கடிதத்தை வாங்கிப் பிரித்துப் படிக்கலானார் சர்மா. கடிதத்தில் இருந்த விஷயங்களினால் ஏற்படும் உணர்ச்சியை முகமோ கண் பார்வையோ காட்டிக் கொடுத்து விடாமல் சர்மா சுபாவமாக இருக்க முயன்றார்.
"லெட்டரைப் பார்த்துட்டேன்னு சீமாவையர் கிட்டச் சொல்லுங்கோ. நானே அப்புறமா உங்களுக்கு விவரம் சொல்லியனுப்பறேனே?"
"பணம் ஒண்ணும் பெரிசில்லே. நீங்க பண்ற முடிவுக்கு அப்படியே கட்டுப்படறேன் நான்."
"அதான் சொல்லி அனுப்பறேன்னேனே?"
"அப்போ சரி! வரட்டுங்களா, மறந்துடாமே ஞாபகமாச் சொல்லி அனுப்புங்க... இன்னைக்கே முடிவு பண்ணிக்கலாம்..."
"சொல்லி அனுப்பறேன்..."
அஹமத் அலி சர்மாவிடம் சொல்லி வணங்கி விடைபெற்றதோடு அமையாமல் இறைமுடிமணியிடமும் மடத்துக் குமாஸ்தாவிடமும் கூடச் சொல்லிக் கொண்டு புறப்பட்டார்.
"சாய்பு என்ன காரியமா வந்திட்டுப் போறாரு?" - என்று இறைமுடிமணி உடனே கேட்டு விடுவாரோ என்பதாக எதிர்பார்த்த சர்மாவுக்கு அவர் அப்படிக் கேட்காதது வியப்பை அளித்தது.
ஒப்பந்தப் பத்திரம் முடிந்து இறைமுடிமணியிடம் அட்வான்ஸை வாங்கி, "இந்தா! மடத்துக் கணக்கில் பாங்கிலே கட்டிடு" - என்று குமாஸ்தாவிடம் அதைக் கொடுத்து அவனை அனுப்பிய பின், "இந்தா தேசிகாமணீ! இதைக் கொஞ்சம் படிச்சுட்டுக் குடு" - என்று மடியிலிருந்த கடிதத்தை எடுத்து நீட்டினார் சர்மா.
இறைமுடிமணி அவர் கொடுத்த கடிதத்தைப் படிக்கலானார். கடிதம் சர்மாவுக்கு உள்ளூர் மிராசுதார் சீமாவையரால் எழுதப்பட்டிருந்தது. வடக்குத் தெருவிலுள்ள மடத்துக்குச்