(Reading time: 15 - 29 minutes)

“கேட்டுகிட்டியளா? நான் தண்ணி தர மாட்டேன். அதுக்காக மாத்திரை சாப்பிடக் கூடாதுனும் சொல்ல மாட்டேன். அது உங்க விருப்பம்” என்றார் சீதையக்கா.

“ஏங்க்கா தண்ணி குடுக்க மாட்டுக்கிறீங்க ?” என்றாள் சின்ன மல்லி.

“ எங்க வீட்ல தண்ணி இல்ல” என்றார் சீதையக்கா குழந்தைகளைப் பார்த்து சிரித்தபடி.

“அக்கா சும்மாதானே சொல்றீங்க கொஞ்சம் தண்ணி குடுங்கக்கா என்று அந்த கடலை மிட்டாய் தந்த வள்ளலுக்காக மூவரும் வாதாடினார்கள். “அவுங்க தராட்டி வுடுங்க.” என்றார் ராசு சித்தப்பா

அப்புறம் நடந்தது அவர்களுக்கு அப்போது புரியவில்லை(புரிஞ்சிட்டாலும்!) ராசு சித்தப்பா வீட்டு நிலையில் துழாவி எடுத்த மாத்திரைகளை தண்ணீர் குடிக்காமல் விழுங்கிக் கொண்டிருந்தார்! சுமார் இரண்டு கையளவு மாத்திரைகள்!! குழந்தைகள் சீதையக்காவிடம் மன்றாட ஆரம்பித்தார்கள். “ அக்கா பாவம்க்கா மாத்திரை சாப்பிட கொஞ்சம் தண்ணீ குடுங்கக்கா..” சின்ன மல்லி ஒருபுடி மேலே போய் பக்கத்து அடிபம்பில் அருகில் கிடந்த சொம்பில் தண்ணீர் பிடித்து வந்து “இதைக் குடிங்க ராசு சித்தப்பா “ என்றாள்

“கண்மணியக்கா வீட்டு தண்ணி தான் இந்த மாத்திரை சாப்பிட தோதுபடும்” என்றவர் இரண்டு கையளவு மாத்திரையையும் தண்ணீர் இன்றியே சாப்பிட்டு முடித்திருந்தார்!! அவர் சாப்பிட்டு முடிக்கும் வரை கண்மணி அக்கா வீட்டு நிலைப்படியிலேயே நின்றார். அந்த முகத்தில் என்ன இருந்தது என்பது எப்போதும் புரியாது போல என்று அவர்களுக்கு இருந்தது.

“ அக்கா அம்மிய கழுவிட்டேன் புளி ஊறப் போட்டுட்டேன் வடிச்ச கஞ்சிய குடிச்சிட்டேன் என்றபடி வந்த கண்மணியை பார்த்து வள்ளி அன் கோ பொங்கி எழுந்தனர் “ வீட்ல தான் இருந்தியா கண்மணி ?” அக்கா இல்லனு சொல்லுச்சா? நான் சாப்பிடாம வெளயாட போயிவேன்னு சொலிலியிருக்கும் அதான் கஞசி குடிச்சிட்டேனே? கொஞ்சம் நேரம் சென்னு வந்து சாப்பிடலாம் “ என்றவாறே கண்மணி விளையாடக் கிளம்பவும் வள்ளியின் கோவம் புஸ்வாணமாகியது. பிள்ளைகள் நால்வரும் விளையாடக் கிளம்பினார்கள்.

சாயந்திரம் நான்கு மணியளவில் நான்கு பேருக்கும் பசி பயங்கரமாக எடுக்கவே, இதற்கு மேல் ஊர் சுற்ற தெம்பில்லாமல் அவரவர் கூட்டில் அடைய முடிவெடுத்து தத்தமது வீடுகளை நோக்கி பயணப்பட முடிவெடுத்தார்கள். காலையிலிருந்து வீட்டில் தலையை காட்டாதது விறகு கட்டையால் அடிப்பது , தொடையில் கிள்ளுவது போன்ற மிகப் பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும், தாயாரால் வழங்கப்படும் மேற்படி தீர்ப்பினை அவர்களின் உடன் பிறந்தோர் பார்த்து பரவசமடைவர் என்பதையும் உணர்ந்திருந்ததால் வீடு நோக்கி பீடு நடை போட்டனர் நால்வரும்.

