(Reading time: 15 - 29 minutes)

“ராசு சித்தப்பா! ராசு சித்தப்பா ! அது என்ன?” இரு கோழி முட்டை அழகு கண்கள் மின்ன சின்ன மல்லி கேட்டாள்

“அது இருக்கட்டும். ஆமா சாப்ட்டீங்களா? புள்ளைகளா?” என்றார் செல்வம் - ராசு சித்தப்பா

“ ஓ சாப்டாச்சே” என்றனர் கோரஸாக

“என்ன கொழம்பு? யார் வீட்ல சாப்டீங்க?”

“ வள்ளி வீட்ல சித்தப்பா. “ என்று ஆரம்பித்து சாப்பிட்ட விபர அறிக்கையை படித்து முடித்த குழந்தைகள் ராசு சித்தப்பா இதுவரை அந்தப் பொட்டலம் பற்றி எதுவும் கூறவில்லை என்பதை மறந்து விட்டார்கள். அப்போதைய குழந்தைகளுக்கு அவ்வளவு விபரமில்லை என்பதா அல்லது இவர்களுக்கு மட்டும் விபரமில்லை என்பதா தெரியவில்லை

“கடலை மிட்டாய் இருக்கு சாப்பிடறீங்களா?” என்றார்

“இல்ல ராசு சித்தப்பா. இப்பதான் புளியங்காய் சாப்பிட்டோம். கொஞ்சம் கழிச்சு சாப்பிடறோம்” என்றார்கள்.” கொஞ்சம் கழிச்சா?.....”ஏதோ யோசித்த ராசு சித்தப்பாவின் முக பாவனைகள் ஒன்றும் புரியவில்லை.

“ அப்புறம் சாப்பிடுங்க . இப்ப கையில வாங்கிக்குங்க.” என்றவர் கையில் கொடுக்கப்பட்ட கடலை மிட்டாய்கள் கன நேரத்தில் காலியானதைப் பார்த்துப் புன்னகைத்தார். அந்தச் சிரிப்பில் ஏதோ இருந்ததோ? குழப்பமாய் பார்த்த குழந்தைகளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“கண்மணி வீட்டுக்கு போலாம் வர்றீங்களா?” என்றார்

கண்மணி அவர்களின் தோழியருள் ஒருத்தி. கசக்கவா செய்யும். “ ஓ! போலாமே! ஆனா அவ வீட்ல இல்ல போலிருக்கே?” குழந்தைகள் மறுபடி குழம்பினர்

“ அதை அவங்க அக்கா கிட்ட கேக்கலாம். வுர்றீங்களா?” என்றபடி ராசு சித்தப்பா கிளம்பி விட திறந்த வீடாக இருந்தாலும் உடையவர்கள் இல்லாத வீட்டில் இருக்க முடியாததால் குழந்தைகளும் கிளம்பினார்கள். வீட்டுக் கதவை ஒரு கொண்டி (தாழ்பாள்) போட்டு விட்டு கிளம்பினார் ராசு சித்தப்பா.

நால்வரும் சுப்பிரமணி காம்பவுன்டை ஒரு சுற்று சுற்றி பொன்னம்மா காம்பவுண்டை அடைந்தனர். கண்மணி வீட்டிற்கருகில் போனவர்கள் அங்கே கதவு சாத்தியிருப்பதைக் கண்டு ஏமாற்றமடைந்து “ பாருங்க ராசு சித்தப்பா கண்மணி இல்ல” என்றார்கள்.

“ அதை அவங்க அக்கா கிட்ட கேட்டுக்கலாம் “ என்றவர், ஒரு கணம் தாமதித்து” நீங்களே கூப்பிடுங்க புள்ளைங்களா.’ என்றார்

“சீதையக்கா சீதையக்கா” என்று குழந்தைகள் கோரஸ் பாடவும் கதவை திறந்த சீதையக்கா அதாவது கண்மணியின் அக்கா ராசு சித்தப்பாவை பார்த்து முகம் இருண்டாள். சீதையக்கா பத்து படித்திருக்கிறாள். அப்போது அது பெரிய படிப்பு. கல்யாணத்திற்கு பார்த்துக் கொண்டிருப்பதாக கண்மணியின் அம்மா அவ்வப்போது சொல்வதைக் கேட்டிருக்கிறார்கள். அது என்ன கல்யாணத்துக்குப் பார்ப்பது என்பதும் அவர்களுக்குப் புரியவில்லை. பெரியவர்கள் கதை பேசும் போது அவர்களை சுற்றி சுற்றி வந்து ஓடிப்பிடித்து விளையாடவும் ஒருவரை பற்றி ஒருவர் குறை படிக்கவுமாக குழந்தைகள் உலகம் தனி.

