பாக்கிய அம்மையாரின் குரலில் இரக்கம் புலப்பட்டது. "என்ன செய்வது அம்மா! அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது. அப்படி நடந்தால் நல்லது என்றுதான் சொல்வேன். ஆனால் நீ இங்கே குழந்தை போல் செல்வமாக வளர்ந்துவிட்டாய். உன் மனத்துக்கு எல்லாம் புதுமையாக இருக்கும். பயப்படாதே, கவலை வேண்டா. முதலில் அவர் சொன்னபடியே நட, எதிர்த்துப் பேசாதே, உன்மேல் அன்பு வளரட்டும்; நாளடைவில் உன்மேல் அவருக்கே இரக்கம் ஏற்பட்டு விடும். ஆனால் அதுவரையில் பொறுக்க வேண்டும். பொறுப்பது துன்பமாகத்தான் இருக்கும். ஆனாலும் பொறு" என்றார்.
"அவர் நெஞ்சம் கல் நெஞ்சம்; அவருக்கு இரக்கம் வரும் என்று எனக்குத் தோன்றவில்லை."
"அப்படிச் சொல்லாதே மணிமேகலை; அம்மாவிடம் முதல் முதலில் அப்பா எப்படி இருந்திருக்கிறார் தெரியுமா? இன்றைக்கு எப்படி இருக்கிறார்? அம்மாவுக்கு காய்ச்சல் என்றால் மளிகைக் கடையை விட்டு நான்கு முறை வந்து பார்க்கிறார். யாருக்குமே நாளடைவில்தான் அன்பும் இரக்கமும் வளரும். நீ மட்டும் கொஞ்சம் பொறுமையைக் கற்றுக் கொள்ள வேண்டும். பொறுமையும் விட்டுக் கொடுத்தலும் இல்லாவிட்டால் ஒரு பயனும் இல்லை. காதல் காதல் என்று ஒரே நிலையில் நின்று திருமணம் செய்து கொள்கிறார்களே, அவர்களுக்கும் இந்தப் பொறுமையும் வேண்டும் விட்டுக் கொடுத்தலும் வேண்டும். நம் ஊரிலேயே பார், அந்த நெல்மண்டிக்காரர் பிள்ளை எதிர்வீட்டுப் பெண்ணோடு பழகிக் காதல் ஏற்பட்டு மணம் செய்து கொண்டான். ஊரெல்லாம் தெரியும். இப்போது அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறதாம் தெரியுமா? அந்த வீட்டு வேலைக்காரி ஒரு நாள் இங்கு வந்திருந்தபோது சொன்னாள். எலியும் பூனையுமாக இருக்கிறார்களாம். வேறு வழி இல்லை என்று இப்போது வாழ்கிறார்கள். காதல் ஒரு வகை ஆசை. அது வெறிபோல் வளரும்போது குற்றங்களே தெரிவதில்லை. அது தணியும்போது மற்றக் குடும்பங்களின் நிலை வந்து விடுகிறது. அப்போது பண்புகள் இருந்தால்தான் வாழமுடியும். இல்லையானால் வாழ்வு இல்லை. ஆகவே முதலிலே அன்பு இல்லை, இரக்கம் இல்லை என்று நீ கவலைப்படாதே. நம்பிக்கையோடு நான் சொல்வதைக்கேள். எந்த ஆண்களை நம்பக்கூடாது தெரியுமா? தன்னலம் மிகுந்தவர்களைத் தான் நம்பக்கூடாது. அவர்கள் இன்றைக்கு அன்போடு நடப்பதுபோல் இருக்கும். நாளைக்கு கைவிட்டு விடுவார்கள். உன் கணவர் கொள்கை உடையவர்; ஒரு நெறியை நம்புகிறவர்; சொல்கிறபடி நடக்கிறவர். ஆகையால் நீ அவரை நம்பலாம். உனக்கு ஒரு வழி அவருக்கு ஒரு