(Reading time: 32 - 63 minutes)
Vata malli
Vata malli

அவள மாதிரியே இடுப்பக் குலுக்குறான் பாரு. கண்ணைச் சிமிட்டுறான் பாரு. ஏண்டி.. தட்டுக்கெட்ட மூதேவி. ஒன்ன நாங்களாடி சாகச் சொன்னோம்... இந்த வீட்டுக்கு வந்து இந்தப் பயல தம்பி தம்பின்னு சொன்னதாலேயே இவன் ஒனக்கு தம்பி ஆயிடுவானாடி... யாரையாவது பிடிக்கணும்னா, ஒனக்கு சமாதி கட்டிக்கிட்டிருக்கும் போதே ரெண்டாவது கலியாணத்துக்கு நிச்சயம் செய்துக்கிட்ட அந்தப் ‘பலபட்டறப்பய’ ஒன் புருஷன் முத்துக்குமாரப் பிடி. ஒன் மாமன் ‘நரங்கன’ பிடி: அப்படியும் முடியாட்டால், ஒன் மச்சுனன் ‘கொக்கன’ பிடி, என் மகன எப்படிப் பிடிக்கலான்டி. எத்தனாவது சட்டத்துலடி இடமிருக்கு! இரு இரு... பூவம்மா மயினிகிட்ட சொல்லி ஒன்ன பாதாளச் சிறையுல தள்ளுறேன்...”

  

என்னம்மா நீ. பழைய கர்நாடகமா இருக்கே... ஒரு வேள மூளக் கோளாறோ என்னவோ...”

  

சும்மா பினாத்தாதீங்க. உடல் கோளாறுதான்...”

  

பாத்தியா, பாத்தியா... இந்த மூதேவி சீதாலட்சுமி மாதிரியே அலுக்கிக் குலுக்கி பேசறான் பாரு. இந்த வார்த்தை இவனுக்குத் தெரியாத வார்த்தை! அந்தப் பாழாய்ப் போன சீதாலட்சுமி, அடிக்கடி சொல்லுற வார்த்த - பினாத்தாதீங்க...”

  

மரகதம், தம்பியின் நிலைமை அண்ணிக்குத் தெரியக் கூடாது என்பதில் இப்போது அக்கறை காட்டினாள். ஆகையால், சிறிது அறிவுபூர்வமாய்க் கேட்டாள்.

  

அண்ணி, பிள்ளிங்கள எங்கம்மா... நல்லவேளை... இந்தக் கூத்த அவள் பார்க்கலே...”

  

மூளி அலங்காரி... மூதேவி சண்டாளி! எங்க வீட்டுக்கு போறேன்னு, இடையிலேயே போயிட்டாள். நாலு நாளைக்கு வரமாட்டாளாம். பேரன் படிப்பு கெட்டுப் போகுமேன்னு சொன்னதுக்கு, ‘போகட்டுமே. ஒங்க பரம்பரைக்கு கடவுளே வந்து காலேஜ் நடத்துனாலும் படிப்பு ஏறாதுன்னு’ என்னமாக் கேட்டுட்டாள் தெரியுமா... யானை சேறுல சிக்குனால், தவளைகூட கிண்டல் பண்ணுமாம்.”

  

மரகதம் எதுவும் பேசாமல் தம்பியைப் பார்த்தாள். அவன் சுவர்மேல் உடல் போட்டு, கண்மேல் நீர் போட்டு நின்றான். ஏதோ பேசப்போன அக்காவால் அது இயலாமல் போய்விட்டது. வெள்ளையம்மா. உஷார்ப்படுத்தினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.