ராசுவின் அம்மா மட்டும் என்னவாம்? “ கொழுந்தனுக்கு ஒரு கால் கட்டு போட்டுட்டால் எனக்கு நிம்மதி வடிச்சு கொட்றது மட்டுமில்லாம போட்டும் குடுக்கச் சொல்லுது ராசு அப்பா.” ஏன்ற ரீதியில் ஏதாவது புலம்புவார். இவர்களையெல்லாம் பார்த்தாலே வள்ளி அன் கோ விற்கு போரடிக்கும். பின்னே அவர்களுக்குப் புரியாததைப் பற்றிப் பேசினால் எப்படியிருக்குமாம்?

கதவைத் திறந்த சீதையக்கா குழந்தைகளைப் பார்த்து மகிழ்வான சலிப்புடன் சிரித்தவள் “கண்மணியத் தேடி வந்தீங்களா? அவ வீட்ல இல்லியே! நீங்க தனியாப் போய்(?!) விளையாடுங்க. அக்காவுக்கு வீட்ல வேல இருக்கு. சோறு பொங்கணும்” என்றபடி கதவைச் சாத்தப் போனவர் அசையாமல் அங்கே நின்ற ராசு சித்தப்பாவைப் பார்த்து அதிர்ந்த மாதிரி தெரிந்தது. அது தங்களுக்கு சப்போர்ட்டுக்கு ஒரு ஆள் வந்திருப்பதைப் பார்த்ததினால் என்றே நினைத்தனர் மூன்று குழந்தைகளும்.

“பொய் சொல்லாதிங்க சீதையக்கா. கண்மணி வீட்ல தானே இருக்கா? “என்று குழந்தைகள் பிடித்துக் கொள்ள “பொய் சொல்றதுதான் உங்க கண்மணி அக்காவுக்கு அல்வா சாப்பிடுத மாதிரில்லா?” என்ற ராசு சித்தப்பா”உங்க கண்மணி அக்காகிட்டெ குடிக்க கொஞ்சம் தண்ணி தர சொல்லு” என்றார்.

“வீட்லயே குடிச்சிக்கிட வேண்டியது தானே “என்றார் சீதையக்கா. சீதையக்காவை ஏன் கண்மணி அக்கா என்று ராசு சித்தப்பா கூப்பிட்டார் என்பதெல்லாம் அப்போது புரியவில்லை. அவருக்கு கண்மணியாம். குழந்தைகளுக்கு அக்காவாம்.

“இப்போ தண்ணி கிடைக்குமா கிடைக்காதா?” என்றார் ராசு சித்தப்பா.

“குழந்தைகள் தண்ணி குடுங்க சீதையக்கா என்று கோரஸ் பாட ஆரம்பித்தனர். அசையாமல் செல்வம் சித்தப்பாவைப் பார்த்தவர் தண்ணி கிடையாது என்றார். அப்போ மாத்திரையை சாப்பிடாம விட்ரட்டுமா? ஏன்று ஆசையாக ராசு சித்தப்பா கேட்டார்.

சற்றும் முகம் மாறாமல் ” அது உங்க விருப்பம். ஆனா நா தண்ணி தர மாட்டேன் என்றார். தண்ணி தர முடியாதுனா மாத்திரை சாப்பிட வேண்டாம்னுதாNனு அர்த்தம் என்ற செல்வத்தை மல்லி இடையிட்டு நிறுத்தினாள்.”ராசு சித்தப்பா உங்களுக்கு உடம்பு சரியில்லனா நீங்கதான் மாத்திரை சாப்பிடனும். அது மாதிரி அதுக்கு தண்ணி குடிக்கிறதும் நீங்களே பாத்துகிட வேண்டியதுதான். என்று தீர்ப்பு வழங்கினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.