அப்போது தங்கையின் பேச்சுப் போக்கைக் கேட்டால் கணவர் மேல் ஒரு குற்றமும் காணாதவள் பேசுவதுபோல் இருந்தது.
பாக்கியம் தவிர வேறு பெண்களிடம் என் தங்கை அகப்பட்டிருந்தால், மேலும் மேலும் தூபம் இட்டு வெறுப்பையே வளர்த்து அவளுடைய மனத்தைக் கெடுத்து வாழ்க்கையைப் பாழ்படுத்தியிருப்பார்களே என்று எண்ணினேன். தங்கைக்கும் மனைவிக்கும் பாக்கியத்தின் பழக்கம் வாய்த்தது எவ்வளவு நன்மை என்று எண்ணி மகிழ்ந்தேன்.
தங்கையும் கயற்கண்ணியும் சந்திரனுடைய தங்கை கற்பகமும் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் சிறுமியராக இருந்தபோது, ஒன்றாகக் கூடி ஆடிக் குலாவியது நினைவுக்கு வந்தது. பாக்கியத்தின் அறிவின் பயனை இவர்கள் இருவரும் பெறும்போது, கற்பகமும் பெறுவதற்கில்லையே என்று வருந்தினேன்.
மறுநாள் காலையில் பல் துலக்கியதும், தோட்டத்தின் பக்கம் சென்றேன். அங்கே பாக்கியம் அமைதியாக படித்துக் கொண்டிருந்ததையும் ஒரு குறிப்பில் எழுதிக் கொண்டிருந்ததையும் கண்டு பேசாமல் திரும்பினேன். பாத்திரம் துலக்குதல் முதலிய எல்லாக் கடமைகளையும் முடித்து அவ்வளவு காலையில் படிக்க ஓய்வு கிடைத்து விட்டதே என்று எண்ணினேன். கூடத்தில் புத்தக அலமாரியைத் திறந்து பார்த்தேன். முதலில் கிடைத்தது தாயுமானவர் பாடல். அதில் அங்கங்கே ஓரத்தில் கோடிட்டிருந்ததைக் கண்டேன். திருக்குறளிலும் அவ்வாறே கண்டேன். அப்போது தங்கை வந்து, "என்ன அண்ணா பார்க்கிறீர்கள்?" என்றாள்.
"இந்தப் புத்தகங்களில் ஏன் இப்படிக் கோடு போட்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.
"நான் போட்ட கோடுகள் அல்ல, அக்கா போட்டார்கள். கோடு போட்ட பகுதிகளைத் திரும்பத் திரும்பப் படித்து மனப்பாடம் செய்ய வேண்டும் என்று சொல்லி அப்படிச் செய்திருக்கிறார்கள்" என்றாள்.
தங்கை போய்விட்ட பிறகு அங்கே இருந்த வேறு நூல்களையும் புரட்டிப் பார்த்தேன். அருட்பாவும் கைவல்லியமும் பார்த்தேன். இராமதீர்த்தரின் அறவுரைகள் என்று ஒரு நூல் பார்த்தேன். இப்படி ஒரு நூல் பார்த்ததே இல்லையே. கேள்விப்பட்டதும் இல்லையே என்று சில வரிகள் படித்தேன். உயர்ந்த கருத்துகள் இருந்தன. சிலப்பதிகாரக்கதை, மணிமேகலை வசனம்