அம்மையார் எப்படி இவ்வளவு விரைவில் அறிவை வளர்த்துக்கொள்ள முடிந்ததோ என்று வியந்தேன். கல்லூரியிலும் பல நூல்களைப் படித்தேன். அறிவை வளர்த்துக்கொண்டேன். ஆனாலும் இவ்வளவு தெளிவு ஏற்படவில்லையே என்று உணர்ந்தேன். சிலர் நூல்களைப் படிப்பதால் மூளையில் இன்னும் கொஞ்சம் சரக்குச் சேர்த்துக் கொள்கிறார்கள். என் நிலைமை அப்படித்தான் இருந்தது. என் நிலை மட்டும் அல்ல. பெரும்பாலும் நிலை அதுதான். அதனால்தான் படிப்பு என்பது ஒரு சுமையாகத் தோன்றுகிறது. பாக்கிய அம்மையார் படித்த புத்தகங்களின் கருத்துக்களை உணர்ந்தார்; தெளிவு பெற்றார். எங்கள் கல்விச் சுமை, உடம்பில் தோன்றும் தொந்தியும் வீண் தசைகளும் கட்டிகளும் போன்றது. பாக்கியத்தின் அறிவு வளர்ச்சி, உடம்பின் இயற்கையான வளர்ச்சி போன்றது. இயற்கையான வளர்ச்சியில் எவ்வளவு எடை மிகுந்தாலும் சுமையாகத் தோன்றுவதில்லை; உடம்புக்கு ஊக்கமாகவும் வலுவாகவுமே தோன்றும். ஆனால் செயற்கையான சிறு கட்டியும் உடம்புக்கு வேண்டாத துன்பமாகத்தான் தோன்றுகிறது. பாக்கியத்தின் அத்தகைய அறிவு வளர்ச்சி இவ்வளவு குறைந்த காலத்தில் ஏற்பட்டதை எண்ணி எண்ணி வியப்படைந்தேன். கணவரைப் பற்றிக் குறை கூறிய தங்கையின் உள்ளம் இரும்பாக இருந்தது. வேறு எந்தப் பெண்ணிடமாவது தங்கை அவ்வாறு கணவரின் குறையைச் சொல்லியிருந்தால், அந்த இரும்பு நெஞ்சம் துருபிடித்துக் கெடுமாறு செய்திருப்பார். என்னிடம் சொல்லியிருந்தாலும், கணவர்மேல் மேலும் வெறுப்பு வளருமாறுதான் செய்திருப்பேன். பாக்கியம் அந்த இரும்பைப் பொன்னாகுமாறு செய்துவிட்டாரே என வியந்தேன். அடுத்துத் தங்கை பேசிய பேச்சிலிருந்து அந்த இரசவாத வித்தை நடைபெற்றுவிட்டதை அறிந்தேன்.
"நீ சொல்வது சரி அக்கா. அவர் கெட்டவர் அல்ல. ஆனால் நாம் மற்றப் பெண்களோடு பழகாமல் இருக்க முடியுமா? திருமணங்களுக்குப் போகாமல் இருக்க முடியுமா?" என்றாள் தங்கை.
"பழகு, போ. ஆனால் நான் ஏழை என்ற தாழ்வு மனப்பான்மையோடு சிறுமை மனப்பான்மையோடு போகாதே. நான் எளிய வாழ்க்கை வாழவல்ல உயர்ந்த பெண் என்று பெருமிதமாக எண்ணிக் கொண்டு போ. கண்ணகி, மணிமேகலை, குயூரியம்மையார், கஸ்தூரிபா முதலான உத்தமப் பெண்களின் நெறியைப் உணர்ந்துவிட்டவள் என்ற உயர்வு மனப்பான்மையோடு போ. அப்படிப்போய்ப் பழகினால் ஒரு நாளும் நம் மனம் ஏக்கம் அடையாதே" என்றார் பாக்கியம்.