(Reading time: 13 - 25 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

கமலி அவனை ஏறிட்டு நிமிர்ந்து பார்த்துக் கனிவோடு புன்முறுவல் பூத்தாள். பங்களாவுக்குத் திரும்பும் போது சாரலும் மேகமூட்டமுமாக வானவில் வேறு போட்டிருந்தது. மலைச் சிகரங்களின் பின்னணியில் வானவில் மிகமிக அழகாயிருந்தது. மலைகளும், சாரலும், பசுமை நறுமணமும், வானவில்லும், அருவி நீராடலும் அவர்களைச் சிறு குழந்தையின் உற்சாகத்தைக் கொள்ளச் செய்திருந்தன. அருவியிலிருந்து திரும்பியதும் அன்று பகலில் நாயுடு எஸ்டேட் பங்களாவில் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். விருந்து முடிந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்ட பின்பே அவர்கள் மலையிலிருந்து கீழே புறப்பட முடிந்தது.

  

"நீங்க இந்தியாவிலே இருக்கிறவரை எப்ப வேணாலும் இங்கே தாராளமா வந்து தங்கலாம். வித்தியாசமா நினைக்க வேண்டாம். இதை உங்க சொந்த வீடு மாதிரி நினைச்சுக்குங்க" - என்று புறப்படும்போது ரவியையும் கமலியையும் பார்த்துச் சொன்னார் நாயுடு. பச்சை ஏலக்காயில் செய்த மாலை ஒன்றைக் கமலிக்கு அவர் அளித்திருந்தார். அந்த மாலை தைத்துக் கோக்கப்பட்டிருந்த விதத்தை அவரிடம் வியந்து புகழ்ந்து கூறினாள் அவள்.

  

"வீக்-எண்ட்-பிரயாணம்னு வந்தா இதைவிட ஐடியல் பிளேஸ் சங்கரமங்கலத்துக்குப் பக்கத்திலே வேற ஒண்ணும் கிடையாது"- என்றார் வேணுமாமா.

  

"இவா இரண்டு பேரும் இங்கே வர போது ஒரு தடவை நம்ம எஸ்டேட் கஸ்ட் ஹவுஸ் சாவியைக் கூடக் கொடுத்து விடலாம் அப்பா" - என்றாள் வசந்தி.

  

அவர்கள் அனைவரும் நாயுடுவிடம் விடைபெற்றுக் கொண்டு மலையிலிருந்து கீழே புறப்படும் பொழுது பிற்பகல் மூன்று மணிக்கு மேலாகிவிட்டது.

  

ரவியும், கமலியும் சங்கரமங்கலம் திரும்பி வீட்டு வாசலில் காரிலிருந்து இறங்கும்போது பிற்பகல் நாலரை மணி. வருகிற வழியில் முதலிலேயே வேணுமாமாவும் வசந்தியும் தங்கள் வீட்டில் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

  

வீட்டு வாயிலில் சர்மா இறைமுடிமணியோடு பேசிக் கொண்டிருந்தார். ரவியை உற்சாகமாக வரவேற்றார் இறைமுடிமணி. கமலியை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தான் ரவி. 'இறைமுடிமணி' - என்ற பெயரைத் திருப்பி உச்சரித்துச் சொல்லிப் பார்க்க முயன்றாள் கமலி.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.