Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 25 - சு. சமுத்திரம்
வாடா மல்லி, அத்தியாயம் - 25
அந்த ஆட்டோவுக்குள், மேலும் நான்குபேர் தங்களை திணித்துக் கொண்டார்கள். ஏதோ பேசப் போன பச்சையம்மாவை, ஒருத்தர் முட்டிக் காலாலே இடித்தார். அந்த வாகனம், சம்பந்தப்பட்ட காவல் நிலையம் முன்னால் போய் நின்றதும், இரண்டு மப்டிகள் இருக்கையில் இருந்தபடியே, அவர்களைக் கீழே தள்ளி விட்டார்கள். இருவரும் தரையில் விழப்போன வேளை. ஆனாலும், பச்சையம்மாவும் சுயம்புவும் ஒருவரை ஒருவர் ஆதரவாகப் பிடித்தபடி கீழே விழாமல் சமாளித்தார்கள். அது போதாதென்று அந்தப் போலீஸ்காரர் பச்சையம்மாவின் பிட்டத்தில் வலதுகால் பூட்ஸின் அடையாளத்தைப் பதிய வைத்துவிட்டு, அவர்கள் இருவரையும் ஆடுமாடுகளைப் போல் போலீஸ் துரைத்தன முகப்பிற்குள் தள்ளி விட்டார்.
‘கிரைம்’ இன்ஸ்பெக்டர், இருந்த இடத்தில் இருந்த படியே, சிறிது தொலைவில் உள்ள ‘எல் அன்ட் ஓ’ இன்ஸ்பெக்டரிடம் கோபம் கோபமாய்ப் பேசிக் கொண்டிருந்தார். குற்றங்களைக் கவனிக்க வேண்டிய தன்னை, செக்யூரிட்டி டியூட்டிக்குப் போட்டு குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் அலைக்கழித்ததை ஒரு அன்றாட நிகழ்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போதுதான் வந்ததுபோல் அவர் முகத்தில் வேர்வைத் துளிகள். கைகளில் புழுதித் துகள்கள். கத்தினார்.
“மென்னும் கிடையாது. கன்னும் கிடையாது. முகமூடிக்கொள்ளைய குறைடான்னா எப்படிக் குறைக்கறது... வேற பக்கமா போயிடுங்க சாமின்னு கொள்ளக்காரன் காலுல விழுந்து கும்பிட முடியுமா... காலையில சாப்பிட்டதப்பா... நீயாவது சட்டம் ஒழுங்கு... ஜாலி வேல...”
அந்த ‘எல் அன்ட் ஓ இன்ஸ்பெக்டர்’ ஏதோ பதில் சொல்லப் போனபோது, அந்தப் பக்கமாக பச்சையம்மாவும் சுயம்புவும் கொண்டு வரப்பட்டார்கள். சுயம்பு அங்கேயிருந்த போலீஸ்காரர்களைக் கண்டு பயந்து விட்டான். கையில் துப்பாக்கி. அதுக்கு மேலே சூரிக்கத்தி. என்ன செய்யப் போறாங்களோ... அப்போதும் பச்சையம்மா ஆறுதல் சொன்னாள். “மகளே... அழாதே என் மகளே! நம்ம இன்ஸ்பெக்டர்தான் மகளே! மாமூலான மனுஷர்...!”
அந்த கிரைமும், பச்சையம்மாவைப் பார்த்து சிரிக்கப் போனார். அவள் முன்கை கட்டப்பட்டிருப்பதைக் கண்டு கோபப்படப் போனார். இதற்குள் அவர்களைக் கொண்டு வந்த