பச்சையம்மாவையும், அவள் மேல் கிடந்த சுயம்புவையும், காலால் ஒரு எத்து எத்தி, மறுபக்கம் தள்ளிப்போட்டு விட்டு, இன்ஸ்பெக்டர் வெளியே புறப்பட்டார். அதற்குமேல் அவர்களை அடிக்கவில்லை. அவருடைய அந்தஸ்துக்கு அவ்வளவுதான் முடியும். இதற்குமேல் துப்பாக்கிதான் அவருடைய அந்தஸ்து! ஆகையால் லத்திக் கம்பிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.
சுயம்பு, “மரகதக்கா, மரகதக்கா...” என்று மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லி அழுதான். ஒரு தொப்பி மிரட்டியது.
“ஏண்டா... மரகதக்கா எங்கடா இருக்காள்? எங்க இருந்தாலும் அந்தப் பொட்டப் பயல நான் சொன்னேன்னு ஸ்டேஷனுக்கு வரச் சொல்லணும்... தெரிஞ்சுதா...”
சுயம்பு துடித்துப் போனான். கையைக் கட்டிய விலங்கை வைத்தே அவரை அடிக்கப் போவதுபோல் உடம்பை ஆட்டினான். இதைப் பார்த்து ஏதோ ஒன்றைப் புரிந்துகொண்ட ரைட்டர், தலையைக் கவிழ்த்தி, எழுதியபடியே யோசனை சொன்னார்.
“பச்சையம்மா அப்படியே இருக்கட்டும். அந்த சின்னப் பொட்டையோட டிரஸை எடுத்துட்டு ஜட்டியோட விடுங்க... பக்கத்துல எதையும் வைக்காதீங்க. தூக்குப் போட்டு சாகப் போறவன் மாதிரி முழிக்கான் பாருங்க. அப்புறம். சொல்றதைக் கேட்காமல் கஸ்டடி டெத், கற்பழிப்புன்னு வம்ப விலைக்கு வாங்காதீங்க...”
ஒரு போலீஸ்காரர் ஜோக்கடித்தார்.
“கற்பழிப்புக்குப் பிறகுதான் சார் கஸ்டடி டெத்து. மாத்திச் சொல்லுறீங்க...”
“ஒன்னமாதிரி ஆளுங்க பிணத்தைக்கூட கற்பழிப்பீங்க... மூள இருக்காய்யா ஒனக்கு. சீரியஸ் சமாசாரம் பேசறேன்னு தெரியல...”
“எஸ் சார்...”