(Reading time: 4 - 7 minutes)

சிறுகதை - தேவதை – பவபூரணி

myAngel

"நான் சொன்னேன்ல நீ மாறிட்டன்னு, நிஜமாவே நீ மாறிட்ட மச்சான்"

கதிரின் குரலில் சட்டென நிமிர்ந்தவன், கேள்வியாய் புருவம் தூக்கி, "என்ன்னடா........".என்றான் தனா....தனுமித்ரன்.

எதிரே கைகளை குறுக்காய் கட்டிக்கொண்டு மூச்சுவாங்க புருவம் நெரித்தபடி நின்ற கதிரைப் பார்த்து,

"ஹேய் மாப்ள ப்ளீஸ்....." வண்டியை விட்டிறங்கி அவன் கைகளை பற்றியவன், "நீ என்ன வேணாலும் பண்ணுடா ஆனா முறைக்காத...ப்ளீஸ்...சிரிப்பு வருதுடா ...."

"ஏது சிரிப்பு வருதா...ஹே மேன் நான் சீரியசா பேசிட்ருக்கேன்....சிரிப்பு வருதாம்ல சிரிப்பு, தூக்கி அடிச்சிடுவேன் பாத்துக்க...."என்று கொதித்தவனை

 " இப்ப ஏன் டென்சன் ஆகுறீங்க கதிரேசன் அழகுசுந்தரம்.....பீன்ஸ துப்புங்க" 

"என்னாது......." -கதிர்

" Spill the beans டா " -தனா

'ராஸ்கோலு தமிழ வளர்க்கற நேரத்த பாரு....' முனகியவன்,

"இன்னைக்கு என்ன கிழமை " எனக் கேட்டான்.

"சனிக்கிழமை, ஏன்டா? " எனக் கேட்டவனின் மனதில் சனிக்கிழமைகளில் அவர்கள் பீச்சிற்கு செல்வது நினைவு வர விழித்தான்.

"ஆமா இப்ப முழி ஆந்தையாட்டம்...அதெப்படிடா மூணு வருஷ பழக்கம் ஒரே நாள்ல மறக்கும்...சரி அத விடு,  இன்னைக்கு Classல, ஜன்னலுக்கு வெளிய காக்கா, குருவி ,கொக்குன்னு எதப் பார்த்தாலும் பல்ல பல்ல காமிக்கல? "

"டேய் என்னடா நீ, வண்டலூர் Zoo முன்னால லேகியம் விக்கிறவன் மாதிரி காக்கா குருவி ஆந்தைனு பேசற.." - தனா.

"பேச்ச மாத்தாத...பல்ல காமிச்சியா இல்லயா...."  -கதிர்

"இயற்கைய ரசிக்கறது ஒரு குத்தமாடா....."  

"அது தப்பில்ல மாப்ள, ஆனா நீ ரசிக்கிற பாரு அதுதான் இடிக்கிது. அத விடு, இன்றைக்கு பாத்ரூம் கழுவுற ஆயாவ பாத்து, 'சாப்டியா பாட்டி?'னு கேக்கல.." -கதிர்

"ப்ச் ...இப்ப எதுக்குடா மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுற??" -தனா

"இருக்குடா, சம்பந்தம் இருக்கு ....ஒரு பையன் ..நோட் பண்ணு, ஒரு காலேஜ் பையன், குருவிய ரசிக்கிறான், கொக்கு அழகா இருக்குன்றான், பாட்டிகிட்ட கூட பாசமா பேசறான், கிளம்பும்போது Best friendஅ கூட கழட்டி விடுறான்னா என்ன அர்த்தம் இல்ல என்ன ........." உணர்ச்சி வேகத்தில் கண்ணை மூடிக்கொண்டு பொரிந்து கொண்டிருந்தவன் பைக் சத்தம் கேட்டு கண் திறக்க தனா இல்லாததைக் கண்டு , " ச்ச..கிளம்பிட்டானா, உன்ட்ட பேச வந்தேன் பாரு எனக்கு நல்லா வேணும்..நடத்துடா...." தனக்குள் முனகிவிட்டு கிளம்பினான்.

போக்குவரத்து நெரிசலின் ஊடே லாவகமாய் வண்டியை செலுத்திக்கொண்டிருந்த தனுமித்ரனின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

'நிஜமாகவே மாறிவிட்டேனா என்ன??'

பதிலாய் இதழோரம் தானாய் பூத்தது புதுப்புன்னகை ஒன்று.

'ஆம் முன்பு போல் இல்லை நான்....'

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

'கடைசியாய் யாரிடம் கோபப்பட்டோம்...?'   நினைவடுக்குகளில் ஏதுமில்லை.

கை அனிச்சையாய் தலைக்கோத, திமிராய் நடந்தால்தான் கல்லூரி மாணவன் என்ற நினைவோடு சுற்றிய காலம் மறைந்து, பார்ப்போரிடம் குறுநகையைப் பரிமாறிக்கொள்ளும் தன் மாற்றம் உணர்ந்தான்.

காரணம் ........

அவள்.......

"நந்தா..." உதடுகள் மெல்லமாய் உச்சரித்தன.

பெற்றோரின்றி தன் அண்ணணோடு வாழ்ந்த இவனது வாழ்க்கையை புரட்டி போட்ட வரமவள்.அவளது வட்ட முகமும், கருவண்டு விழிகளும், அந்த மென்சிரிப்பும் மனதை சட்டென கொள்ளையிடும்.அவள் நாவில் வீழ்ந்து புறப்படும் சொற்களில் உலகம் மறப்பான் இவன்.அவளது கண்ணீரைக் கண்டால் உயிர்த் துடிக்கும் இவனுக்கு.

அவளை முதன்முதலாய்க் கண்ட நாளின் பசுமைமாறா நினைவுகளில் முகம் கனிந்தது.

தலையை உலுக்கி நினைவுக்கு வந்தான்.

"அச்சோ...லேட் ஆகிடுச்சே.....ஏதாவது கிப்ட் வாங்கிட்டு போய் சமாதானப்படுத்தனும்... இல்லாட்டி கோவத்துல கடிச்சாலும் கடிச்சிடுவா.." கை தானாய் கன்னத்தைத் தொட, வண்டி வேகமெடுத்தது.

கையில் டெடி பியரோடு உள்ளே நுழைந்தவன் " ந...ந்...தூ...."என மென்மையாய் அழைத்தான். 

சட்டென திரும்பியவள் முகம் மலர "தித்..த..ப்...பா....." எனத் தளிர் நடையிட்டு வந்து இவன் கால்களைக் கட்டிக்கொண்டாள் அக்குட்டி தேவதை.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.