பட்டப்பா வேறு தினுசாகப் புரிந்து கொண்டான்.
"ஏன் அழறே! உனக்குத்தான் பூரண சுதந்திரம் குடுத்திருக்கேனே. நான் பண்ணின பாவத்துக்குப் பரிஹாரம் பண்ண வேண்டாமோ."
"நீங்க நினைக்கிற மாதிரி இல்லை..." அவள் அழுதாள்.
"இருந்தாத் தான் என்ன மோசம்? ஏனிப்படி போராடிக் கொண்டே இருக்கே?"
அன்று இருவரும் சாப்பிடவில்லை. இரவு வெகுநேரம் பட்டப்பா யோசித்துக் கொண்டிருந்தான். நர்மதாவின் உள்ளத்தில் அவ்வப்போது எழும் சலனங்களை அவள் மாய்த்துக்கொண்டு இப்படிப் போலியாக வாழ்வதுபோல் தோன்றியது. அந்தப் பெண்ணை இப்படி மாய விடுவது மகத்தான துரோகமாகத் தோன்றியது அவனுக்கு.
கோர்ட், விவாகரத்து இதற்கெல்லாம் அவள் ஒத்துக் கொள்ளக் கூடியவள் இல்லை. என்ன பண்ணலாம்?
அவளுடைய வாழ்க்கையிலிருந்து தான் விலகிப் போய் விட வேண்டும். கொஞ்ச நாட்களாகவே தனக்கு தூக்கம் வருவதில்லை. மனம் சோர்ந்து போகிறது. எதிலும் பிடித்தமில்லாமல் இருக்கிறது. நர்மதாவைப் பார்த்தால் கூடப் பிடிக் கவில்லை.
கடிதம் எழுதி வைத்து விட்டு எங்கேயாவது போய் விடலாமா? எங்கே போவது? இந்த எண்ணங்களே தன்னை எங்கே போனாலும் துரத்திக்கொண்டு வருமே! அவள் அவனுடன் இருந்து கொண்டிருக்கிறாளே தவிர, அவள் மனதில் அவனுக்கு இடமில்லை. சமூக நியதிக்காக இப்படி ஒரு நெருப்பில் அவள் வெந்து கொண்டிருக்கிறாள்.
நாலைந்து வருஷங்களுக்கு முன் அவர்களுடைய முதல் இரவில் அவளிடம் கொடுத்த கடிதம் நினைவுக்கு வந்தது. இன்று மறுபடியும் கடிதம் எழுதினான். மறுபடியும் கிழித்துப் போட்டான்.