எத்தனையோ பேர், வயசான நயினாக்களையும், ஆத்தாக்களையும், கொயந்தைங் களையும் வழியிலேயே விட்டுட்டு, கண்ணீரும் கம்பலையுமா ஓடி வந்திருக்காங்க. ஆனா என்னோட நயினா வூட்டுக்காரியை இடுப்பிலேயும், கொயந்தைங்களை தோளிலயுமா தூக்கிட்டு வந்திருக்கார். ஆனாலும் வழிலே சப்பான்காரன் மேலே, குண்டு போடறதா நினைச்சு, வெள்ளைக்காரன் போட்ட குண்டுல பொண்டாட்டியும் பூட்டாள். புள்ளாண்டானும் பூட்டான். நயினா மூணு வயசு பொட்டக் குயந்தயோட தப்பிச்சுட்டார். இந்த மெட்ராசுக்கு வந்து சமையல்காரனா, ரிக்ஷாக்காரனா வேலை பார்த்து, தாம் பெத்த பொண்ணை ஒருத்தனுக்குக் கட்டி வச்சிருக்கார். நான் பிறந்த ஒரு வருஷத்திலேயே, அவரோட பொண்ணு என்னோட ஆத்தா - அந்த தத்தேறி முண்டை, - எவனோ ஒரு கோல்மாலை இஸ்துக்குன்னு பூட்டாளாம். அவள் மட்டும் என் கையிலே கெடச்சா, பீஸ் பீஸா கிழிச்சிடுவேன்."
“ஏன் உடம்பை இப்படி ஆட்டறே சரோ? பொறுமையாச் சொல்லு. நடந்ததை இனிமேல் மாத்த முடியாது. உன்னோட அம்மா எந்த நிலைமையிலே அப்படிப் போனாளோ?"
"அது இன்னா சாரு நிலைமை? கொயுப்பு எடுத்த நிலைமை? பயங்கரமான காட்டுலே இருந்து தோளுல தூக்கிட்டு வந்த அப்பாவை வுட்டுட்டுப் போறதுக்கு எப்படி சாரே மனசு வரும்? பெத்த கொயந்தயை விட்டுட்டுப் போறவள் பொம்மனாட்டியா? போ சாரே... அவள் பேச்சை எடுக்காதே."
“அம்மா மேலே இந்த அளவுக்கு வருகிற கோபத்தை உன் அப்பா மேலே காட்டணுமுன்னு ஏன் தோணலே?"
“என்னை அவனுக்குப் பெத்தாளோ, இல்லை எவனுக்குப் பெத்தாளோ?"
“அந்தக் கஸ்மாலப் பயலும் ஒரு வருஷத்துக்குப் பிறகு இன்னொருத்தியை இஸ்துக்குன்னு ஓடிட்டானாம். ரெண்டு பேரும் எத்தனை கை மாறினாங்களோ? விட்டுத்தள்ளு சாரே எச்சிக்கலங்கள. ஏதோ நாயினாவுக்காக காலத்தைத் தள்ளிட்டு இருக்கேன். நான் விட்ற ஒவ்வோர் மூச்சும் அவருக்குத்தான். இரும்பைத் திருடி அவருக்கு வடையா மாத்திக் கொடுக்கேன்; சாராயம் கடத்தி அவரை சாகாம பாத்துக்கறேன். எப்படியோ பொயப்பு ஓடுது. ஆனாலும் ஒன்னை நானு அப்படி படுத்தியிருக்கப்படாதுதான்."