மாத : அது எதற்காக இப்பொழுது? வசந்த காலத்தில் புஷ்பிக்கும்.
ஸோமே : (திரும்பி வந்து) அடே! அது வசந்த காலத்தில் புஷ்பிக்கும்.
மாத : அப்படியானால் நீர் சமர்த்தர்தான்! உள்ளே போய் எஜமானரிடங் கேட்டு அறிந்து கொண்டு வந்து சொன்னால், இது உமக்கு முன்னமேயே தெரிந்ததாய் விட்டதோ? நீர் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைதான். இந்தப் பிரவேசப் பரிட்சையில் நீர் தவறிப் போனீர். இன்னொரு கேள்வி கேட்கிறேன். அதற்காவது நீரே பதில் சொல்லும் பார்க்கலாம். தனம் நிறைந்த பட்டினத்தைப் பாதுகாப்பவர் யார்?
ஸோமே : (அலட்சியமாக) மகா பெரிய கேள்வியோ இது? அரசன் பாதுகாக்கிறான்?
தன : அப்படியானால் உம்முடைய மூளையில் அழுக்குப் படிந்திருக்கிறது. அதை வண்ணானுக்குப் போட வேண்டியது தான் சரியான சிகிச்சை. இன்னொரு முறை எஜமானரிடம் போய் இந்த மடமைக்கு மருந்தை அறிந்து வாரும்.
ஸோமே: (மாதவராயரிடம் போய்) ஸ்வாமி! தனம் நிறைந்த பட்டினத்தைப் பாதுகாப்பவர் யார்?
மாத : இவை என்ன கேள்விகள்? உமக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதோ? பட்டினத்தைக் காப்பது சேனை என்பது கூட உனக்குத் தெரியாதா?
ஸோமே : (திரும்பி வந்து) தனபாலா! பட்டினத்தைச் சேனை காக்கிறது என்பது கூடத் தெரியாதா? முட்டாள்! இதெல்லாம் என்ன கேள்வி! யார் வந்திருப்பவர் என்று கேட்டதற்குப் பதில் இல்லை. பைத்தியக்காரனைப் போல் ஏதேதோ உளறுகிறாயே! நான் கேட்டதற்கு நீ சொன்னதற்கும் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் உள்ள சம்பந்தம் தாராளமாய் இருக்கிறது.
தன : ஐயோ பாவம் புத்திக்கு எட்டவில்லை! மிகவும் உயரம் போல் இருக்கிறது! ஒரு ஏணியாவது வைத்து ஏறிப் பார்க்கக் கூடாதா! அதற்கு இவ்வளவு பீடிகை எதற்காக? எஜமானரிடம் போய்த் தெரிவிக்கிறேன். (போகிறான்) ஸ்வாமி! கடன்காரி வந்துவிட்டாள்!