தனது இடது கையை வளைத்துப் போட்டு, வலது கையால் அவன் ஜாக்கெட்டைக் கிழித்தாள். முதுகுப் பக்கம் ஏற்பட்ட சின்ன கிழிசலுக்குள் கையைச் சொருகி, அதைக் கீழேயும் மேலேயுமாய் இழுத்தாள். அவன் பிராவோடு நின்றபோது, அம்மாக்காரி, ‘அடப்பாவிப் பயலே’ என்று கத்திவிட்டு, அதைப் பிடித்து இழுத்தாள். இதனால், சுயம்பு சிறிது தடுமாறியபோது, மரகதம் அவன் தோளிலிருந்து முதுகுப் பக்கம் விழுந்த புடவையை இழுக்கப் போனாள். அம்மா, அவனை வந்து பிடித்துக்கொண்டாள்.
சுயம்பு, அம்மாவை ஒரு அடி அடித்தான். அக்காவை ஒரு தள்ளுத் தள்ளிவிட்டு, அவள் மீது ஓங்கிய கையை, அப்படியே வைத்துக்கொண்டான். அவளோ, அவன் சேலை நுனியைப் பற்றிக்கொண்டே அங்குமிங்குமாய்த் தாவித்தாவி, பிறகு அவனோடு சேர்ந்து ஒட்டிக்கொண்டு ‘என்னம்மா பார்த்துக்கிட்டே நிக்கே’ என்று சொல்லி விட்டு, கையைத் தம்பியின் இடுப்புப்பக்கம் கொண்டு போனாள். அம்மாக்காரியும், அறைபட்ட கன்னத்தைத் தடவி விட்டுக்கொண்டே, மகனை நெருங்கினாள். அவ்வளவுதான். சுயம்பு ஒரு உதறு உதறினான். தலையை ராட்டினமாய் விட்டபடியே, ராட்சதத்தனமாய் உதறினான். “எம்மா.என் கண்ணு போச்சே” என்று கீழே விழுந்த வெள்ளையம்மா, மேலே எழாமல் அப்படியே கீழே கிடந்து, முனங்கினாள். அவன் தள்ளிய தள்ளலில் சுவரில் போய்க் குப்புற விழுந்த மரகதம், தட்டுத் தடுமாறி நின்றாள். நெற்றியைப் பிடித்தபடியே கீழே துடித்த அம்மாவைக் கைத்தாங்கலாய்த் தூக்கி உட்கார வைத்தாள். அம்மாவோ, பழையபடி சரிந்தாள். மரகதம், தம்பியை நோக்கி நகர்ந்தாள். அவன் கத்தினான். “யாராவது கிட்ட வந்தீங்க. நான் ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்கும்! நான் ஆம்புள இல்ல! இத மொதல்ல தெரிஞ்சுக்குங்க!”
வெள்ளையம்மா, கண்களைக் கசக்கிக்கொண்டு, வலித்த இடத்தைத் தடவி விட்டுக் கொண்டிருந்தபோது, மரகதம் அவனை மீண்டும் பார்த்தாள். கிட்டே நெருங்க முடியாத பார்வை: எட்டி உதைக்கப் போவது போன்ற கால்கள் : சுயம்பு பல்லைக் கடித்துக்கொண்டு, யார் பக்கத்தில் வந்தாலும், இரண்டில் ஒன்றைப் பார்க்கப் போவது போல் ஆயத்த நிலையில் நின்றான்.
மரகதம் எந்தச் சுவரில் மோதினாளோ, அந்தச் சுவரிலேயே தலையைப் போட்டு அங்குமிங்குமாய்ப் புரட்டினாள். “தம்பி, என் தம்பியே... கடவுளே. அவன இப்படி ஆக்கிட்டியே, ஆக்கிட்டியே” என்று அரற்றியவள், திடீரென்று தலையைச் சுவரில் வைத்து மோதினாள். மோதிக்கொண்டே இருந்தாள்.