ஆனால் இது எல்லோராலும் முடியாது. இப்படி வாழ்வதற்கு எவ்வளவோ பண்பாடு வேண்டும்! எவ்வளவோ தியாக மனப்பான்மை வேண்டும். தனக்கு என்று ஒரு சிறு ஆசையும் இல்லாமல் அற்றுப்போன மனநிலை யாருக்கு வரும்? கண்ணகியிடத்தில் பார்த்தோம்! கஸ்தூரிபாவிடத்தில் பார்த்தேன். வேறு யாரிடத்தில் பார்க்கிறோம்" என்றார்.
"படிக்காத பெண்கள், பயங்காளிப் பெண்கள் அப்படி அடங்கி நடக்கலாம். அண்ணியைப் போல் பத்தாவது படித்த பெண் அப்படி ஏன் அடங்கி நடக்கவேண்டும்?" என்றாள் மனைவி.
"பயந்து அடங்கி நடப்பது வேறே. அது தியாகம் அல்ல. அப்படிப் படிக்காத பெண்கள் பயந்து நடப்பதும் காணோமே! கணவன் இல்லாதபோது விருப்பம் போல் நடக்கிறார்கள்! அந்த வாழ்க்கையில் உண்மை இல்லையே! அது ஏமாற்றுகிற வாழ்க்கை, உள்ளத் தூய்மை இல்லாத வாழ்க்கை! போலி வாழ்க்கை! கணவனுக்குத் தெரியாமல் குழந்தைக்கு மந்திர தந்திரங்கள் செய்வது, காட்டேறி பூசை போடுவது, கணவனுக்கு தெரியாமல் சிறுவாணம் பிடித்து வட்டிக்குக் கொடுப்பது, இவைகள் போன்ற உண்மை இல்லாத வாழ்க்கை அது. அதனால் ஒரு பயனும் இருக்காது" என்றார் பாக்கியம். மறுபடியும் அவரே "மணிமேகலை! பெண்களில் மட்டும் அல்ல, அரசியல் தலைவர்களில் பலர் அப்படி இருக்கிறார்கள்; தாங்களாக ஒரு வழி தேடிக்கொள்ளாமல், தங்கள் தலைவர் ஒருவர் காட்டிய வழியில் கண்ணை மூடி நடப்பார்கள். அதனால் அவர்களுக்குக் கவலை குறைகிறது; ஒரு குறையும் இல்லாமல் தொண்டு செய்யவும் முடிகிறது" என்றார்.
"ஆமாம்" என்றாள் தங்கை, தொடர்ந்து "சினிமாவுக்கு அடிக்கடி போய்க் காசு செலவழிக்க நமக்கு வசதி இல்லை என்கிறார். சரி என்று நானும் அதைக் குறைத்துக் கொண்டேன். குடும்பக் கடமைகள் பல இருக்கும்போது, சடங்குகளிலும் பூசையிலும் மணிக்கணக்காச் செலவழிக்காதே என்கிறார். ஓய்விருக்கும்போது பக்திப் பாட்டுக்களைப் படித்தால் போதும் என்கிறார். வெள்ளிக்கிழமைப் பூசையையும் குறைத்துக் கொண்டேன்" என்றாள்.
"வீடு வாயில் முதலியவற்றைத் தூய்மையாக்குவதற்கு வெள்ளிக்கிழமை ஒரு நல்ல நாள்" என்றார் பாக்கியம்.
"அதை எல்லாம் அவர் தடுக்கவில்லை. தூய்மையை அவர் மிக விரும்புவார்" என்றாள் தங்கை.