(Reading time: 13 - 25 minutes)

வாஸந்தி  என்னை  கேட்காமல் என்னை, என் எண்ணை - 4 குரூப்களில் சேர்த்து விட்டாள். அதனால் தான்  சண்டை .  இதென்ன பெரிய விஷயமா ? குறைந்த  பட்சமாக  போனை அல்லது குரூப்பை  ம்யூட்ல் {mute} போடலாம். அதிகபட்சமாக  குரூப்பை  விட்டே  வெளியேறுவது தானே  என  சுலபமாக நீங்கள்  தீர்வு  சொல்லலாம். பிரச்னை  நம்முடையதாக  இல்லாத பட்சத்தில், அதற்கான  தீர்வு  நம்மிடம்  தானே  இருக்கும்?

பெங்களூரில்  கால்  பதிப்பதன் மூலம், இந்தியாவில்  குறிப்பாக தென்னிந்தியாவில்  நுழைய  தலை  எடுத்திருக்கும் , சைனாவை சேர்ந்த நிறுவனத்தின்   தென் மாநில “Marketing Head” என்ற பொறுப்பில் இந்நிறுவனத்தின்  வியாபாரத்தை  விஸ்வரூபம்  எடுக்கவைக்க , ராப்பகலாக உழைக்கவேண்டிய , எனக்கு  கீழே  வேலை செய்வோரை உழைக்க  வைக்க வேண்டிய  வேலை என்னுடையது .

இரத்த  அழுத்தத்தை உயர்த்தி  உச்சாணி  கொம்பிற்கு   ஏற்றும் வேலை. புதிய நிறுவனம், புதிய பதவி, புதிய பொறுப்பு{கள்}, புதிய { பெரிய பெரிய} சம்பளம், பழகிப்போன பிரஷர் . எந்த  நேரத்திலும்  சைனாக்கார  தலை போன் பண்ணி , “போன ஜென்மத்துல இதோட விற்பனை அளவு என்ன”? என கேட்கும் சாத்தியக்கூறுகள்  கூட  ஜாஸ்தி என்பதால் , போனின்  குரல்வளையை  நசுக்கி , ம்யூட்ல்  முனக  விடுவது  எல்லாம்  நடக்காத  காரியம்.

நேற்றிரவு  “தலையுடன்” ஒரு உரசல் .நான்  அனுப்பிய  ஒரு  ரிப்போர்ட்டில் குற்றம்  கண்டுபிடித்த  சைனாக்கார  நக்கீரனிடம்,  என் ரிப்போர்ட்டில் தவறில்லை  என  நான்  மறுக்க, அதை அவன் வெறுக்க , காரமான, காட்டமான விவாதங்களால் நிரம்பி வழிந்த  வாட் ஸப்   மெசேஜ்கள் நள்ளிரவு ஒரு  மணிவாக்கில்  ஓய்ந்தது.

எப்பொழுது   உறங்கினேன்  என்ற  உணர்வில்லாமல்  உறங்கி விட்டிருந்தேன். முதலாளியும்  நானும்  சமாதானமாக  பேசும்  காட்சி  கண்ணுக்குள் விரிந்து விஹசித்த  அந்த S ஒரு   நொடியில்  , ர்..ர்..ர்..ர்ர்.ர்ர்ர்ர்ர்ர்....ர்ர்ர் என என் போன் கர்ஜிக்க, பதறி  உதறி  எழுந்தபடி போனை பார்த்தால் (மணி – 7.45)

 " புஷ்பலதா பள்ளி பருவ மங்கைகள்" என்ற ஒரு குரூப்பிலும், " பாரதியார் பித்துக்கள்" என்று  மற்றொரு  குரூப்பிலும் (இன்னும் இரண்டு ஆனால பெயர் நினைவில் இல்லை ) நான் சேர்க்கப்பட்டிருந்தேன் .உபரி உபத்திரவமாக பாரதியார் பித்திற்கு அட்மின்  பொறுப்பு  வேறு..

