Flexi Classics தொடர்கதை - தாழம்பூ - 14 - சு. சமுத்திரம்
அந்தப் பந்தல் மாளிகையிலிருந்து வெளியேறப் போன இரண்டு கிங்கரர்களும் உடம்பை குழைவாக்கிக் கொண்டே குழையடித்தார்கள். “வாங்கண்ணே வாங்கண்ணே” என்று பரபரப்பான குரலோடு, கண்ணுதவி இல்லாமலே பின்னோக்கி நடந்தார்கள். உள்ளே வந்தவர், அந்த மணல் பரப்பில் வளையம் போட்டுக் கிடந்தவர்களை நோட்டமிட்டார். கருவாடும், கிளாசுமாக இருந்த அவர்கள், அவரை கண்டுக்கவில்லை. ஒரேயொருத்தர் நாலு கிளாசுகளை உள்ளே தள்ளியபிறகு ஞானத்தின் உச்சநிலையில் இருந்தார். பரம சாதுவாகத் தோன்றிய அவர், அந்தப் புதிய மனிதரைப் பார்த்து ஆசீர்வாதம் செய்ய கையை தூக்கியபோது, துரை அந்த கைக்குள் இன்னொரு கிளாசை வைத்தான்.
உள்ளே வந்தவருக்கு, ஐம்பது வயதிருக்கலாம். முகம் காய்ப்புக் காய்ப்பாயிருந்தது. தலை பம்மைபோல் தோன்றியது. ஆசாமி கொஞ்சம் குள்ளம்; ஆனாலும் அழுத்தமான உடம்பு. பழுத்த மஞ்சள் நிறத்தில் சபாரி உடை. தலைமட்டும் கொக்கு மாதிரி துண்டாகத் தெரிந்தது. ஆக்கல் (ஊரல்), காத்தல் (காய்ச்சல்) அழித்தல் (விற்றல்) ஆகிய முப்பெரும் தொழில்களைச் செய்யும் மூர்த்திமும். ஒருகாலத்தில் பைசாக்களுக்காக ஏங்கியவரை, இப்போது லட்சங்கள் ஏக்கமாய் பார்க்கின்றன. பேங்கில் உள்ள லாக்கர்கள் ராமனுக்குக் காத்திருந்த அகலிகை போல் காத்திருக்கின்றன. விருகம்- பாக்கத்திற்கு அப்பால் உள்ள காட்டுப் புதர்களில் தலைகளை மட்டும் காட்டிக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பானைகளையும், மகாபலிபுரம் சாலைகளில் மயானப்பகுதிகளில் காய்ச்சும் பானைகளையும், நகரம் எங்கும் நடமாடும் வேன்களையும் ஆதிக்கம் செய்பவர். ஆனாலும், அவரிடம் சில நல்ல குணங்கள் உண்டு. குடிக்க வைப்பாரே தவிர, அடிக்கமாட்டார். அடைக்கலம் என்று வந்தவர்களைக் காட்டிக் கொடுக்க மாட்டார். இப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள். பார்ப்பதற்கு மனிதர் பரமசாது. கேட்பதற்கோ இனிமையான குரல்... பழகுவதற்கு சர்வகட்சி மனிதர். அவரிடம் நன்கொடை வாங்காத கட்சிகளோ, பிரமுகர்களோ இல்லை என்று சொல்லலாம்.
சரோசா, ஏதோ பேசப்போனபோது, துரை அவள் வாயை தன்கழுத்தால் மறைத்தபடி, "வாங்கண்ணே, உள்ளே வாங்கண்ணே! நாய் மாதிரி ஓடிவர நானிருக்கப்போ... நீங்க எதுக்கண்ணே இங்க வந்தீங்க” என்று அசல் நாய்மாதிரி பிட்டத்தை ஆட்டிக்கொண்டு, அவரை நெருங்கிப் போனான். அந்த மனிதர்“ஏன் நான் இங்க வரப்பிடாதுங்கிறீயா” என்று சொல்லி விட்டுச் சிரித்தார். கடிகார தங்கச் செயினையும், அதற்கு இணையாகக் கட்டியிருந்த ஒரு தாயத்தையும் தடவி விட்டுக்கொண்டார்.