ஸோமே : என்ன தெண்டம் கொணர்ந்து வைக்கப் பார்க்கிறாய்? இங்கே ஏதாவது பொருள் இருந்தால் அல்லவோ தெண்டம் எங்களை வருத்தப் போகிறது! அதைப் பற்றிக் கவலை இல்லை. என்ன சமாசாரம்! ஏதேனும் விசேஷமும் உண்டா?
தன : அவர்கள் வந்திருக்கிறார்கள்
ஸோமே : எவர்கள்? .
தன . அவர்கள்தான் தெரியாதா?
ஸோமே : எனக்குத் தெரியவில்லையே! அது யார் அந்தச் சுவர்கள்? பெயரைச் சொல்லேன்.
தன : உமக்கு எதுதான் தெரியும்! நூறு வடையை ஒரு நொடியில் உள்ளே முழுசு முழுசாகத் தள்ளி விடத் தெரியும்! எந்தப் பள்ளிக் கூடத்திலும் கற்காமல் அந்த வித்தை மாத்திரம் சுலபமாகவே வந்து விட்டது. ஆச்சரியந்தான். அது இருக்கட்டும் ஒரு கேள்வி கேட்கிறேன், அதற்குப் பதில் சொல்லும். இந்த மாமரம் எந்தக் காலத்தில் புஷ்பிக்கும்? அதாவது தெரியுமா?
ஸோமே : என்ன என்னைப் பரீட்சிக்கிறாயோ? ஆனி ஆடி மாசங்களில் புஷ்பிக்கும். இது தெரியாதா முட்டாள்!
தன : அந்தப் பெயர் உமக்குத்தான் நன்றாய்ப் பொருந்துகிறது. அப்பா சாஸ்திரி வீட்டில் பிறந்து குப்பா சாஸ்திரி வீட்டில் வாழ்க்கைப்பட்ட எனக்கு லவணம் என்றால் எருமைச் சாணம் என்று தெரியாதோ? என்று அழுத்தம் திருத்தமாய் ஒருத்தி சொல்லிக் கொண்டு இலையில் பரிமாறினாளாம். அதைப் போல் இருக் கிறது நீர் சொல்வது.
ஸோமே : அதென்ன அப்படிச் சொல்கிறாய்! நான் சொன்னது ஒருநாளும் தவறாது! நீ இவ்விடத்திலேயே இரு. இதோ எஜமானரிடம் போய்க் கேட்டுக் கொண்டு வருகிறேன். (மாதவராயரிடம் போய்) ஸ்வாமி! மாமரம் எந்தக் காலத்தில் புஷ்பிக்கும்? தயவு செய்து தெரிவியுங்கள்.