மாத : மரியாதையாகக் கேள்!
ஸோமே : வஸந்தஸேனா சகல சுக போகங்களும் நிறைந்த உன்னுடைய மாளிகையை விட்டு இவ்வளவு தூரம் வரும்படியான சிரமத்தை ஏற்றுக் கொண்ட காரணமென்ன?
தோழி : (ஸோமேசனிடம்) ஐயா! நீர் கொடுத்த வைரசரத்தின் கிரயம் எவ்வளவு என்று அறிந்து கொள்ள எஜமானி அம்மாள் விரும்புகிறார்கள்.
ஸோமே: (மாதவராயரிடம் தனிமையில்) நான் அப்பொழுதே சொன்னேன் அல்லவா! சரியாய்ப் போய்விட்டது பார்த்தீர்களா?
தோழி : அதைக் கேட்பதின் காரணம் என்ன என்றால், அவர்கள் அதை சூதாட்டத்தில் தோற்று விட்டார்கள். ஆகையால் அதன் விலையை அறிந்து கொள்ள விரும்புகிறார்.
ஸோமே : (தனக்குள்) ஓகோ! பதிலுக்குப் பதிலோ!
தோழி : இழந்த சரத்திற்குப் பதிலாக இவ்வாபரணங்களை வைத்துக் கொள்ளுங்கள்! (திருட்டுப் போன நகைகளைக் கொடுக்க, ஸோமேசன் ஆச்சரியத்துடன் பார்க்கிறான்.)
தோழி : என்ன அப்படிச் சோதனை செய்து பார்க்கிறீரே! இதற்கு முன்னால் இவற்றைப் பார்த்திருக்கிறீரோ?
ஸோமே ; இதென்ன ஆச்சரியம்! தட்டானுடைய திறமை நம் கண்களை ஏமாற்றி விட்டதே!
தோழி: இல்லையில்லை; உம்முடைய கண்ணின் பார்வைதான் சற்றுக் குறைவாகத் தோன்றுகிறது. இதற்குமுன் நீர் பார்த்த ஆபரணங்களே இவைகள்!
ஸோமே : (மாதவராயரிடம் எடுத்துக் கொண்டு போய்) ஆகா! நண்பரே! நம்மிடத்தில் இருந்து திருட்டுப் போன ஆபரணங்களைப் பார்த்தீர்களா?