(Reading time: 13 - 25 minutes)

பிபிஏ  உடன் படித்தவர்களுடனான  ஒரு குரூப் , ஒரே ஒரு குரூப்பில் தொடங்கிய ஒரு “குட் மார்னிங் “ ஏற்படுத்திய ”பட்டாம் பூச்சி விளைவு,” அண்டார்டிகா தவிர  பிற 6  கண்டங்களையும் அதிர வைத்ததை  நினைக்கவே தலைவலிக்கிறது. இது போல பல குரூப்கள், அணிகள், அராஜகங்கள்..

வாட்சப்  குரூப்களை உருவாக்கி பெயரிடும் புண்ணிய ஆத்மாவின் பாதங்களை வாரி, பக்கி - என்னை  விட்டுடு  என மன்றாட வேண்டும். ஏனெனில்  பல  குரூப்களின்  பெயர்கள்  அப்படித்தான்.

மார்க்கெட்டிங்  மேனியா ,workaholic women, Leading Lakshmi’s  என தொடங்கி, நானிருக்கும்  அபார்ட்மென்டின்  குரூப் .அதிலும்  ஓனர்களுக்கு  மட்டுமென ஒரு குரூப். யோகா  க்ளாஸ்  கூட்டம். காலேஜ் (BBA & MBA), ஹாஸ்டல்  கூட்டம் . என் வீட்டில் வேலை செய்யும் ராணியின் பிற 5  முதலாளிகளை அடக்கிய ஒரு குரூப்.  முந்தைய ஆபிஸில் தமிழை தாய் மொழியாக கொண்டிருக்கும் கூட்டம் .  முந்தைய  3 கம்பெனிகளின்  கூட்டம், அப்பா  வழியில்  சில ஆபத்து குழுக்கள். அம்மா வழி  உறவுகள்  உருவாக்கி  இருந்த  அபத்த  குழுக்கள். சில அதிமேதாவி அதிகப்ரசங்க  குழுக்கள் . இதுபோக சடுதியில் ஷேர் செய்ய வேண்டிய சாய்பாபாவும், ஆஞ்சநேயரும், அங்காளம்மனும், பிற கின்னர கிம்புருஷர்களும் அவ்வப்பொழுது தோன்றி அலற விடுகிறார்கள் .

அய்யயோ. பார்த்தீர்களா ? பேச வேண்டியதை  விடுத்து, வேண்டாததை எல்லாம் சேர்த்து கொண்டு பேச தொடங்கிவிட்டேன் . எல்லாம் பழக்க தோஷம். இல்லை ப்ரொபஷனல் தோஷம். நாடி, நரம்பு, ரத்தத்தில், பித்ததில் ஊறி போய் இருக்கும் மார்க்கெட்டிங்  ஃபோபியா படுத்தும் பாடு .

ர் ர் ர் ர் ர் என போன் உறுமியது. இம்முறை சைனாக்காரன் .

“நீ மறுத்தாலும் குற்றம் குற்றமே “ என தீர்ப்பெழுதி மெசேஜ் இட்டு இருந்தான்.

அடுத்த  சில   நொடிகளுக்குள் மீண்டும்   ர் ர் ர் ர் ர் ..ர் ர் ர் ர் ர் .. இம்முறை  பாரதி பித்துக்களில் இருந்த சில பித்துக்கள்  பித்து  பிடித்து  மெசேஜ்  இட்டபடி, பிதற்ற  தொடங்கி  இருந்தன.

சைனா தலையின் தீர்ப்பின் கோபத்தை வெளியேற்றும்  வடிகாலாக எனக்கு சிக்கினாள் வாஸந்தி. வெறி  பிடித்தவள்  போல போன் பண்ணினேன்.

அவள் போனை எடுத்து , “ஏட்டி.. என்ன அதிசயம்? நீயாவே பேசற ? என்று சொல்லிய அடுத்த நொடியில் , நான் வாரி உமிழ்ந்த வார்த்தைகள் அத்தனையும்  அக்மார்க்  நைட்ரிக்  அமிலத்தில்  தோய்க்கப் பட்டவை

யாரை கேட்டு என்னை இத்தனை  குரூப்பில் சேர்த்த ?

