தாங்கள் மன்னிக்க வேண்டும். (வணங்குகிறான்)
குண: (நடுநடுங்கி) இதென்ன ஆச்சரியம்! கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டதைப் போல, இவன் வண்டிக்குள்ளிருந்து வருகிறானே யார் இவன்? இதற்குள் எப்படி நுழைந்தான்? வஸந்தஸேனை எங்கே? (கையைப் பிசைந்து கொண்டு ஒரு மூலையில் நிற்கிறான்)
மாத : (பிரதாபனைப் பார்த்து) அப்படியானால் நீ வண்டியில் வந்ததைப் பற்றிச் சந்தோஷமே! நீ யார்? உனக்கு என்ன ஆபத்து நேர்ந்தது? இந்த வண்டியில் நீ எப்படி ஏறிக் கொண்டாய்?
பிரதா : நான் மாடு மேய்க்கும் குலத்தில் பிறந்தவன் என் பெயர் பிரதாபன்.
மாத : ஒகோ! நீ தானோ பிரதாபன்? போதும் போதும்; சங்கதிகள் எல்லாம் எங்களுக்குத் தெரியும். போகட்டும்; எப்படியாவது நீ உயிர் தப்பி வந்தாயே; அதுவே போதும். உனது விதியே நட்பாயிருந்து உன்னை இங்கு கொண்டு வந்தது.
பிரதா : நான் சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடி வந்தேன். என்னைப் பலர் துரத்தி வந்தனர். கடைசியாக தங்கள் மாளிகைக் கதவின் மறைவில் ஒளிந்து கொண்டேன். இந்தப் பெட்டி வண்டி வந்தது. அதில் வந்து ஏறிக் கொண்டேன்.
குண : இந்த சங்கிலியின் ஓசையை வஸந்தஸேனையின் ஆபரணங்களின் ஒசையென்று நினைத்து ஓட்டிக் கொண்டு வந்து விட்டேன் முட்டாளாகிய நான்.
மாத : குணசீலா கவலைப்படாதே! நீ செய்தது பெருத்த உபகாரம்; கடவுளே இவ்விதமாக நடக்கும்படி சூழ்ச்சி செய்திருக்கிறார். நல்லது; இவரை இதிலேயே உட்கார வைத்து இவர் வீட்டில் கொண்டுபோய் விட்டுவா.
(பிரதாபன் பேரில் இருந்த சங்கிலியை விலக்கி நீக்குகிறார்)
பிரதா : ஆகா! ஸ்வாமி! தங்களுடைய குணத்தைப் புகழாதவர்களே இல்லை. அதை நான் இப்பொழுதே நேரில் காண்கிறேன். நீங்கள் விலக்கிய சங்கிலியைக் காட்டிலும் அதிக வலியுடையதும் எப்பொழுதும் நீடித்து நிற்கக் கூடியதுமான வேறு ஒரு சங்கிலியால் என்