(Reading time: 12 - 24 minutes)

வீட்டினுள் சில் என்று காற்றுப் படவே ராஜேஷ்க்கு சற்று ஆறுதலாய் இருந்தது.

“அம்மா, சன் சூட் போடாமல் அப்பா வெளியே போய்டாருமா” என்று கூறிக் கொண்டே ராஜேஷ்ஐ நாற்காலியில் அமர்த்தினான் அந்த இளைஞன்.

“ஐயோ என்னஙக ஆச்சி” என்று பதற்றமாய் ஓடி வந்த தன் வயதான மனைவியை ராஜேஷால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. ஆனால் அந்த இளைஞனைத்தான் அவனால் சரியாக அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.

சற்று சுதாரித்து உட்கார்ந்த ராஜேஷ், தன் மனைவியிடம் அந்த இளைஞனை சுட்டிக் காட்டி “ இது யார்” என்று இழுக்க, “என்னங்க ஆச்சி உங்களுக்கு இது நம்ம மகன் விஜய்” என்று தன் கணவனுக்கு என்னவாயிற்றோ என்ற கவலையுடன் பதில் கூறினாள் அவள்.

போன நிமிடம் 5 வயது குழந்தையாக இருந்தவன், அடுத்த நொடி இவ்வளவு பெரியவனாக மாறி நிற்கிறான் என்று கூறினால் நம்பவா போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு “ஒண்ணும் இல்லமா, வெயிலில் நின்றது தலை சுத்துது, அதுதான். கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கூடுமா” என்று சமாளித்தான் ராஜேஷ்.

அவள் தண்ணீர் எடுத்து வர அந்தப் பக்கம் போக, அருகில் நின்றிருந்த தன் மகனைப் பார்த்து, “விஜய், இது என்ன வருஷம், தேதி என்ன ஆகுது” என்று தன் சந்தேகத்தைக் கேட்டான்.

“2 மே 2048 பா. என்ன ஆச்சி பா உங்களுக்கு, ஆர் யு ஆள் ரைட்” என்று அக்கறையோடு கேட்டான் விஜய்.

போன நொடி 2018 இல் இருந்தோம், அடுத்த நொடிக்குள் 2048 இல் எப்படிச் சாத்தியமாகும் இது. 30 வருடம் கண் முன்னால் மாறியதைப் பார்த்தோம். எப்படி இது சாத்தியம், நம்மை அழைத்து வந்த அந்தக் குழந்தை யார் என்ற யோசனையே அவன் மனம் முழுக்க இருந்தது.

தந்தை பதில் ஏதும் கூறாததால் பயந்து போன விஜய் “அப்பா என்ன ஆச்சி, உடம்புக்கு எது சரியில்லை யா. டாக்டரை வேண்டுமானால் வரச் சொல்லவா” என்று அக்கரையோடு கேட்டான்.

“இல்ல பா, அதெல்லாம் ஒண்ணும் இல்லை. வெளியே வெயில் கொஞ்சம் அதிகமா இருக்குள்ள, அதான் அதில் நின்றது கொஞ்சம் ஒரு மாதிரியா இருக்கு” என்று சமாளித்தான் ராஜேஷ்.

“என்னது கொஞ்சம் வெயிலா, வெளியே 82 °c வெப்பம் நு டிவில சொன்னாங்க. வரும் நாட்கள் ல வெயில் அதிகம் ஆகுமாம்” என்று பதில் கூறிக் கொண்டே ஒரு மாத்திரை பாக்கேட்டை தன் கணவனிடம் நீட்டினார் கீதா.

கீதா கூறியதை கேட்டு ராஜேஷ் அதிர்ச்சி ஆனான். 82°c வெயில் எல்லாம் பாலை வனத்தில் கூட இருக்காதே.

அந்த அதிர்ச்சியோடு தன் கையில் இருக்கும் மாத்திரையைப் பார்த்தான் ராஜேஷ், அதில் தண்ணீர் என்று எழுதியிருந்தது.

தண்ணீரும் மாத்திரை வடிவில் வரும் நிலைமை வந்து விட்டதா, என்று எண்ணிக் கொண்டே அதைப் பிரித்து, வாயில் போட்டான். தண்ணீர் குடித்தது போல் இல்லை என்றாலும், சற்று தாகம் தணிந்தது.

தன் வீட்டைச் சுற்றி பார்த்தான், காலை நேரத்திலே வீட்டில் ஏசி, ஆங்காங்கே ஆக்சிஜன் சிலிண்டர், ஜன்னல் கண்ணாடிகளில், UV protection என எழுதி இருந்தது.  

எதிர் காலம் இப்படி நரகமாக மாறிவிட்டதே என்று அவன் யோசித்துக் கொண்டே இருக்கும் போதே, தாத்தா என்று ஓடி வந்து கட்டி பிடித்தான் விஜயின் மகன்.

ராஜேஷ்ற்கு, நடப்பதைக் காட்டிலும் அது பெரிய ஆச்சரியமாக இல்லை. முப்பது வருடம் கடந்திருக்கிறது என்றால் விஜய்க்கு திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதில் ஆச்சரியம் இல்லையே. ஆனால் அந்தக் குழந்தையின் பெயர் தான் அவனுக்கு ஞாபகம் இல்லை அல்லது சரியாக கூறவேண்டுமானால் அவனுக்குத் தெரியவில்லை.

“ரகு, தாத்தாவை டிஸ்டர்ப் பண்ணாம போய் டிவி பாரு. தாத்தா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று தன் மகனிடம் விஜய் கூற, தன் பேரனின் பெயரை அறிந்து கொண்டான் ராஜேஷ்.

தந்தையின் பேச்சை கேட்டு, அப்படியே செய்தான் ரகு. ஓடிச் சென்று டிவியை ஆன் செய்தான்.

டிவியில் செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது. அதில் ஓடிக் கொண்டிருந்த செய்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அதில் “உலகத்தின் கடைசி மாமரமும் இன்று அழிந்து போனது. விஞ்ஞானிகள் எவ்வளவு போரடியும் அதைக் காப்பற்ற முடியவில்லை. அதில் இருந்து கிடைத்த கடைசி மாம்பழம் பதப்படுத்த பட்டு அருங்காட்சியகத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது” என்று செய்தியுடன் அந்த மரம், பழம் என எல்லாம் காட்சியாக காட்ட பட்டுக் கொண்டிருந்தது.

“அப்பா, மாம்பழம் நா என்ன பா” என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தோடு ரகு தன் தந்தை பார்த்து கேட்டான்.

ராஜேஷ்க்கு அந்தக் கேள்வி அதிர்ச்சியாக இருந்தது. முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை என்னவென்று தன் பேரன் கேட்கிறானே என்று.

“மாம்பழம் ஒரு ஃபுரூட் பா. நல்லா ஸ்விட்டா டேஸ்ட்டா இருக்கும்” என்று தன் மகனுக்கு மாம்பழத்தைப் பற்றி பதில் கூறினான் விஜய்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.