(Reading time: 12 - 24 minutes)

 " மீரா-ராஜா தம்பதிக்கு கல்யாணமான பத்தாவது மாதமே, ஒரு குட்டி மீராவோ, ஒரு குட்டி ராஜாவோ, பிறப்பான். அவனையோ, அவளையோ, நாமிருவரும் மாற்றி மாற்றி தாலாட்டுப் பாடி தூங்கவைப்போம்.......ராஜா! அந்த நாள், அந்த சொர்க்கம், அந்த பேரின்பம், தாமதமில்லாமல் விரைவில் வருவது உன்கையில் தான் உள்ளது."

 " புரிகிறது, சீக்கிரமே ஒரு வேலையை தேடிக்கொண்டு உன் கரம் பிடிக்கிறேன். கவலையே படாதே!"

 அவன் நல்ல பெரிய கம்பெனியில் வேலை தேடியதால், தாமதமாகியது. அதற்குள் நடக்கக்கூடாத்தெல்லாம் நடந்து முடிந்துவிட்டது!

 அவன் வீட்டிலே, நான் மதம் மாறினால்தான் சம்மதிப்போம்னு பிடிவாதம் பிடிச்சாங்க! என் வீட்டிலேயோ, அவனோட தொடர்ந்து நட்பு வைத்துக்கொள்வதையே எதிர்த்தார்கள்.

 இரண்டு பேர் வீட்டிலும் எங்களை உடனடியாக அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய முடிவு சொல்ல, வற்புறுத்தினார்கள்.

 எங்கள் நண்பர்களுடன் கலந்தாலோசித்து, வேறு வழியின்றி, பதிவுத் திருமணம் செய்துகொண்டோம்.

 இருவரும் எங்கள் பயோடேட்டாவை எழுதும்போது, 'சாதி, மதம் எதுவுமில்லை, மனித இனம்' என்று எழுதிக்கொடுத்த முதல் தம்பதிகளாயிருப்போம்.

 எங்களை வீட்டிலிருந்து விரட்டிவிட்டதால், நண்பர்கள் உதவியுடன் ஒரு வீட்டில், முன்பக்கத்தில், ஒரு அறை மட்டும் வாடகைக்கு எடுத்துக்கொண்டு வசித்தோம்.

 நல்லவேளையாக, அடுத்த மாதமே, அவனுக்கு டி.எம்.எஸ். எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியில், நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஐந்து ஆண்டு ஒப்பந்தம்! 

 எதற்காக, நிறைய சம்பளம் என்பது பிறகுதான் தெரிந்தது.

 ஆம், இரவில்தான் வேலை! ஏழுநாளும் வேலை, ஞாயிறு இரட்டிப்பு சம்பளம். கிட்டத்தட்ட, மாதம் ஒரு லட்ச ரூபாய் வருமானம்.

 கடவுளே எங்களுக்கு உதவ, இப்படி செய்திருக்கிறார் என்று ஆரம்பத்தில் துள்ளிக் குதித்தது, உண்மைதான்!

 உடனடியாக, டூ பெட்ரூம் அபார்ட்மெண்டுக்கு மாறினோம்.

 போகப் போகத்தானே, அது எங்கள் வாழ்வையே பலி கேட்பது புரிந்தது.

 இசைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற இருவர் வாழும் வீட்டில், நிசப்தம். இசையைப்பற்றிய நினைவுகூட இல்லை!

 இசையை விட்டுத் தள்ளுங்கள்! வாய்வார்த்தையாகப் பேசுவதே குறைவு! 

 இன்பத்தின் உச்சாணிக் கிளையில் ஜோடிப் பறவைகளாக பாடி மகிழப் போகிறோம் என்ற எங்கள் ஆசைக் கனவு கண்ணாடிப் பாத்திரமாக கீழே விழுந்து நொறுங்கி தூள்தூளாகிவிட்டது!

 என்னால், இந்த நரகவேதனையை இனியும் பொறுக்க முடியாதென, அவனிடம் பேசினேன், ஒரு ஞாயிறு பகல் நேரத்தில்!

 " ராஜா! என்னாலே, இனியும் இந்த நரகவாழ்க்கையை பொறுத்துக்க முடியாதுடா! நீயில்லாம, இரவு நேரத்திலே தனியா படுக்க பயமாயிருக்குடா! உங்கிட்ட சொன்னா, நீ கவலைப்படுவியோன்னு மறைச்சுட்டேன், இந்த காம்ப்ளெக்ஸிலே இருக்கிற சில இளவட்டங்களே, கழுகுமாதிரி வட்டமிடுதுங்க! ஒருநாள், ஒருத்தன் துணிஞ்சு என்னிடம் நேரடியாவே கேட்கறான், 'மேடம்! உங்க கணவருக்கு வாரத்திலே எல்லா நாளும், மாசத்திலே எல்லா வாரமும், வருஷத்திலே எல்லா மாசமும் நைட் ட்யூடி போட்டா, பாவம்! நீங்க எப்படி மேம் இருக்கறீங்க? எந்தக் கம்பெனியிலேயும், பகல் ட்யூடியும் நைட் ட்யூடியும் மாறி மாறித் தானே வரும்? உங்க கணவரோட ஆபீஸிலே மட்டும்தான் புதுசா இப்படி எப்பவுமே நைட் ட்யூடி போடறாங்க, மேம்!"

என்று எனக்கு ஆதரவா பேசறாமாதிரி, கிட்ட நெருங்கப் பார்த்தான். " உன் வேலையை பார்த்துண்டு போ"ன்னு அவனை 'கட்' பண்ணினேன். ஏன், சில கிழங்களே என்னைப் பார்த்து இரவிலே அசடு வழியுது. ராஜா! இந்த நைட் ட்யூடி வேலையை விட்டுடு! வேற வேலை தேடலாம், கொஞ்சம் நாளானாலும் சமாளிக்கலாம்....."

 " மீரா! யோசித்துப் பேசு! எனக்கோ இதுதான் முதல் வேலை. முன் அனுபவமேயில்லாத ஒருத்தனுக்கு எந்தக் கம்பெனியிலாவது மாசம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் தருவாங்களா?"

 " நீ சொல்றது, சரிதான். ஆனா இந்த நைட் ட்யூடிதான்..............."

 " மீரா! நம்ம ரெண்டு பேர் செலவுக்கு, நான் சம்பாதிக்கிற சம்பளமே போதும், உன்னோட முப்பதாயிரம் ரூபாய் இல்லாமலே, குடும்பம் நடத்தலாம். பகல் முழுவதும், ரெண்டுபேரும் வீட்டிலே ஜாலியா இருக்கலாம். உன் வேலையை நாளைக்கே ராஜினாமா செய்துடு! சரியா?"

 " சரியில்லே, ராஜா! என்னோட ஆசை, நீயும் நானும் இரவிலே, கணவன்-மனைவியா சந்தோஷமா இருக்கணும். பகல்நேரம் சரிவராது, ப்ளீஸ், ராஜா!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.