தாளலண்ணே. அண்ணன் கம்பெனியில சரக்க எடுத்துக்கிட்டு பஸ்சுல கர்ப்பிணியா சிங்காரிச்சுட்டு வந்தேன்னா, இவன் என்னடான்னா மோட்டர் பைக்கில பாலோ பண்றான். இப்பகூட மெயின் ரோட்ல நிக்கானாம். எனக்கு பயமா இருக்குண்ணே. பழையபடியும் உள்ளே போயிட்டா அப்பால நயினா கதி?"
துரை, சரோசாயை அண்ணன் போனபிறகு தாளிக்க வேண்டும் என்று உடனடியாகத் தீர்மானித்தான். ஆனால், சரோசாவோ கண்கள் துருத்தி நிற்க, லேசாய் விம்மப்போனாள். அதற்குள் அண்ணன், அவள் தலையை தடவியபோது, அவளுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்பட்டது. அவரும், அங்கே நின்ற அம்மைத்தழும்பனை அதட்டினார்:
"ஏண்டா டேய், வெள்ளையா! நம்ம ஏரியாவில, அவன் நம்மள டபாய்க்கிறான்னா என்னடா அர்த்தம்? இன்னுமா பயல அந்தப் விட்டுவச்சிருக்கீங்க? உங்களால முடியாட்டி சொல்லுங்கடா சோதாப்பசங்களா."
'அவன ஒழுங்கு பண்ணத்தாண்ணே புறப்பட்டோம். அதுக்குள்ளே அண்ணன் வந்துட்டீங்க. நாலு நாளைக்கி முன்னேயே முடியவேண்டிய கேசு. சரோசாதான் தடுத்துட்டாள்.”
"நெசந்தாண்ணே, இவங்கோ அவன சாவடியா அடிச்சிட்டால், அப்பால பங்களாக்காரங்க என்னை போலீசுல ஒப்படைச்சிடப் படாதேன்னு பயந்தது நிசந்தாண்ணே. என்னோட பயத்தில நியாயமிருக்குண்ணே. ஏன்னா, பழகின போலீசே பயங்கரமா அடிச்சிட்டாங்கண்ணே."
"போலீஸ், பெரிய போலீஸ்! நானு பார்க்காத போலீசா? பொறுப்ப என்கிட்ட விட்டுடு. அவன் பங்களாவக்கூட இடிச்சிக்காட்டுறேன். சில விஷயங்களுல நாம முந்திக்கணும். அவன ஒன்னை பாலோ செய்யறது, என்னை செய்யறதுமாதிரி. இன்னிக்கே அவன ஒரு வழி பண்ணிடறேன்.”
அண்ணன், சபாரி சட்டையை தூக்கிப்பிடித்து, பனியன் போடாத வயிற்றைக் காட்டியபோது, பத்துப்பதினைந்துபேர் தற்செயலாய் வருவதுபோல் ஒருவர்பின் ஒருவராக வந்தார்கள். உகாய் பேன்ட் போட்டு, சட்டைகளை இன் செய்த மூன்று பேர்... பின்பக்கமாய் முடிவளர்த்த மூன்றுபேர்... அகலவாக்கில் இரண்டு, நீளவாக்கில் நான்கு... அத்தனைபேரும் அண்ணனை ஒரே கண்ணாய் பார்த்தார்கள். ஆனால் அண்ணனோ சுற்றும்முற்றும் பார்த்தார். அதைப் புரிந்துகொண்ட துரை, இன்னும் குடிக்கக் கேட்ட பரமசாது மனிதரையும், மணலில் புரண்ட