(Reading time: 12 - 24 minutes)

 " மீரா! நான் கம்பெனியிலே, ஐந்து வருஷம் ஒப்பந்தம் கையெழுத்துப் போட்டிருக்கிறதை, மறந்துட்டியா? ...........பகல், இரவுங்கறதெல்லாம் உன் மனசு சொல்ற பாகுபாடு! அமெரிக்காவிலே எல்லாம், கணவன் ஒரு ஊரிலே வேலை பார்ப்பான். மனைவியோ, வேற ஊரிலே, ரொம்ப தூரத்திலே வேலை பார்ப்பா! ஒவ்வொரு வாரமும் கணவன், மனைவியின் ஊருக்கு வெள்ளிக்கிழமை இரவு ஃபிளைட்லே வந்துட்டு, திங்கட்கிழமை காலையிலே திரும்பிப் போயிடுவான். இப்படி பலபேர் பல வருஷமா இருக்காங்க! நான் பொய் சொல்லலே! நீ விசாரித்துப்பாரு!"

 " ராஜா! அவங்க நாடு விட்டு நாடு போய் வேற வழியில்லாம, அப்படியிருக்காங்க! அது மட்டுமில்லே, அந்த மனைவிக்கு துணையா அவங்க பெத்த குழந்தைங்க இருக்கும், நமக்கு அந்த பாக்கியம் இன்னும் வரலியே......." 

 " மீரா! அவனவன் ஐந்தாண்டுகளுக்குப் பிறகுதான், குழந்தைகுட்டியைப்பற்றியே நினைக்கிறான். நமக்கு கல்யாணமாகி, ஒரு வருஷம்தானே ஆகுது!"

 " ராஜா! ஒண்ணு செய்வோமா? உங்க ஆபீஸ் குவார்ட்டர்ஸிலே, உனக்கு ஒரு வீடு அலாட் பண்ணச்சொல்லு! அங்கே, கூட வசிக்கிறவங்க உங்க ஆபீஸ் நண்பர்களா தெரிந்தவர்களா, இருப்பாங்க, எனக்கு இரவிலே தனியா பயமில்லாம இருக்க சௌகரியமாயிருக்கும்..........."

 " மீரா! நம்ம வாழ்க்கையைப் பற்றி நாம மட்டும்தான் கவலைப்படணும். மத்தவங்க அவங்க அவங்க கவலையைத்தான் பார்ப்பாங்க! எங்க ஆபீஸிலே எனக்காக குவார்ட்டர்ஸ் கட்டுவாங்களா? இப்ப வேலை செய்கிறவங்க, ஒருத்தனும் குவார்ட்டர்ஸ் கேட்கவுமில்லே! மீரா! நீ படிச்ச பெண். உறவு, நட்பு, சுற்றம் எல்லாரையும் தனியா எதிர்த்து நின்னு என்னை கல்யாணம் செய்துகிட்டவ! உன் மனசிலிருந்து, இந்த பயம், குழப்பம் எல்லாத்தையும், தூக்கி எறி! சந்தோஷமாயிரு. உன் வேலையை ராஜினாமா பண்ணிட்டு நிம்மதியா என்னோட பகல்லே ஜாலியாயிரு! சரியா?"

 இதுக்குமேல் இவனிடம் பேசிப் பயனில்லே, ஆனா ஒண்ணு புரிந்தது, காதலிக்கும்போது மனசிலே வளர்த்துக்கொண்ட வாழ்க்கை, கல்யாணம் ஆனபிறகு அமையலியேன்னு எனக்கிருக்கிற வருத்தம், ஆதங்கம், ராஜாவுக்கு இல்லையேங்கறதை நினைச்சா, மனசுக்கு வேதனையாயிருக்கிறதோட, அவனை கல்யாணம் செய்துகொண்டதே சரியான முடிவில்லையோன்னு சந்தேகம் வருது, நீங்க என்ன சொல்றீங்க?" 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.