இட்லி மாதவனது வீட்டு திண்ணையில் , மின்வெட்டு நீங்கலாக ஓடும் "பிலிப்ஸ்" ரேடியோவில் வரும் பாடல்களின் ராகத்தை கரெக்டாக சொல்லுவான்.
ஊருக்கு உத்தமனாகவும் உள்ளுக்குள் பொறுக்கியாகவும் இருக்கும் எங்கள் ஊர் பெரிய மனிதர்கள் பலருக்கும் ந.கோ ஐ கண்டால் ஆகாது. அதற்குக் காரணம், தெருவில் அவர்கள் நடந்து போகும் பொழுது சிரித்தபடியே அவரவர்களின் அந்தரங்கத்தை தெரு முழுவதும் கேக்கும்படி கத்துவான்.
சேக்ஸ்பியர் முதல், ஜெயகாந்தன் , ஜெயமோகன், கவிஞர் வாலி , மற்றும் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் வரை விலாவாரியாக அவன் பேசுவதை கேட்பது எங்கள் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்
விகடன் மீது அவனுக்கு ஒரு அலாதி பிரியமும் மதிப்பும் இருந்தது. ஒவ்வொரு முறை எங்கள் அக்ரஹாரதில் ஏதனும் ஒரு நிகழ்வு பரபரப்பாக பேசப்பட்டால் , இதை அப்படியே வேற ஒரு ஊர்ல நடக்கற மாறி, பேரு ,ஊர் எல்லாம் மாத்தி, கற்பனை பண்ணி கதை ஆக எழுதி விகடனுக்கு அனுப்பினேன்னு வை, அவ்ளோதான் ! சுஜாதாவிற்கு ஸ்ரீரங்கத்து தேவதைகள் மாறி, எனக்கு நம்ம ஊரு தேவதைகள் என சொல்லிவிட்டு பெரிதாக சிரிப்பான்.
பழுப்பேறிய பற்களுடன் ந.கோ.பெரிதாக சிரிக்கும் பொழுதெல்லாம் என் அடி வயிற்றை யாரோ பிசைவது போல இருக்கும் எனக்கு.
ந.கோ . பிறந்தது முதலே இப்படித்தான் இருந்தானா? அப்புறம் எப்படி பி.ஏ. எல்லாம் படித்தான் என என் மண்டையை வெகு வருடங்களாக குடைந்து கொண்டிருந்த கேள்விக்காண பதிலை யாரிடம் கேக்கலாம் என்ற யோசனை மற்றும் பயத்துடன் வருடங்களை கடந்த பொழுது ,ஒரு முறை குற்றால சீசனில் குளிக்க போய்க்கொண்டு இருந்த பொழுது கோமதி பெரியம்மா சொன்னாள்.
தென்காசி தாலுக் ஆபிசில் ஹெட் கிளார்க் வேலை பார்த்து வந்த ந.கோ.வின் அப்பா ராமமூர்த்தி , மிகவும் நல்லவர், ஒழுக்க சீலர். ரிடயர்டு ஆக 2 மாதங்களுக்கு முன்பு, ஆக்சிடெண்டில் அவர் போய்விட, வாரிசு உரிமை அடிப்படையில் ந.கோ விற்கு அந்த வேலை கிடைத்ததாம். ந.கோ வும் படிப்பில் சூரன்.அதுபோக டிகிரி யும் முடித்திருந்தானம்.
அரசாங்க உத்தியோகம் மற்றும், அவன் படித்து வாங்கிய பி ஏ. பட்டமும் , ஒரே பிள்ளை, பிக்கல் புடுங்கல் இல்லாத இடம் என்ற நம்பிக்கையும் ,தெற்கு அக்ராஹாரத்து சுகந்தி ஐ அவனுக்கு கல்யாண நிச்சயம் பண்ணிவைக்க உதவின.
