Flexi Classics தொடர்கதை - வேத வித்து - 20 - சாவி
காலையிலிருந்து பாகீரதிக்கு அத்தையின் ஞாபகமாகவே இருந்தது.
"அத்தைக்குத்தான் என் பேர்ல எத்தனை அன்பு! ஊருலேந்து அக்கறையா தாழம்பூ கொண்டு வந்து தலைபின்னி அழகு பார்த்தாளே! அந்தத் துணிச்சலும், அப்பாவை எதிர்த்துப் பேசிச் சமாளிக்கிற தைரியமும் வேறு யாருக்கு வரும்?
"அத்தை இன்னொரு முறை அந்த மாதிரி எனக்குத் தலைபின்னி விட மாட்டாளா? மூர்த்தி எதேச்சையா வந்து என் அலங்காரத்தைப் பார்த்து ரசிக்கமாட்டானா?" என்று உள்ளுக்குள் கொழுந்துவிட்டிருந்த ஆசைக்குக் கற்பனை வடிவம் கொடுத்துப் பார்த்தாள்.
சமையல் கட்டிலிருந்து, நெய் வாசனையும் தாளிப்பு நெடியும் வீடு முழுதும் கமகமத்தது. ராவ்ஜி சமையல்!
கனபாடிகள் "ராமா!" என்று அணில் பிள்ளையைப் பால் குடிக்க அழைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த கிட்டா "காஞ்சீபுரம் சம்பந்தியாத்துக்காரா உங்களுக்கு அரும்பாக்கம் லேகியம் கொடுத்தனுப்பிருக்கா. தலை சுத்தல், தள்ளாமை எல்லாம் போயிடுமாம்!" என்றான்.
"அரும்பாக்கம் வைத்தியருக்கே இப்ப என் வயசு ஆயிருக்குமே!" என்று சொல்லிக் கொண்டே டப்பாவைத் திறந்து கொஞ்சம் லேகியம் உருட்டிச் சாப்பிட்டார்.
"நான் இல்லாதப்ப மூர்த்தி வந்திருந்தானாமே?" கிட்டா கேட்டான்.
"ஆமாம்; சமையல் ராவ்ஜியை அழைச்சுண்டு வந்தான். உங்க மாமா, கிட்டப்பா லெட்டர் கொடுத்தனுப்பிருந்தார். கெளரி மூர்த்தியை தத்தெடுத்துக்க ஆசைப்படறளாம். என் அபிப்ராயம் என்னன்னு கேட்டிருந்தார், எனக்குப் பூர்ண சம்மதம்னு பதில் எழுதி மூர்த்தியிடமே கொடுத்தனுப்பிட்டேன்."
"மூர்த்தி தஞ்சாவூர்லயேதான் வேதம் படிக்கப் போறானா? இங்கே வரமாட்டானா?" என்று கேட்டான் கிட்டா,