இங்க ஒவ்வொரு கம்பெனி காரனும் என் பர்சனல் நம்பர் கிடைக்காதான்னு அலையறான் . நீ என்னடானா , சுண்டல் விக்கறவன், சுக்கு காபி போடறவன் க்ரூப்ல எல்லாம் என்னை சேர்த்திருக்க ?

உன்னை மாதிரி சும்மா இருக்கேன்னு  நினைச்சுட்டிருக்கியா ? சமயத்துல சோறு  சாப்பிட  நேரமில்லாம  சுத்திட்டு  இருக்கேன் . நீ  என்னனா  கொஞ்சம் கூட விவஸ்தை  இல்லாம வீணாப்போன  குரூப்ல எல்லாம் என்னை கோத்துவிட்டுட்டு  இருக்க ? ஏன்டா  உனக்கு நம்பர் கொடுத்தேன்னு  நினைக்க வச்சுட்டடி என்றபடி போனை எறிந்தேன்.

அடி மனதிற்குள்  பொதிந்திருந்த அத்தனை வன்மமும், அகங்காரமும், முதலாளித்துவமும், நான் உன்னை விட மேலானவள் என மனதுள் ஏதோ ஒரு மூலையில் புரையோடிப்போய்  இருக்கும்  எண்ணமும்  சேர்ந்தாலொழிய , இது போல பேசி இருக்க முடியாது .நாவினால் சுட்டது ஆறாது என நன்கு தெரிந்தவள் நான்.இருந்தும் அகங்காரத்தால், அலட்சியத்தால், அமிலத்தை வாரி  ஊற்றியாயிற்று .

மறுபடியும்  ர் ர் ர் ர் ர் ..ர்.. தலை!

பிகர்ஸ் லுக்ஸ் ஓகே . பட்  ஐ நீட் கிளாரிட்டி . வி  ஷால்  டாக் அபோட் இட் ஆன் மண்டே. சில்! (Figures looks ok. But I need clarity. We shall talk about it on Monday. Chill) என மெஸேஜி இருந்தான்.

சினம்  சிறுத்த சீனாக்காரனின்  “சில்” , என்  சினத்தையும் சற்றே சிறுக்க செய்தாலும், மனம் சமநிலையை அடைய மறுத்தது. “உம்” கொட்டாமல்,  நான் உமிழ்ந்ததை  உள் வாங்கி கொண்ட வாஸந்தியின் மௌனம் மருகச் செய்கிறது .

கிடைப்பதற்கரிய பொருள் கிடைத்தாலும், அதை  ஒழுங்காக  கையாளாதவன் , கையாலாகாதவன்  தானே ? கள்ளமில்லாத  ஒரு சுயநலமற்ற நட்பை  உதாசீனப்படுத்திவிட்டேன் என தோன்றுகிறது உடனேயே  போன் பண்ணி  மன்னிப்பு  கேட்டு விடலாம்  என்று  பண்ணினேன் - அவள் எடுக்கவில்லை . மீண்டும் ஒருமுறை பண்ணலாம்  என்ற எண்ணத்தை , ஒருவேளை  போனை  அவ  எடுக்கலேனா  என்ற பயம் , படு பயங்கரமாக ஆக்கிரமித்து  என்னை திராணியற்றவளாக மாற்றியது. வாஸந்தியுடனான பிரிவை அல்லது  முறிவை ஏற்பதற்கு  நான் தயாராகவில்லை.

இதற்கு  முன்னும்  நான் நிறைய  சண்டை போட்டிருக்கிறேன் தான். ஆனால்,      " ஏட்டி ! செத்த நேரம் உக்காந்து , பொறுமையை பிடிச்சு வெச்சிட்டு  யோசி. நீ பண்றது தப்பா  ரைட்டானு  உனக்கே புரியும் "! என சொல்லிவிட்டு போனை  வைக்கும்  வழக்கமுடையவள்  இன்று  செய்த மௌன யுத்தம் குரூரமாக தெரிகிறது. யுத்தமே  குரூரங்களால்  நிறைந்தது  தானே ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.