வீட்டை சுத்தம்  செய்யவும் , அழுக்குத்துணிகளை  துவைக்கவும்  தான் சனியும் ஞாயிறும்  என்று  சமரசம் செய்து கொண்டுவிட்ட சமகால , சமூக வழக்கப்படி , நாம்  உறுப்பினர்களாக   சேர்க்கப்பட்ட { கவனிக்கவும் -.சேர்க்கப்பட்ட } குரூப்களை அலசி, ஆராய்ந்து, அக்குருப்பில் நம் பங்கும் இருப்பும்  அவசியமா  இல்லையா  என்பதை யோசித்து, வெளிநடப்பு செய்வதா இல்லையா என்பதை  தீர்மானிக்க மாதத்தில் ஒரு மணி நேரத்தையாவது  ஒதுக்கினால்  ஒழிய, உருப்பட முடியாது  போல என நினைக்கும்  இத்தருணத்தில், அதிகமான வாட்ஸ் ஆப்  குரூப்களில்  இருபவர்களுக்கான  லிம்கா ரிக்கார்ட் அல்லது கின்னஸ் ரிக்கார்ட் ஏதும் இப்பொழுது  இருக்கிறதா என்பதை அறியும் அல்ப ஆசையும் துளியளவு துளிர்க்கிறது. ஏனெனில்  இப்பொழுது  சேர்க்கப்பட்டிருப்பதையும்  சேர்த்து  90 குரூப்களில்  நான் மெம்பர்.

அதெப்படி துல்லியமாக 90  என தோன்றி இருக்கவேண்டுமே ? போனவாரம் முழுதாக  4 மணி  நேரம் செலவு  செய்து 18 குரூப்களில்  இருந்து வெளிநடப்பு செய்திருந்தேன். சைனாக்காரனுடனான  போர்  தருணம்  வரை அதன் எண்ணிக்கை  86. கூடுதலாக சில மணி நேரங்கள்  செலவழித்திருக்கும்  பட்சத்தில்,  இன்னமும் 20  குரூப்களில் இருந்து கூட வெளி ஏறி இருந்திருக்கலாம். சமயம்  பத்தவில்லை.

வாட்சப்  குரூப்களை  நான் வெறுப்பதற்கான ஆதாரமான  காரணம் இல்லாமல் இல்லை.

உறக்கத்தை  தொலைத்திருந்த ஒரு - அதி காலை. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில்  வாழும்  வித்யாவிடமிருந்து "குட் மார்னிங்" என ஒரு காபி கப் சகிதம் தோன்றிய ஒரு மெசேஜ் , அதே  நாட்டில்  பெர்த்தில்  வாழும்  ராஜியால்  "வாவ்" என முன்மொழிய பட்டு, மலேசியாவிலிருக்கும் சுபா , ஹாங்காங்கிலிருக்கும்  ஸ்ராவந்தி , சிங்கப்பூரில்  இருக்கும்  பிருந்தா ,இந்திய நேபாள்  எல்லையில்  இருக்கும் லலிதா, இந்தியாவின் 12 மாநிலங்களில் சிதறி இருக்கும்  இருபத்தி  சொச்ச  உடன் படித்தவர்கள், துபாயில் இருக்கும் சிவசங்கரி , ஜெர்மனி உட்பட  பிற 10     ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் ஆர்த்தி யமுனா மற்றும் பலரால் " வாவ் , வாவ், வாவ், வாவ் " என வாவி , வழிமொழியப்பட்டு , அட் லாண்டாவில் வாழும் சந்தியாவை சேரும் பொழுது  , "குட் மார்னிங்" என்ற ஒரு மெசேஜை தாங்கி வந்த ஒரு போட்டோ , ஒரே  ஒரு போட்டோவிற்கு பதிலாக, ஒரு நூறு குட் மார்னிங்குகளும் { கால நேர பருவ மாறுதல்கள் வேறு ) இந்த கப்பை எங்கே வாங்கின என்ற வணிக விசாரிப்புகளையும்  பார்த்து  சலித்தேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.