பச்சையம்மாவைப் பார்த்து நடந்தார். உயரத்தில் ஆறடிக்கு ஒரு அங்குலம் குறைவு. பருமனில் முப்பத்தேழு அங்குலத்திற்கு ஒன்று அதிகம். அவர் பார்த்த பார்வையில், நடந்த நடையில் சுயம்பு பயந்துபோய் பச்சையம்மாவின் முதுகுப் பக்கம் ஒளிந்தபோது -
இன்ஸ்பெக்டர் பூட்ஸ் காலால் ஒரு எகிறு எகிறினார். “எம்மா போனேனே” என்று அலறியபடியே பச்சையம்மா கீழே விழுந்து, சுயம்புவையும் விழத்தட்டினாள். அந்த இன்ஸ்பெக்டர், சுயம்புவை கழுத்தைப் பிடித்துத் தூக்கினார். அவரது கைகளே வாயாகி அவன் கழுத்தைக் கவ்வின. அப்படியே அவனைத் தூக்கி பச்சையம்மா மேலே போட்டார். சுயம்பு ஒலமிட்டான். “எக்கா, எக்கா. நான் என்ன பாடு படுறேன்னு பாருக்கா... பாருக்கா...”
அக்கா மட்டும் இதைப் பார்த்தால்... இன்ஸ்பெக்டரை சும்மா விடுவாளா? எக்கா... எக்கா... இங்க வாக்கா இங்க வந்து பாருக்கா... ‘மரகதக்கா...’
இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்களை, ‘சம்திங்காக’ பார்த்துக்கொண்டு, “இந்த மைனர் பொட்டை சொல்லுற மேஜர் பொட்டைய ஏன் விட்டீங்க?” என்றார்.
உடனே ஒரு போலீஸ் இன்னொரு சலூட் அடித்துக் கொண்டு “சத்தியமா ரெண்டே ரெண்டுதான்” என்றார். இப்படித் தன்னை வம்பில் சிக்க வைத்த சுயம்பு கவனிக்கப் படவேண்டிய விதத்தில் கவனிக்கப் படுவான் என்பதுபோல் அந்த போலீஸ்காரர் அவனை பயமுறுத்திப் பார்த்தார். பச்சையம்மா, வாயில் ஊறிய ரத்தத்தை துடைத்துக் கொள்ளாமல் சுயம்புவின் வீங்கிப்போன நெற்றிப் பொட்டைத் தடவிவிட்டாள். பிறகு ஏங்கி ஏங்கி அழுதாள். அந்த அவல ஒலியின் பின்னணியில் இன்ஸ்பெக்டர் போர்க்குரல் கொடுத்தார்.
“ஏண்டா பொட்டை! அமைச்சருங்க. ஐ.ஏ.எஸ். அதிகாரிங்க நடமாடுற இடத்துல நடமாடக்கூடாதுன்னு ஒனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். நீ அரவானுக்கு அறுக்கதுமாதிரி நான் அமைச்சருக்கு தாலி அறுக்கணுமா... பாரிமுனை பாலத்துக்குப் போக வேண்டியதுதானடா... ஒனக்கு புத்தி சொல்ற போலீஸ்காரங்க நாயா...? அந்த அளவுக்கு ஒனக்கு திமுரு! போலீஸ், மாமா மச்சான்னு நெனச்சிட்டே... இந்தாப்பா. இவங்கள கவனிக்கிற விதமா கவனியுங்க...”