கவனிப்பதை விட அடுத்த வீடுகளில் யார் வருகிறார்கள், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கவனிப்பதில் இந்தக் கிராமத்து ஜனங்களுக்குத் தான் எவ்வளவு அக்கறை?" -
"அது மட்டும் இல்லே சார்! இங்கே இப்போ 'டாக் ஆஃப் த வில்லேஜே' - நானும் கமலியும் தான்."
"ஆமாம்! பேசுவானுக... நல்லாப் பேசட்டும். அதுனாலே ஒண்ணும் அசந்துடாதீங்க தம்பி."
மடத்துக் குமாஸ்தாவுடன் சர்மா வந்து சேர்ந்தார். ரவியும் கமலியும் இறைமுடிமணியிடம் கூறி விடை பெற்றுக் கொண்டு மாடிக்குச் சென்றார்கள்.
"ஸ்டாம்ப் பேப்பர் நானே கொண்டாந்திருக்கேன். எழுத வேண்டியதை எழுதிக்கலாம். கடையை என் மருமகன் தான் நடத்தப் போறான்னாலும் 'அக்ரிமெண்ட்' என் பேருக்கே பண்ணிக்குவோம்." -
"ரெண்டு மாச அட்வான்ஸ் வேணும்னு ஸ்ரீ மடத்திலேருந்து உத்தரவு. கட்டிட வேலையோ, டெம்பரரி ஷெட்டோ எதுன்னாலும் இடத்தை லீஸுக்கு எடுத்துக்குற பார்ட்டி தன் செலவிலேயே போட்டுக்கணும்னு நிபந்தனை..."
"எனக்கு முழுச் சம்மதம். அட்வான்ஸ் பணம் இதோ கொண்டாந்திருக்கிறேன்."
சர்மாவுக்குப் பதில் சொல்லிவிட்டுப் பணத்தை எடுத்து எண்ணத் தொடங்கினார் இறைமுடிமணி. யாரோ படியேறுகிற செருப்புச் சத்தம் கேட்டது. ஒரே சமயத்தில் இறைமுடிமணி, சர்மா இரண்டு பேருமே நிமிர்ந்து பார்த்தார்கள். ஜவுளி வியாபாரி அஹமத் அலி படியேறிக் கைகூப்பிவிட்டுச் செருப்பை ஓரமாகக் கழற்றிக் கொண்டிருந்தார். சர்மா பதிலுக்குக் கை கூப்பிவிட்டு, "ஏது இவ்வளவு தூரம்?" என்று அஹமத் அலியைக் கேட்டார். அஹமத் அலி சிரித்துக் கொண்டே, "உங்க தயவு தான் வேணும். இந்தாங்க" என்று ஒரு கடிதத்தை எடுத்துச் சர்மாவிடம் நீட்டினார்.
"சீமாவையர் சார் உங்களைப் பார்த்து இதைக் கொடுக்கச் சொன்னாருங்க..."