(Reading time: 29 - 57 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

யாரோ ஒருவர் கொட்டாவி விட்டது கேட்டது. என் மனைவியாகத்தான் இருக்கும் என்று எண்ணினேன். அவளுடைய மூளை இந்த அறிவுரையின் சுமை தாங்காமல் சோர்ந்து போயிருக்கும் என எண்ணி எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

  

"என்ன, தூக்கம் வருகிறதா கண்ணி!" என்றார் பாக்கியம்.

  

"போய்த் தூங்கு அண்ணி" என்றாள் தங்கை.

  

"துக்கம் இல்லை. நீங்கள் பேசுவதைக் கேட்டால் எனக்குப் பயமாக இருக்கிறது! வாழ்க்கை இவ்வளவு தொல்லையாக இருக்கிறதே!" என்றாள் மனைவி.

  

பாக்கியம் சிரித்தபடியே பேச்சுத் தொடங்கினார்: "பயமாகவா இருக்கிறது? நீ இப்போது படிக்கிற நூல்களை விடாமல் படித்துக் கொண்டு வா! இன்னும் ஆறு மாதத்தில் பயம் இருக்கிறதா, என்று பார். மணிமேகலைக்கு இப்படிச் சொல்லி சொல்லிப் படிக்க வைத்ததனால்தான், இப்போது ஏதாவது சொன்னால் கேட்டுக் கொள்கிறாள்; சொல்வது விளங்குகிறது. நீயும் படி, உனக்கும் தெளிவு வரும்; பயமே இருக்காது" என்றார். சிறிது நேரம் அமைதி நிலவியது. பேச்சு முடிந்ததோ என்று எழ எண்ணினேன். மறுபடியும் அவரே பேசினார்: "பயமே இல்லாமல் இருக்கலாம். சுருக்கமான வழி சொல்லட்டுமா? இங்கிருந்து வேலூர்க்குப் போகணும். நீ தனியே போனால் எவ்வளவு பயம், கவலை! உன் அப்பாவுடன் போகிறாய் என்று வைத்துக் கொள். அப்போது பயம் உண்டா? கவலை உண்டா? அப்பா போகிற வழியில், அவர் பின்னே அடிவைத்து நடந்துகொண்டே இருக்கிறாய். வழியைப் பற்றியும் சிந்திப்பதில்லை. வழியில் கல்லும் முள்ளும் உண்டா என்றும் பார்ப்பதில்லை. திருடர்கள் வந்து அப்பாவை அடித்தால் என்ன செய்வது என்றும் எண்ணிப் பார்ப்பதில்லை. எல்லாம் அப்பாவின் பொறுப்பு. அவர் நடக்கிறார். அவர் பின்னே நீ நடக்கிறாய் அவ்வளவுதான். இல்வாழ்க்கையில் அப்படி நடக்கிற பெண்களுக்கு ஒரு கவலையும் இல்லை; போராட்டமும் இல்லை. கணவர் நல்லவராக, வாழ வல்லவராக வாய்த்துவிட்டால் போதும்! மனைவி மூளைக்கே வேலை கொடுக்காமல் கண்ணை மூடிக்கொண்டு அவரைப் பின்பற்றி நடக்கலாம். அப்போது பட்டு வேண்டுமா வேண்டாவா, வைரம் வேண்டுமா வேண்டாவா, திருவிழாவுக்குப் போவதா இல்லையா, சினிமாவுக்குப் போவதா இல்லையா என்று எந்தச் சிந்தனையும் இல்லாமல் வாழ்க்கை நடத்தலாம். அவர் அழைத்தால் போவது, இல்லையானால் அமைதியாய் வீட்டில் இருப்பது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.