத்திலும் காதிலும் மின்னின. ஒரு பந்தல் கூடப் போடப்பட்டிருந்தது. அத்தனைபேரும், பேட்டை, பேட்டையாய் நின்று கொண்டிருந்தனர். பந்தலுக்கு அப்பால் மூன்று பெரிய கல் அடுப்பில் அண்டாச் சோறு கொதித்தது. அதேமாதிரியான சின்னக்கல் அடுப்பில் இன்னொரு ஈயப் பாத்திரத்தில் கோழியோ, ஆடோ குழம்பாகிக் கொண்டிருந்தது. அந்தச் சேரிப் பெண்களில் நிசமான பலரும், சமையலுக்கு ஒத்தாசை செய்தார்கள். காய்ந்துபோன வயிறுகளையும் ஒடுங்கிப்போன மார்பெலும்பையும் காட்டிய குழந்தைகளை அவர்களின் அம்மாக்கள், இழுத்துக் கொண்டு போனாலும், அலிச்சமூகம் விடவில்லை. தாய்களையும் குழந்தைகளையும் சேர்த்தே இழுத்தது.

  

அந்தப் பந்தலின் நடுப்பகுதி ஒரு ஓலைக்குடிசையின் வாசலுக்குமேல் உள்ள ஆகாயக் கூரையைத் தட்டி நின்றது. அந்தக் குடிசையின் சுவரோரத் திட்டில் முர்கேவாலி மாதாவின் படம். சாமுண்டீஸ்வரி, மாதிரியான தோற்றம். ஆனாலும், அம்மா சிங்கத்திற்குப் பதிலாக, சேவல் மீது சாய்ந்து நின்றாள். அந்தச் சேவல் கொண்டை பெருத்தும் சிவந்தும், வானவில் வண்ணக் கலப்பில் தோன்றியது. அதன் அலகில் ஒரு மூர்க்கத்தனம் - மாதாவின் கண்களைப்போல். அந்தக் கண்களில் கீழ்நோக்கிப் பாயும் ஒளிக்கற்றைகள் படத்துக்குள், மேலே ஒரு கோவில் படம். மாதாவின் பல கைகளில் ஒன்றில் திரிசூலம். இத்தனை லட்சணங்களும் கொண்ட அந்தப் புகைப்படத்தின் முன்னால் வாழையும் ஆரஞ்சும் மண்டிக் கிடந்தன. குத்துவிளக்கு தீபம் குதித்துக் குதித்து ஒளிர்ந்தது. ஊதுபத்திகள் ஊதாமலே சிவப்புக் குன்றி முத்துக்களைக் காட்டின.

  

அம்மாவின் படத்திற்கு முன்பு, பத்தாவது படிப்புக் காரியான பாத்திமா சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தாள். அவர்கள், வழக்கப்படி ஒரே பச்சை மயம், அவளின் புடவையும் பச்சை ஜாக்கெட்டும் பச்சை வளையல்களும் அப்படியே புருவ மையும் உதட்டுச் சாயமும், பச்சை பச்சை. நெற்றியிலும், பச்சை பிளாஸ்டிக் பொட்டு... எல்லாமே பச்சையாக, அவள் இலை தழைகளோடு கூடிய செடியில் சிவப்பு ரோஜாவாக ஜொலித்தாள்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.