போலீஸாரில் ஒரு வயிற்றுவலிக்காரர் சலூட்டோடு விவரம் சொன்னார்.
“இந்தப் பொட்டை நம்ம ராக்கப்பன்கிட்ட நம்மை போலீஸ் நாயிங்கன்னு சொல்லியிருக்கான் சார். போலீஸும் பொறுக்கியும் ஒன்றுதானாம். தனியாச் சொன்னாக்கூட பரவாயில்ல சார். பொட்டப்பயலுக ஊர்வலத்துல அவனுக கைதட்டுறதுக்காக அப்படிப் பேசி யிருக்காள்... இவள விட்டுட்டு வந்தால் அப்புறம் எந்தப் பொட்டை நம்மள மதிக்கும் சார். நாமும் பொட்டன்னுதானே அர்த்தம்...!”
இன்ஸ்பெக்டர், சுயம்புவின் மீது படர்ந்த பார்வையை விலக்கி, பச்சையம்மாமேல் வியாபிக்க வைத்து, அவளை மேலும் கீழுமாகப் பார்த்தார். அந்த ஏச்சு எந்த செக்ஷனில் வரும் என்பது மாதிரி நினைத்தார். இதற்குள் வெளியேயிருந்து ஒட்டுக் கேட்டுக்கொண்டே ஒரு கான்ஸ்டபிள் வந்து, சலூட் அடித்தார். அதற்கு எதிர் விகிதாசார விகிதத்தில் பச்சையம்மாவைப் பார்த்துவிட்டு, இன்ஸ்பெக்டரிடம் அவர் பேசினார்.
“சார். ஒன் மினிட் சார். நான் போன வாரம் கஞ்சா கேஸ் சம்பந்தமாய், இவள் ஏரியாவுக்கு போனப்போ, ஒரு வளைவுப் பாதையில நடந்துட்டே இருக்கேன். அப்போ இதே இந்த பொட்டைப் பயதான் ‘வந்துடுவானுவ போலீஸ்... வாங்கிக் குடிக்கன்னு’ பொட்டப் பயல் கிட்ட பேசிட்டிருக்காள் சார். நான்தான் மரியாதையைக் காப்பாத்திக்கிறதுக்காக திரும்பி நடந்து பத்து நிமிஷம் கழிச்சுப் போனேன்...”
இன்ஸ்பெக்டர், பாதிக் கோபத்தோடு கேட்டார்.
“திட்டுனதுக்காக மட்டும்தான் பிடித்திங்களா?”
இப்போது, பச்சையம்மாவே தன்னம்பிக்கையோடு பதிலளித்தாள்.
“இல்லிங்க சார்! வழக்கம்போல பீச்ல ஒருத்தனோட... ஆனால் அவன் அடுத்துக் கெடுத்த ராக்கப்பன்...”
இன்ஸ்பெக்டர் எழுந்தார். நிதானமாக நின்றார். ஏதோ ஒரு நன்னம்பிக்கையோடு பார்த்த