"சாந்தி, சாந்தியில்லாமல் முனங்கிக்கொண்டே அந்தக் கதவை, வீறிட்டுக் கத்தும்படி இழுத்தபடியே திறந்தாள். சரோசாவோ சொந்த வீட்டுக்குள் நுழைவது போல, உள்ளே போனாள். துரையையும், பெரிய வீடாகிப் போன அவன் சின்ன வீட்டையும் ஒருக்களித்துப் பார்த்துவிட்டு, அவர்கள் நின்ற வரவேற்பு அறையைத் தாண்டி, இரண்டாகப் பிரிந்த ஒரு கிளை அறைக்குள் போனாள். வயிற்றில் ரப்பர் கயிற்றால் கட்டியிருந்த கால்பந்து பிளாடரை எடுத்து, அங்கிருந்த ஒரு மேஜையில் வைத்தாள். இதனால், பின்பக்கம் ரப்பர் கயிற்றின் பிடி தளர்ந்தது. பிட்டத்தில் பொருத்தப்பட்ட இன்னொரு பிளாடர் கீழே விழப்போனது. சரோசா அதைத் தாங்கிப் பிடித்துக் கொண்டாள். பிறகு அதை மேஜை தொட்டிலில் கிடத்தினாள். இப்படி தனக்குத்தானே பிரசவம் பார்த்துக் கொண்டு, ஜாக்கெட்டை இழுத்துவிட்டு சுருங்கிப்போன பாவாடையை கால்வரைக்கும் பரப்பிவிட்டுக் கொண்டு, புடவையை கட்டினாள்.
சரோசா, பட்டறிவால் பேசினாள் :
"இனிமே ரூட்ட மாத்தணுமுண்ணா! பஸ்சுல ஏறப்போ ஏறுக்கு மாறா பார்க்கிறாங்க. நாவலூர் பக்கமும் ஒரே ரெய்டு. இரண்டு மணிநேரம் காத்திருந்தேன். ஸ்பாட்டுக்கு வராண்டாம்னு மணி சொல்லிட்டான். சவுக்குத் தோப்புக்குள்ள போகச் சொன்னான். அங்க வந்து சரக்கக் கொடுத்தான்.”
"நீ சொல்றதும் சரிதான். இனிமே கடல்வழியா சரக்கக் கொண்டு வரணும். கர்ப்பிணிப் பொண்ணுவேடம் இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சிப்போச்சு.'
"எனக்கு பயம்மா கீதுண்ணா... போலீஸ்ல அவ்வளவு ஒத தின்ன பொறகு வாய்க்கையே வெறுத்திட்டு. பழையபடி மாட்டிக்கிட்டா ஒடம்பு தாங்காதுண்ணா.”
“தொழிலுல இதெல்லாம் சகசம்மே.”
துரைக்கு, நாற்பது வயதிருக்கும். கறுப்பு என்றாலும், காக்கா பொன்கறுப்பு, துருத்திய வயிறு என்றாலும் அதைத் தூக்கி நிறுத்தும் உறுதியான மார்பெலும்பு, சரோசாவின் வயிறு மேலே பிரசவித்த சரக்குகளை கரங்களில் ஏந்தி முன் நடந்தான். சரோசா, அவன் பின்னாலேயே போய்க் கொண்டிருந்தாள். ஆறுதலுக்காகக் கூட ஒரு வார்த்தை சொல்லாமல், தொழில்