பச்சையம்மா, புலம்பப்போனபோது, குருவக்கா சிறிது தைரியப்பட்டு, இன்ஸ்பெக்டர் முன்னால் வந்தாள். அவரைக் குனிந்து கும்பிட்டாள். சேவலாசனம் போட்ட முர்கேமாதாவை எப்படிக் கும்பிடுவாளோ, அப்படி அந்தத் துப்பாக்கி மனிதரைக் கும்பிட்டாள். கும்பிடும் கையுமாகக் கெஞ்சினாள்.
“ஸார்... ஸார்... நீங்க கூப்பிட்ட குரலுக்கெல்லாம் வாறவங்க நாங்க.. .குடிசைக்கு, நீங்க ஆள் சொல்லி அனுப்பினாலே போதும். நேர கோர்ட்டுக்கு வந்து செய்யாத குற்றத்தை செய்ததாயும், சொல்றோம்... கைக் காசுலேயே அபராதமும் கட்டறோம். இந்த ஒரு தடவை மட்டும் இந்த பச்சையம்மா செய்த குற்றத்தை கோர்ட்ல சொல்லுங்க சார்... பொய் கேஸ் வேண்டாம் ஸார்...”
“ஏய் குருவக்கா... கிண்டலா பண்றே... ஒன்ன மாதிரி பொட்டைங்க விபச்சாரம் செய்யுறதா கோர்ட்ல வழக்குப் போட்டால், ஜட்ஜ் சிரிப்பார்... எனக்கே சிரிப்பு வரும்... அப்புறம் கொஞ்சநாளா ஒன்ன காணலை... ஏன்?”
“கூவாகம் கோயிலுக்குப் போயிருந்தேன் சார். அப்புறம் கோர்ட்ல நாங்க செய்யுற தொழிலையே சொன்னா என்ன சார்? அப்படியாவது ஜட்ஜுக்கு கண் திறக்கட்டும்... சர்க்காருக்கு புத்தி வரட்டுமே...”
“குருவக்கா... நீ ஒவராப் போறே... மாமூல்காரியேச்சுன்னு விட்டு வைக்கேன்.”
“அந்தப் பாசத்துலதான் சார் நான் பேசுறேன். வேற இன்ஸ்பெக்டரா இருந்தால், பேசமாட்டேன் சார். தயவுசெய்து கேளுங்க சார்... எங்கள மாதிரிப் பொட்டைகளை... யாரும் வீட்டு வேலைக்குச் சேர்க்க மறுக்காங்க. சில்லறை வியாபாரம் செய்தால், பொறுக்கிப் பசங்க கிண்டல் பண்றாங்க... எங்களுக்கும் வயிறு இருக்கே சார். அதனாலதான சார் வேற வழியில்லாமல் இந்தப் பொழப்பு செய்யுறோம் சார்... நாங்களும், நல்ல குடும்பங்கள்ல இருந்து நாசமாகி வந்தவங்கதாங்க சார்... அதோ அது கூட என்ஜினியரிங் காலேஜ்ல படிச்சுது சார். அரசாங்கம் ஊனமுற்றவங்களுக்கு உதவி செய்யுது... பெண்களுக்கு எல்லாம் செய்யுது. ஆனால், பெண்ணாவும் ஆகாமல், ஆணாவும் போகாமல் அந்தரத்துல நிற்கிற எங்களுக்கு என்ன சார் செய்யுது... இவள விட்டுடுங்க சார். இல்லாட்டால் நிச வழக்கு போடுங்க சார்...”