(Reading time: 14 - 27 minutes)

அவன் தூக்கு போட்டுண்ட முதல் நாள் என்கிட்டே ஆசை ஆசையா , மோர்குழம்பு பண்ணுமானு சொல்லி நன்னா சாப்டான்.சனிக்கிழமை அதுவுமா புள்ள  நன்னா ஆயிட்டான்னு நினைச்சுண்டு சந்தோஷமா சனீஸ்வரனுக்கு விளக்கு போட்டுட்டு வந்தேன்

ராத்திரி சாப்பாடு கூட நன்னா சாப்ட்டுட்டு எனக்கு கால் அமுக்கி விட்டான்.ரொம்பா நாள் கழிச்சு புள்ளை சமர்த்தா இருக்கானேன்னு சந்தோஷ பட்டு கண் அசந்து தூங்கிட்டேன்.

ராத்திரி கூட ஏதோ சத்தம் கேட்டது. பூனை தான் உருட்டறதுனு நினைச்சுண்டு தூங்கிட்டேன் . விடிஞ்சு எழுந்தா,, ம், ம்,, என் புள்ள தொங்கிண்டு இருந்தான்.

மீண்டும் அழுகை - இம்முறை சற்றே பலமாக.

எனக்கு முன்னாடி அவன் போய் சேர்ந்தது  கூட எனக்கு வலிக்கலை எனக்கு.ஆனா , எந்த உத்திரக்கட்டைல அவன தொட்டில்ல போட்டேனோ , அதே கட்டைல தொங்கினான் அதுவும்  முதல் மாச சம்பளம் வாங்கினதும் எனக்குன்னு ஒரு புடவை எடுத்துகொடுத்தான். அதை கட்டிண்டு தொங்கினதுதான் என்கண்ணை விட்டு போகமாட்டேன்கறது

அதே ஆத்துல இருந்தா அவன் நினைவு நிறைய வரதுனுதான் , உன் சித்தப்பா கிட்ட சொல்லி, அதை வாடகைக்கு விட்டுட்டு , இந்த குச்சிள்ள வந்து குடி இருக்கேன்.

குண்டு குண்டு கை எழுத்துல என் மண்டைல உரைக்காத ஏதோ பாஷைல 10 நோட் பூரா  எழுதி இருக்கான். விசாரிக்க வந்த போலீஸ்காரா கூட அதையெல்லாம் பாத்துட்டு குப்பைனு சொல்லிட்டு போனா. நாந்தான் அவன் ஞாபகார்த்தமா பத்திரப்படுத்தி வச்சிருக்கேன் என ந.கோ வாழ்ந்ததன் அடையாளமாக எஞ்சி இருக்கும் 8 - 10 நோட்டுக்களை என் முன்னே எடுத்து போட்டாள்.

அவள் எடுத்துப்போட்ட நோட்டிற்குள் குஞ்சு குட்டிகளுடன் குடும்பம் நடத்திவந்த கரப்பான் பூச்சி, வேறு இடம் தேடும் வியாஜத்தில் ஓடியது.

1995 -இல் தொடங்கி அவன் இறப்பதற்கு முதல் நாள் இரவு வரை எங்கள்    அக்ரஹாரத்தில் நடந்த நிகழ்வுகள், உ..ம் என் பெரியப்பா பையன் சங்கரின் கலப்பு திருமணம், எங்கள் ஊர் பெருமாள் கோவில் சடகோப ஐயங்காரின் கள்ள காதல், சுகந்தியுடனான ந.கோ வின் திருமண ஏற்பாடு என எல்லாமே பெயரும் ஊரும் மாற்றப்பட்டு கதை ஆக்கப்பட்டு இருந்தது.

எனக்கு மேலும் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக , உங்களின் "ஓடிபோனவள்"   சிறுகதை கிடைக்கப்பெற்றது. இருப்பினும் அதை பிரசுரிக்க இயலாததிற்கு வருந்துகிறோம் என ஒரு கடிதம் விகடனில் இருந்து வந்திருந்தது.

ஒரு முறையானும் அவனது ஏதாவது ஒரு கதை விகடனில் பிரசுரமாக வேணும் என்று அவன் ஆசை பட்டது அவஸ்தையாக என் நினைவிற்கு வந்தது.

என்னை பொறுத்தவரை ந.கோ வின் கிறுக்கல்கள் ஒவ்வொன்றும் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் போல எங்கள் அக்ரஹாரம் மற்றும் அதில் வாழ்ந்த தேவதைகளின், அசுரர்களின் சிற்சில மனிதர்களின்  வாழ்கையை கன கச்சிதமாக உள்ளடக்கிய காலப்பெட்டகம்.

அந்த நோட்டில் உள்ள கதைகளை எல்லாம் தொகுத்து , தகுதி ஆனவற்றை பிரசுரிக்க இயலுமா என கேட்டு  விகடனிற்கு அனுப்பலாம் என்று நினைத்திருக்கிறேன். ஒன்றிரண்டு கதைகள் பிரசுரம் ஆகும் பக்ஷத்தில், உலவிவரும் ந.கோ வின் ஆன்ம சாந்தி அடையும் என்று எனக்கு தோன்றுகிறது . நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.