கல்யாணத்திற்கு 3 மாதங்களுக்கு முன்பாக, குற்றாலத்திற்கு குளிக்க வந்த பொழுது , வழுக்கி விழுந்து, பின் மண்டையில் அடிபட்டு , பின்பு திருநெல்வேலி ஹை-கிரவுண்டில் சேர்க்கப்பட்டு உயிர்மீட்கப்பட்டானாம்.
எல்லாம் நன்றாகி விட்டதாக அனைவரும் நினைதனாறாம்.ஆனால், பின் மண்டையில் அடிபட்டதால் மூளையிலிருந்து கண்ணுக்கு தகவல் அனுப்பும் ஏதோ ஒரு நரம்பு பாதிக்கப்பட்டு, அவனது கண் மாறு கண்ணாக மாறி இருந்தது.
அவனது மூளைக்கு எந்த பாதிப்பும் இல்லை. பார்த்த, பழகின மற்றும் படித்த விஷயங்கள் எல்லாமே அவனுக்கு நன்கு நினைவிலிருந்தது - சுகந்தி உட்பட! ஆனால், சாதரணமாக பேசும் பொழுது கூட, கழுத்தை இடதுபுறமாக சாய்த்து, கொஞ்சம் இழுத்து இழுத்து பேச தொடங்கினான்.
4 - 5 பேர் உக்கார்ந்து பேசும்பொழுது, திடீரென வந்து, சம்பந்தா சம்பந்தமில்லாத விசயங்களை பேசி சிரிக்க தொடங்கினானாம்.எதுவும் கூறாக இல்லை என முடிவு செய்து , மீண்டும் மதுரை இல் இருந்த ஒரு மனநல மருத்துவரை பார்த்த பொழுதுதான் , புத்தி கொஞ்சம் குழம்பி போய் இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
அவ்வளவுதான். அதன்பிறகு , அவனை போல உண்டா என பேசிய எல்லாரும், அவன் இருக்கானே என வசை பாட தொடங்கினர். இதை காரணம் காட்டியே சுகந்தியுடனான திருமண ஏற்பாடும் நின்றுபோனதாம்.
ந.கோ விற்கு சுகந்தியுடனான திருமணம் ஏற்பாடானதும் அது நின்று போனதும் நினைவிருந்தாலும், நின்றுபோனதர்க்கான காரணத்தை ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இல்லை.
புத்தி சுவாதீனமாக இல்லை என்பதை காரணம் காட்டி அரசாங்க வேலையும் பறிக்கப்பட்டு, பின் என் அப்பா மற்றும் இன்னும் சிலரது முயற்சியால், வேலை போனாலும், அவனது அப்பாவின் சர்வீஸ் ஐகாரணம் காட்டி மாதாந்திர பென்ஷன் வரும்படி ஏற்பாடானது என்று சொல்லி முடிக்கும் பொழுது, பெரியம்மா கொஞ்சமாக அழுதாள்.
சில பல கற்பனைகள் கலக்கப்பட்ட ந.கோ வின் கதையை கேட்ட பின்பு , ந,கோ வுடனான என் நட்பு இன்னும் நெருக்கமானதுபோல நான் உணர்ந்தேன்.
எனது +2 பரீட்சை முடிவுகள் வந்து, மெட்ராஸ் அண்ணா யூனிவெர்சிட்யில் சேர நான் மெட்ராசுக்கும் எங்கள் ஊருக்கும் அலையதொடங்கியதால், முன்பு போல ந.கோ வுடன் நேரம் செலவிடுவது குறையத்தொடங்கியது.
நான் ஆசைப்பட்டது போலவே அண்ணா யுனிவெர்சிட்யில் சீட் கிடைத்து, சென்னைக்கு வந்தேன். என் படிப்பை காரணம் காட்டி, என் அப்பாவும் சென்னைக்கு மாற்றல் வாங்கி கொண்டு வந்ததால், நாங்களும் பக்க நகரவாசிகளாக மாற முற்பட்டோம்.