(Reading time: 19 - 38 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

வழக்கம் போல கல்லூரி தொடங்கியதும், பாடங்கள் நடந்தன. நாங்களும் படிக்கத் தொடங்கினோம். மாணவர்கள் புதிய நண்பர்களைப் பெற்றுப் பழகினார்கள். புதிய பழக்க வழக்கங்களையும் கற்றுக்கொண்டார்கள். நன்மையும் பரவியது. தீமையும் பரவியது. என்னையும் மாலனையும் பொறுத்தவரையில், புதிய நட்பு ஒன்றும் ஏற்படவில்லை. புதியவர்களோடு பழகினாலும் உள்ளம் கலக்காமல் உதட்டளவில் பழகிவந்தோம். மாலனுக்கும் எனக்கும் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவனும் என்னை விடவில்லை. நானும் அவனை விடவில்லை. அவனிடம் மூடநம்பிக்கைகளும் அவற்றிற்குக் காரணமான தன்னலமும் மிகுதியாக இருந்தபோதிலும், கெட்ட பழக்கங்கள் ஒன்றும் இல்லை. படித்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் நிறைய இருந்தது. ஆகையால், புதியவர்களோடு பழகிப் பிறகு அந்தப் பழக்கத்தால் வருந்துவதைவிட, பழகிய பழைய நட்பே போதும் என்று இருந்துவிட்டேன். சில மாணவர்கள் தாமே நெருங்கி வந்து பழகினார்கள். சீர்திருத்தமான கருத்து உடையவர்கள் சிலர் பழகினார்கள். கல்வியில் ஊக்கம் மிகுந்தவர்கள் சிலர் முன்வந்து பழகினார்கள். பொது அறிவு நிரம்பியவர்கள் சிலர் நெருங்கிப் பழகினார்கள். அவர்களுடைய சீர்திருத்தமும் கல்வித்திறனும் பொது அறிவும் எனக்குப் பிடித்திருந்தன. ஆனால் சில நாள் நெருங்கிப் பழகியபோது, எனக்குப் பிடிக்காத சில பழக்கங்களும் கொள்கைகளும் அவர்களிடம் இருந்ததை உணர்ந்தேன். அந்த அளவிற்கு மேல் நட்பு வளராதபடி பழக்கத்தை வரையறைப் படுத்திக் கொண்டேன். இப்படித்தான் எல்லாரும் குணமும் குற்றமும் கலந்தவர்களாக இருப்பார்கள் என்று புதியவர்கள் யாரோடும் நெருங்கிப் பழகாமல் காத்துக் கொண்டேன். மாலனுடன் மட்டும் மனம் கலந்து பழகி வந்தேன். அவனுடைய குறைகள் எனக்கு நன்றாகத் தெரியும். தெரிந்த குறைகள் அவ்வளவாகத் தீமை செய்வதில்லை. பழகிய வழியில் உள்ள மேடும் பள்ளமும் கல்லும் முள்ளும் நமக்குத் தீமை செய்வதில்லை. பழகாத வழியில் உள்ள குறைகள்தான் தீமை செய்கின்றன. மாலனும் எப்படியோ என்னிடம் மட்டுமே நெருங்கிப் பழகிவந்தான். என்னுடைய முற்போக்குக் கொள்கைகளும் அவனுடைய மூடநம்பிக்கைகளும் முரண்பட்டன. என்னுடைய இரக்க உணர்ச்சியும் அவனுடைய தன்னல முயற்சியும் மாறுபட்டன. ஆனால் எப்படியோ என் நெஞ்சமும் அவன் நெஞ்சமும் உறவு கொண்டன.

  

சந்திரனைப் பற்றிய நினைவு எனக்கு அடிக்கடி வந்தது. நன்றியுணர்ச்சியோடு அவனைப் பற்றி நினைந்து நினைந்து வருந்தினேன். என் உள்ளத்தின் வருத்தத்தை மாலனிடம் தவிர வேறு யாரிடம் வெளிப்படுத்தி ஆறுதல் பெறமுடியும். அவனிடம் சொல்வேன். அவனோ, கவலைப்படாமல் இருப்பான். அவனுடைய போக்கு எனக்குப் பிடிக்கவில்லை. முதலில்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.