"முடியாதப்பா ! இத பார்த்தயா? என் கால்ல செம்மையா அடிபட்டிருக்கு. சப்பணம் போட்டு உட்கார முடியாது. விராடபர்வம் வாசிக்கணும்னா ரெண்டு மணி நேரமாவது உட்கார்ந்திருக்கணுமே. அடுத்த வாரம் நிச்சயம் ஆரம்பிச்சுடலாம். பதிமூணாம் தேதி சிதம்பரத்துலே ஒரு விசேஷம். அதுக்கு நான் கண்டிப்பா போயாகணும். போயிட்டு பதினாலு வந்துடுவேன். பதினஞ்சு வச்சுக்குங்க" என்றார்.
"ரொம்ப சந்தோசம்; உங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு. மவராசனாயிருப்பீங்க!" என்று வாழ்த்திவிட்டுப் புறப்பட்டார்கள் குடியானவ மக்கள்.
பிராம்மணர்கள் புறப்பட ஆயத்தமானபோது, "நீங்கள்ளாம் கொஞ்சம் இருந்துட்டுப் போக முடியுமா? உங்களோடு முக்கியமா ஒரு விஷயம் பேசணும், என் சொந்த விஷயம்தான்" என்று விநயமாய்க் கேட்டுக் கொண்டார் கனபாடிகள்.
"எங்களோடயா?" என்றார் ஒருவர்.
"ஆமாம்; என் மகள் பாகீரதி விஷயமா இது வரைக்கும் நான் எதுவுமே யோசிக்காம இருந்துட்டேன். என் மூச்சு இருக்கப்பவே அவளுக்கு ஒரு வழி செய்துடனும்னு நினைக்கிறேன்."
"அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்?"
"நீங்க ஒண்ணும் செய்ய வேணாம், கனபாடிகள் பெண் சீர்கெட்டு அலையறாங்கற அவப்பெயர் அவளுக்கு வரக்கூடாது. அவள் எதிர்காலம் என்னங்கறதை நான் முடிவு பண்ணியாகணும். இந்த விஷயத்துல உங்க அபிப்ராயம் என்னன்னு தெரிஞ்சுக்க விரும்பறேன்."
"மனசுல நீங்க என்ன நினைச்சுண்டு பேசறிங்கன்னு புரிஞ்சு போச்சு, கொஞ்ச நாளைக்கு முன்னால பார்வதியின் புருஷன் பினாங்கிலிருந்து திரும்பி வந்தப்போ அவனைச் சேர்த்துக்கலாமான்னு உங்களிடம் யோசனை கேட்க வந்தோம். அப்ப நீங்க பிடிவாதமா சாஸ்திரம் ஒப்புக்காதுன்னு சொல்லி அனுப்பிட்டேளே, ஞாபகம் இருக்கா? இப்ப மட்டும் அந்த சாஸ்திரம் ஒப்புக்கறதோ? ஊருக்கு ஒரு சாஸ்திரம். உங்களுக்கு ஒரு சாஸ்திரமோ?" என்று