Flexi Classics தொடர்கதை - வஸந்த கோகிலம் - 05 - வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
இடம் : மாதவராயருடைய மாளிகைக்குள் ஒரு சிறிய பூஞ்சோலை.
காலம் : மாலை.
(ஸோமேசன் வருகிறான்)
(தனக்குள்) மாதவராயர் வஸந்தஸேனையின் வரவை அதிக ஆவலோடு எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறார். இவருக்கு அவள் பேரில் இவ்வளவு ப்ரேமை உண்டாகக் காரணமென்ன! அவள் கேவலம் அற்ப புத்தியும் பேராசையுமுடைய தாஸி அல்லவோ! எவ்வளவு ஐசுவரியத்தைப் பெற்றிருந்த போதிலும் அவளுடைய ஜாதிக் குணமாகிய நிர்தாக்ஷண்யம் போகவில்லையே! வைர ஸ்ரத்தைப் பார்த்தவுடனே, வெளி வேஷமாகவாவது ஒரு உபசார வார்த்தைக்கூடச் சொல்லாமல், உடனே அதை ஆத்திரத்தோடு பிடுங்கிக் கொண்டாளே! வேசைக்குக் காசின் மேலாசை என்பது சரியாய்ப் போய் விட்டதே! அவளுக்கு எவ்வளவோ செல்வம் இருந்தும் மேன்மேலும் அபகரிக்கும் புத்தி இருக்கிறதே யொழியத் தயை, இரக்கம் ஈகை முதலிய குணங்கள் இல்லையே! தண்டில்லாத தாமரையும், தஸ்கரம் செய்யாத தட்டானும், சண்டையில்லாத சங்கமும், பேராசை இல்லாத தாஸியும் இல்லையென்று பெரியோர் சொல்வது நிஜமே! இவை ஒன்றை விட்டொன்று என்றும் இணை பிரியாத் துணைப் பொருள்கள். அவள் இன்று வரவேண்டிய காரணம் என்ன? எனக்கு இது மிகவும் சந்தேகத்தைத் தருகிறது. கபடமே அறியாத மாதவராயரை அவள் ஒருவேளை தன் வலையில் விழச் செய்வாளோ ஏழையாய் வருந்தித் தவிக்கும் இவர் இன்னம் அதிகமாகத் துன்புற்றுத் துயரக் கடலில் மூழ்க நேரிடுமோ! இரக்கட்டும்; நான் உடனே போய் இவர் அவள் பேரில் கொண்டிருக்கும் நல்ல அபிப்பிராயத்தை மாற்ற முயலுகிறேன்.
மாத : ஸோமேசா! இன்னம் வஸந்தசேனையின் வண்டி வரவில்லையா?
ஸோமே : இல்லை. (ஒருவித வெறுப்போடு) உம்! என்னமோ! எனக்கொன்றும் பிடிக்கவில்லை.
மாத : உனக்கு என்ன பிடிக்கவில்லை.
ஸோமே : அபாத்திரமான மனிதரிடத்தில் நீங்கள் இவ்வளவு அபிமானம் வைப்பது? கேவலம்