தர்மத்தை அவன் சொல்லி க் காட்டியது, ‘வேணுமுன்னா இருந்தா இரு, இல்லாவிட்டால் போ' என்பது மாதிரி அவளுக்குத் தோன்றியது. அவள் யோசித்து நடந்ததால் நிலைப்படி நெற்றியில் தட்ட, அதை தடவிவிட்டுக் கொண்டே குனிந்து பின்புற வரவேற்பறைக்கு வந்தாள். அங்கே கிடந்த இரண்டு நாற்காலிகளின் சட்டங்களிலும், இருகால்களையும் ஒருகால் மாதிரி போட்டுக் கொண்டு இரண்டுபேர் அட்டகாசமாய் கிடந்தார்கள். அவளைப் பார்த்ததும் தங்கள் பக்கம் வரும்படி கையசைத்தார்கள். அவளோ செல்லாக் கோபத்தை பொறுமையாக்கி, புறவாசலில் இருந்து கீழே குதித்தாள்.
புறவாசலையொட்டி ஒரு பெரிய பந்தல் போடப் பட்டிருந்தது. தென்னங்கீற்றிலான மூங்கில் பந்தல். மூன்று பக்கம் மறைத்து ஒரு பக்கத்தை வாயாகக் காட்டிக் கொண்டிருந்தது. எதிர்ப்புறம் கடலே ஒரு அடைக்கலம் மாதிரியும் காட்சியளித்தது. இந்தக் கடலிலிருந்து தோணிகளில் சரக்குகள் வருவதும் போவதும் சகஜம். அந்தப் பந்தலுக்குக் கீழே ஓரடி உயரத்திற்கு மணல் பரப்பு. ஏழெட்டுபேர் தாறுமாறாகக் கிடந்தார்கள். ஒருவன் படுத்தக்கொண்டே குடித்துக் கொண்டிருந்தான். இன்னொருத்தன் குப்புறக் கிடந்தான். ஒருத்தன் கல்லுளிமங்கனாய் சுவரில் சாய்ந்திருந்தான். அத்தனைபேர் முன்னாலும் கண்ணாடிக் கிளாஸ்களில் வெள்ளித்திரவம் நிரம்பியிருந்தது. ஒரு அம்மைத்தழும்பு ஆசாமி வெளியே இருந்து உள்ளே வந்தான். இன்னொருத்தன், வீட்டுக்குள்ளேயிருந்து வெளியே வந்தான். வெளியேயிருந்து வந்தவன், வேர்க்கடலைப் பொட்டலங்களையும், சிகரெட் பாக்கெட்டுகளையும் கொடுத்தபோது, உள்ளேயிருந்து வந்தவன் நண்டுகளையும், இரால்களையும், மசாலா முட்டைகளையும் ஆவிபறக்கக் கொண்டு வந்தான். அந்தப் பக்கமாய் வந்த சரோசா முட்டுக்காலிட்டு உட்கார்ந்தாள். இதற்குள் துரை ஒரு கேனை கொண்டுவந்து, ஒரு கடிகார ஆசாமியிடம் ஒரு கிளாஸ் நிறைய ஊற்றினான். அந்த ஆசாமி சந்தேகம் கேட்டான் :
"ஏம்பா, இது நெசமாவே ஸ்பெஷல்தானா?"
துரை பதிலளிக்கப் போனபோது, சரோசா அந்த ஆசாமியின் முன்னாலிருந்த கிளாசைப் பிடுங்கினாள். மணல் இல்லாத வழுக்கைத் தரையில் நான்கைந்து சொட்டுக்களை ஊற்றினாள். ஒரு ஆசாமியின் முன்னால் கிடந்த தீப்பெட்டியை அங்கிருந்து படுத்தபடியே, கையில் கவ்விக்கொண்டு நிமிர்ந்தாள். சாராயத்துளிகள் மேல் தீக்குச்சியை உரசி மேலே பிடித்தாள். அந்தத் திரவம் குப்பென்று பற்றி எரிந்தது. இனந்தெரியாத ஒரு 'கிக்' நெடி - கடல் காற்றும், கருவாட்டு வாடையும், சடசடவென்று சத்தம் போட்டு அந்தத் திரவத்திற்கு ஒரு மவுசைக்