வழி என்று நடந்தால், அப்படிப்பட்ட ஆளை நம்பக்கூடாது. சில ஆண்கள் வீட்டிலேயே சிக்கனம் பிடிக்கச் சொல்லி வெளியே சீட்டு ஆடிக் காசைத் தொலைப்பார்கள். மனைவி மக்கள் வெறுஞ்சோறு உண்ணச் செய்து தாம் மட்டும் ஓட்டலில் சுவையாகத் தின்பார்கள். மனைவி மக்களை வீட்டில் ஏமாற்றிவிட்டுத் தாம் மட்டும் நாடகமும் சினிமாவும் விடாமல் பார்ப்பார்கள். மனைவி மக்களுக்குக் கந்தை போதும் என்று விட்டு விட்டுத் தாம் மட்டும் அலமாரியிலிருந்து மடிப்பு மடிப்பாக எடுத்து உடுத்திக்கொண்டு ஊர் சுற்றுவார்கள். அப்படிப்பட்டவர்களைத்தான் நம்பக்கூடாது. அவர்களுக்கு ஒரு நாளும் உண்மையான அன்பு ஏற்படாது. உயிரையே விடுவது போல் உருகி உருகிப் பேசினாலும் அவர்களை நம்ப முடியாது; நம்பக்கூடாது. உன் கணவர் அப்படிப்பட்டவரா, மணிமேகலை! உனக்குப் பட்டு வேண்டா என்று சொல்லிவிட்டு அவர் மட்டும் ஆடம்பரமாகத் திரிகிறாரா? திருமணத்தின்போதே அவர் வெள்ளைக் கதர் தவிர வேறு உடுத்தவில்லையே. அப்பா போட்ட மோதிரத்தையும் மறுநாளே கழற்றி உன் கையில் கொடுத்துவிட்டார் என்று சொன்னாயே. பட்டாசை பொன்னாசை இல்லாமல் அவர் தம் மனத்தைப் பயன்படுத்திக் கொண்டார். நீயும் அப்படி ஆகிவிட்டால், வாழ்க்கை கவலை இல்லாததாக இருக்கும் என்று நம்புகிறார். அது உண்மைதான். காந்தியடிகள் பெரிய பெரிய போராட்டம் எல்லாம் நடத்தியும் கவலை இல்லாமல் இருப்பதற்கு அதுதானே காரணம்? கஸ்தூரிபாவின் வாழ்க்கை எவ்வளவு உயர்ந்த வாழ்க்கை! அவ்வளவு தொலைவு உன்னால் நடக்கமுடியாதிருக்கலாம். இருந்தாலும், அந்த வழி நல்ல வழி, நேர் வழி, கவலையற்ற வழி, துணிவான வழி, வீரர் நடக்கும் வழி. அதனால்தான் சத்தியசோதனை படி படி என்று உனக்குப் பலமுறை சொன்னேன். நீ அக்கறையோடு படிக்கவில்லை. அன்று காலையில் தாயுமானவர் பாடலில் ஒரு பாட்டுப் படித்து அப்படியே மனம் உருகிவிட்டது. 'ஓடும் செம்பொன்னும் ஒன்றாகக் கண்டவர்கள், நாடும் பொருளான நட்பே பராபரமே.' அந்த நிலை எவ்வளவு பெரிய நிலை! நாம் அவ்வளவு தொலைவுக்குப் போகவேண்டா. ஆடம்பரத்தில் ஆசை குறைந்தால் போதுமே. உடனே எனக்குத் திருக்குறள் நினைவுக்கு வந்தது. "வேண்டாமை அன்ன விழுச் செல்வம் வேண்டின் உண்டாகத் துறக்க." மனப்பாடம் செய்தாயே, நினைவு இருக்கிறதா? இனிமேல் கொஞ்சம் ஆழ்ந்து படி. மற்றப் பெண்கள் மதிப்பதைப் பற்றிக் கவலைப்படாதே. நீ அவர்களை விட மகிழ்ச்சியாக வாழமுடியும் என்று வாழ்ந்து காட்டு. அதுவே பெரிய செல்வம்!"
பாக்கியம் பேச்சைக் கேட்டதும், என்னால் படுக்கையில் அமைதியாக இருக்க முடியவில்லை. எழுந்து உட்கார்ந்தால் அதனால் அவர்களின் பேச்சு நின்று விடுமே என்று எண்ணி மறுபடியும் அப்படியே கிடந்தேன். சில புத்தகங்களையும் சில இதழ்களையும் படித்துவிட்டு அந்த