குடும்பமே சீர்குலைந்து போனதைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். கடிதத்தைப் படித்தபோது என் நெஞ்சம் உருகியது; கண்கள் கலங்கின.
சிறிது நேரத்தில் மாலன் என்னை நோக்கி வந்தான். வந்ததும், என் மேசைமேல் இருந்த குறிப்புகளைப் புரட்டிப் பார்த்துவிட்டு, "உனக்குத் திருவுளச் சீட்டில் நம்பிக்கை இருக்கிறதா?" என்றான்.
"இல்லை" என்றேன்.
"எனக்கு நம்பிக்கை இருக்கிறது."
"உனக்கு இருக்கும் நம்பிக்கைகளுக்குக் கணக்கே இல்லை."
"உனக்கு ஒரு நம்பிக்கையும் இல்லையா?"
"உண்டு. கடவுளிடத்திலும் கடவுளின் சட்டமாகிய அறத்திலும் நம்பிக்கை உண்டு. அடுத்தபடியாக, என்னிடத்தில் நம்பிக்கை உண்டு. உன்னிடத்தில் நம்பிக்கை உண்டு. உலகத்தில்..."
"போதும்! இந்த நம்பிக்கை எல்லாம் இருந்து பயன் என்ன?"
"இன்னும் என்ன நம்பிக்கை வேண்டும்? லாட்டரி சீட்டில், கோழிப் பந்தயத்தில், குதிரைப் பந்தயத்தில் என்று இப்படி நம்பிக்கைகள் வேண்டும்?"
"ஆமாம் அவைகளும் நம்பிக்கைகள் தான்."
மாலன் அவ்வாறு கூறியதும் எனக்குத் திடுக்கிட்டது. "இப்படிப்பட்ட குடிகெடுக்கும் பாழும் நம்பிக்கைகளைவிட மந்திரக்காரர் சோதிடக்காரர் முதலியவர்கள் ஊட்டும் மூடநம்பிக்கைகளே மேல்" என்றேன்.
"ஒன்று சொல்கிறேன்" என்று பொறுமையோடு உபதேசம் செய்பவன் போல் தொடங்கினான்.