(Reading time: 14 - 27 minutes)

சென்னை வந்து சேர்ந்த பிறகு சில சமயங்களில் ந.கோ வின் நினைவு வந்து போனதுண்டு. இருப்பினும் ப்ரஜெக்ட், தீசிஸ், சட்சடென வந்து போகும் சர்க்கிள் டெஸ்ட், மற்றும் முக்கிய பரிக்ஷைகளுக்கு மத்தியில் ,ந.கோ உடனான நட்பினை தொலைத்தேன்.

நெருங்கிய உறவினர்களின் பிறப்பு , இறப்பு மற்றும் குலதெய்வ கோவில் வழிபாடுகள் என அப்பா மட்டும் அவ்வபொழுது ஊருக்கு போய்விட்டு வருவார். அப்பொழுதுமட்டும் அவனை பற்றிய பேச்சு என் காதில் விழும்.

விஜி என்ன பாவம் பண்ணினாலோ? கல்யாணமான நாளா கஷ்டம் தான்  என்ற அங்கலாய்ப்புடன் அடுத்த தலைப்பிற்கு மாறுவார்.

நாட்கள் நொடிகளாக போய் , மாறும் உலகிற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் மனித இனம் என்பதால், படிப்பு, மேல்படிப்பு , வேலை

இன்னும் பெட்டெர் வேலை, பணம் பண்ணும் ஆசை, ப்ரோமோஷன் குறித்த கவலைகள், சம்பள உயர்வை மட்டுமே குறிக்கோளாக கொண்ட வாழ்க்கை என இயந்திரத்தனமான மனித வாழ்க்கையை வாழ பழகி இருந்தேன்.

2002 ஆம் ஆண்டிற்கு பிறகு, என் பூர்விகத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கூட பெரிதாக வராமல் போனதற்கு காரணம் , என் படிப்பா, எதிர்காலத்தை குறித்த திட்டமிடலா ,இல்லை புதிதான சூழ்நிலை மற்றும் புது மனிதர்கள்  கிடைத்த திமிரா என சொல்ல தெரியவில்லை.

அடிக்கடி வெளிநாட்டு பயணம் போகும்விதமான வேலை என்பது கூட ஒரு சாக்காக இருக்கலாம். எழுத்தாளர் சுஜாதா இறந்தபொழுது கூட எனக்கு அவரை விட ந.கோ வின் ஞாபகம் தான் அதிகம் வந்தது.

இப்படியாக போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் தான் சமீபத்தில், துபாயில் இருந்து வந்துகொண்டிருண்ட பொழுது , பக்கத்தில் இருந்த ஒரு பாட்டி ஆனந்த விகடன் படித்துக் கொண்டிருந்தாள். அவளிடம் கடன் வாங்கி புரட்டிய பொழுது நான் படித்த கதை தான் குர்குர்ராங்.

சம்பிரதாய விசாரிப்புகளுக்கு மட்டும் பேசிவந்த சித்தப்பா நம்பரை அப்பாவிடம் வாங்கி, ஊருக்கு வரும் விவரத்தை சொல்லி  ந.கோ ஐ பற்றி விசாரித்த பொழுதான் , 5 வருடங்களுக்கு முன்பாகவே அவன் தற்கொலை பண்ணிகொண்டது தெரிய வந்தது. உபரியாக, அவன் அம்மா இன்னும் உயிரோட தான் இருக்கா என்ற விபரமும் கிடைத்தது. என்ன ஆனாலும் சரி, இம்முறை ஊருக்கு போய்தான் தீருவது என முடிவு எடுத்து 4 நாட்கள் ஒதுக்கி இதற்கெனவே ஊருக்கு வந்தேன்.

ஊரே உருமாறி இருந்ததை பற்றி வேறு ஒரு கதையாக எழுத நினைத்திருப்பதால், நான்கு நாட்களில் ந.கோவின் அம்மாவுடன் செலவிட்ட ஒரு மணி நேரத்தை பற்றி மட்டும் இங்கு எழுதுகிறேன்.

பிச்சுமணி ஐயர் வீட்டிக்கு 2 வீடு தள்ளி இருண்ட சின்னதை  விட சற்றே பெரிய இடுக்கில் ஒடுங்கிப்போய் படுத்திருந்தாள் விஜி மாமி

விஜி மன்னி, விஜி மன்னி  என சித்தப்பா கத்தியதில் சற்று தலையை தூக்கி பார்த்து எழுந்து உட்கார்ந்தாள். விஜி மாமியின் வலது கண்ணின் கருவிழி வெளுப்பாய் நிறம்மாறி காடராக்டின் ஆதிக்கத்தை சொன்னது.

நான் இன்னார் என சித்தப்பா உரக்க கத்தி சொன்னபிறகு, விஜி மாமியின் முகத்தில் பிரகாசமும் அழுகையும் ஒன்று கூடி வந்தது.

என் வலது தோளைத் தொட்டு தடவியபடியே பேசத்தொடங்கினாள்.

நன்னா இருக்கியா சுரேஷா? வெளிநாடு எல்லாம் போனதா கேள்வி பட்டேன். சந்தோஷம்.

இந்தா, இத பிட்டு துளி வாயில போட்டுக்கோ என்றவாறே ஒரு அதிரசத்தை கையில் திணித்தாள் - வறுமையில் விருந்தோம்பல்!

ஊர்ல மத்தவா எல்லாரும் அவனை பரிகாசம் பண்ணினபோது நீயும் அந்த சீனிவாசன் புள்ள ரகுவும் தானே அவனை விட்டுகொடுகாது பேசுவேள். இருந்திருந்த 44 வயசுதான் இருக்கும் அவனுக்கு என்று பேசிய படி உடைந்து அழ தொடங்கினாள்.

நீயும் ரகுவும் இருந்த மட்டிலும் அவன் எல்லாரண்டையும் பேசிண்டு சகஜமா இருந்தான். நீ மெட்ராஸ்க்கும் ரகு துபாய்க்கும் வேலைக்கு போன பின்னாடி அவனுக்கு பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லாம போனது.

திடீர்னு ராத்திரி எல்லாம் எழுந்து கிறுக்கன் மாறி அழ ஆரம்பிச்சான்.அப்புறம், கோவணம் மட்டும் உடுத்திண்டு ரோட்ல உலாத்தினான். மத்தவாகிட்ட பேசறது கொறஞ்சது.

அப்புறம் நாள் தவறாம ஒரு நோட்ல தினப்படி எழுத ஆரம்பிச்சான். நானோ கைநாட்டு. ஒரு வசை உன் அப்பா வந்த பொழுது அதை காட்டி படிக்கசொன்னேன். படிச்சுட்டு அவர், ஒன்னும் இல்ல ஏதோ கதை எழுதற மாறி கிறுக்கி இருக்கான்னு சொல்லிட்டு எதுக்கும் கொஞ்சம் ஜாக்ரதையாக பாத்துக்கோ விஜினுட்டு போனார்.

நித்யபடி சண்டை, எரிஞ்சு விழறது, என் சமையல்ல குறை கண்டு பிடிக்கறதுன்னு  போச்சு. சில நாள் பேசாம அமைதியா இருந்தான். இன்னதுன்னு எனக்கு காரணம் தெரியல.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.