இருநூறு ரூபா இருக்குது. ரிக்ஷா மணி, பத்திரமா வச்சுக்கச் சொல்லிக் கொடுத்தது. முர்கேமாதா படத்துக்குப் பின்னாலே கஷ்டப்பட்டு வாங்குன கால் பவுனு தங்க மோதிரம் வச்சிருக்கேன். அய்யோ... கடவுளே. என் மவளுக்காக பாக்கேன். இல்லாவிட்டால், அபராதம் கட்டாமல், ஜெயிலுக்கே போவேன்! மகளே... என் மகளே... கவலைப்படாதே என் மகளே.”
பச்சையம்மா, சுயம்புவை நெருங்கப் போனபோது, அவன் வீறாப்பாய் சிறிது விலகிக் கொண்டான். இன்ஸ்பெக்டர் உச்சரித்த டேவிட் என்ற வார்த்தை அவனை சிலிர்க்க வைத்தது. ‘டேவிட்... என் நிலமையைப் பார்தீங்களா டேவிட்! அன்றைக்கு என்னைக் காப்பாற்றுனது மாதிரி இன்னைக்கும் காப்பாற்றுவீங்களா டேவிட்! இந்தப் பச்சையம்மாவால நான் படுற பாட்டைப் பாருங்க டேவிட். பாவம் அவளும்தான் என்ன செய்வாள் டேவிட்...’
குருவக்கா, இன்பெக்டரிடம் நல்வார்த்தை கேட்டு விட்டுப் போக வேண்டும் என்பதுபோல் கால்களைத் தேய்த்துத் தேய்த்து நின்றாள். அவரோ, எதையும் படிக்காமல் கையெழுத்துக் கையெழுத்தாய் போட்டுக் கொண்டிருந்தார். உடனே குருவக்கா, பச்சையம்மாவைப் பார்த்து ‘கோர்ட்டுக்கு வாறேன்’னு குரல் எழுப்பாமலே அந்த வார்த்தைகளை மனதுக்குள் சொல்லி, அதற்கு ஏற்ப உதடுகளை ஆட விட்டாள். பிறகு, மெள்ள மெள்ள நகர்ந்தாள். இதற்குள், சகல போலீஸ் சம்பிரதாயங்களையும் உணர்ந்த ஒரு போலீஸ்காரர் பச்சையம்மாவின் விலங்குப் பூட்டைத் திறந்தார். சுயம்புவின் விலங்கும் திறக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர், முகத்தைத் திருப்பாமலே ஆணையிட்டார்.
“பச்சையம்மாவ மட்டும் வேன்ல ஏத்து. சின்னப் பொட்டையப் பற்றி அப்புறம் யோசிக்கலாம். பின்னாலகொண்டு போய் நிறுத்து.”
ஒரு கையில், இரு விலங்குகளை வைத்துக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவர், இன்னொரு கையால், சுயம்புவின் கையைப் பிடித்து இழுத்தார். பச்சையம்மா இன்ஸ்பெக்டரை காலைத் தொட்டுக் கும்பிட்டாள். கும்பிட்ட கையோடு நிமிர்ந்தாள்.
“நான் பெறாமல் பெற்ற பிள்ளை சார். என்னோட அனுப்பி வையுங்க சார்: அவளுக்கும் சேர்த்து அபராதம் கட்டுறேன் சார்...”