மல்லி வீட்டிற்குள் நுழையும் போதே ஏதோ திகில் படத்தை பார்த்ததைப் போலவும், பி.டி. சாமியின் புதினத்தைப் படித்தது போலவுமான தனது அம்மா மற்றும் அவரின் நண்பிகளின் வம்பளப்பினை கேட்டு “என்னம்மா? ஏன்னாச்சு?” என்றவாறே “ அம்மா பசிக்குதும்மா! “ என்றாள். “ இப்பத்தான் வயிறுன்னு ஒன்னு இருக்கது ஞாபகத்துக்கு வந்துச்சாக்கும் ?” என்று மல்லியின் குமட்டில்குத்தியவாறே தட்டில் சாப்பாடும் சாம்பாரும் பீட்ருட் பொறியலும் வைத்த மல்லியின் தாயார் “ குடிக்க தண்ணி கோரிக்கோ. கை கழுவிட்டு தின்னு” என்று அடுத்தடுத்த உத்தரவுகளைப் பிறப்பித்தார். உத்தரவுகளை செயல்படுத்தியவாறே மீண்டும் “ என்னாச்சும்மா?” என்றாள் மல்லி. முதலில காதிலேயே வாங்காத அவள் அம்மா அவளின் நை நைப்பு தாங்காமல் “ உங்க சேக்காளி ராசுவோட சித்தப்பா செத்துட்டாராம்” என்றார்.

பிறப்பின் குதூகலம் தெரிந்த அளவுக்கு இறப்பின் துயரம் தெரியாத , புரியாத வயது மல்லிக்கு. “ என்னம்மா சொல்லுதே?” என்றவாறே இன்னும் ஒரு கரண்டி சாம்பாரை கோரி தட்டில் ஊற்றிக் கொண்டாள் மல்லி.

“ம்ம் சொரக்காய்க்கு உப்பில்லன்னு சொல்லுதேன்!” என்ற அம்மா அன் கோ தன் தோழியருடன் வெளியே கிளம்பத் தயாரானார். வெளியே கிளம்பத் தயாராவது என்றால் பெரிதாய் ஒன்றுமில்லை. உடுத்தியிருக்கும் புடவையை சரி செய்து கொள்ளுவதுதாளன.. உள்நோக்கி குரல் கொடுத்து மல்லியின் அக்காவைப் பார்த்து “ வீட்டைப் பாத்துக்கோ தங்கம். நாங்க எழவு வீட்டுக்குப் போயிட்டு வந்திருதோம்” என்றவாறே நடக்கத் தொடங்கவும் “ அம்மா நானும் வாரேம்மா” என்று மல்லி தன் குணத்தை ஆரம்பித்திருந்தாள். அங்கெல்லாம் நீ வரக் கூடாது என்ற தாயின் புத்திமதிகளைக் கேட்கும் ஆள் அவளில்லையே. சரி தொலை என்ற அர்ச்சனையோடு அவளையும் கூட்டிக் கொண்டு அனைவரும் சுப்பிரமணி குடியிருப்புக்குச் சென்றார்கள்.

எழவு வீட்டுக்குச் சென்றால் குளித்து விட்டு வரும் பழக்கம் அந்த ஊரில் உள்ளதால் மேற்படி வீட்டிற்கு அருகில் உள்ள வீடுகளில் குளித்துவிட்டு வேறு துணி மாற்றி வந்து விடுவார்கள். தங்கள் வீட்டிற்கு வந்து வாசலில் நின்று கொண்டே குரல் கொடுத்து ஒரு சொம்பு தண்ணீர் வாங்கி காலில் ஊற்றிவிட்டு வீட்டிற்குள் நுழைவார்கள்.அதன்படி மல்லியின் அம்மா தனக்கும் மல்லிக்கும் வேறு உடைகளை ஒரு துணிப்பையில் வைத்துக் கொண்டு மறக்காமல் ஒரு துண்டு மஞ்சளை எடுத்து வைத்துக் கொண்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.