Flexi Classics தொடர்கதை - வஸந்த கோகிலம் - 06 - வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
இடம் : மாதவராயருடைய மாளிகை.
காலம் : மறுநாள் காலை.
(வஸந்தஸேனை ஒரு சயனத்தில் நித்திரை செய்யத் தோழி அருகில் நிற்கிறாள்.)
தோழி : அம்மா பொழுது விடிந்து நெடுநேரமாய் விட் டதே! விழித்துக் கொண்டு பாருங்கள்.
வஸ : (கண்ணைத் துடைத்துக் கொண்டு விழிக்கிறாள்) ஆகா! இப்பொழுது தானே சயனித்துக் கொண்டேன். இதற்குள் பொழுது விடிந்து இவ்வளவு நேரமாகி விட்டதே! என்ன வெட்கக் கேடு! நான் இவ்வளவு நேரம் துயிலுவதைக் கண்ட நமது எஜமானர், என்னைப் பற்றி எவ்விதமான அபிப்பிராயம் கொண் டாரோ தெரியவில்லையே! அவர் தேகம் எப்படி இருக்கிறதோ தெரியவில்லையே! இரவில் அவரை மூர்ச்சை தெளிவித்துச் சயனத்தில் படுக்கச் செய்து நெடுநேரம் நான் அவருக்கு அருகில் சைத்தியோபசாரம் செய்து கொண்டிருந்தேன். நான் நிற்பதைப் பொறாமல், என்னையும் நித்திரை செய்யும்படி அனுப்பினார். அவரைத் திரும்பவும் பாராமல் நான் நெடுநேரம் தூங்கி விட் டேனே! நீ உடனே போய் அவர் விழித்துக் கொண்டாரா என்று பார்த்து விட்டு வா! (தோழி போகிறாள்)
வஸ : (தனக்குள்) ஆகா! என்ன இவருடைய மனோவுறுதி! இவர் ஏக பத்தினி விரதத்தைப் பூண்டவராக இருக்கிறாரே! இவர் மனதை நான் எப்படி மாற்றப் போகிறேன்? ஈசுவரா! திக்கற்ற ஏழையான எனக்கு நீர்தான் துணை இருந்து என் இச்சையைப் பூர்த்தி செய்விக்க வேண்டும். (தோழி வருகிறாள்)
தோழி: அம்மா! அவர் நம்முடைய நகரத்திய பூஞ்சோலைக்கு அருகில் இருக்கும் தன்னுடைய உத்தியான வனத்திற்குப் போய் விட்டார். நீங்கள் இரவில் அவருக்குச் செய்த உபசரணைகளுக்கு அவர் பெரிதும் நன்றி பாராட்டுகிறாராம். வெளியில் போகுமுன் உங்களுடன் தெரிவித்துப் போக நினைத்தாராம். நித்திரையில் இருந்த உங்களை எழுப்ப மனம் இல்லாதவராய்ப் போய் விட்டாராம். நீங்கள் அவரைப் பார்க்க விரும்பினால் தனது பெட்டி வண்டியில் வைத்து அவ்விடத்திற்கு அழைத்து வரும்படி தன்னுடைய வேலைக்காரனுக்குக் கட்டளை இட்டுப் போய் இருக்கிறாராம்.