(Reading time: 12 - 24 minutes)

 மாயமோ, மந்திரமோ நான் அறியேன். மைக் முன் நின்று பாட துவங்குமுன், அவனை பார்த்தேன். 'மைக்குக்கு இன்னும் சற்று பின்னால் நின்றுகொள்' என சைகை காட்டினான். அப்படியே செய்து பாடத் துவங்கினேன்.

 'உனை காணாத கண்ணும் கண்ணல்ல.......' என்று பல்லவியை துவங்கியதுமே, அரங்கில், 'ஆகா', 'ஓகோ' என்று கண்களை மூடி மக்கள் ரசித்தது, எனக்கு டானிக் குடித்தது போலிருந்தது.

 அரங்கில் என் இடதுபக்கமாக ஓரத்தில் நின்றிருந்த அவனையும் ஒரு கணம் பார்த்தேன். அவனோ படு உற்சாகமாக தலையாட்டி கட்டைவிரல் உயர்த்திக் காட்டி உற்சாகப்படுத்தினான்.

 கேட்கவேண்டுமா? எனக்கு பி.சுசீலா வாய்ஸ் என என் தோழிகள் பாராட்டுவர். அதை நினைத்துக்கொண்டு, சற்று தன்னம்பிக்கையும் துணிவும் கலந்து இசைத்தேன். 'உன் இசை தேனாக இனிக்கிறது' என்று சொல்வதுபோல், அரங்கம் கட்டுண்டு கிடந்தது.

 பாட்டு முடிந்து, சில கணங்கள் அரங்கமே நிசப்தமாயிருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. 

 பிறகு, ஒருவர் எழுந்து நின்று கைதட்டி 'பிரமாதம்' என பாராட்டியதும், அரங்கம் முழுவதுமே எழுந்து நின்று 'ஆமாம்' என்று ஆமோதித்தது.

 அவனோ, மேடைக்கே ஓடிவந்து, கை குலுக்கிக்கொண்டே, என் கண்ணுக்குள் எதையோ தேடினான்!

 போட்டி முடிந்து, முடிவுகள் அறிவிக்க, நடுவர் குழுவின் தலைவர் எழுந்தார்.

 " மாநிலம் முழுவதிலுமிருந்து போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 எங்கள் வேலையை மிகவும் கடினமாக்கிவிட்டது, போட்டியாளர்களின் உயர்ந்த தரம்! அனைவருக்கும் பாராட்டுக்கள்!

 ஒரு இனிப்பான செய்தி! முதல் மூவருக்கு பரிசு வழங்குவதாக இருந்ததை சற்று மாற்றி, முதல் நால்வருக்கு பரிசு வழங்கப்போகிறோம்!

 ஏனெனில், முதல் பரிசுக்கு இருவர் தேர்வாகியுள்ளனர். ஒரு ஆண், ஒரு பெண்!

 (அரங்கத்திலிருந்து பல குரல்கள், "எங்களுக்கு தெரியும்" என எழுந்தன.)

 ஆம், அவர்களை தேர்ந்தெடுத்தது, நீங்கள்தான்! ஒருவர்....

 ('மீரா' என்று அரங்கிலிருந்து குரல் ஒலித்தது)

 ஆம், 'உனைக் காணாத கண்ணும், கண்ணல்ல' என்று பாடிய, மீரா! இன்னொருவர்

 ('ராஜா' என்று ஒலித்தது)

 ஆம், 'கொஞ்சநேரம் கொஞ்சலாமா' பாடிய ராஜா அவர்கள்!"

 ராஜாவும் நானும் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொண்டோம்.

 அரங்கத்தின் முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர் எழுந்து, " இருவரையும் ஒரு டூயட் பாடச் சொல்லுங்கள்" என்று கேட்டார். அரங்கமே அதை ஆதரித்தது.

 இருவரும் மேடையேறி பாடினோம்.

 அன்று மக்களின் பேராதரவுடன் இணைந்த மீரா-ராஜா தான், பின்பு அதே மக்களின் எதிர்ப்புகளை மீறி மணந்துகொண்டோம்.

 அதற்கு முன்பு, பல முறை நடந்த சந்திப்புகளின்போது ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்துகொண்டோம். 

 ராஜா என்ற பெயர், எனக்குத் தெரிந்து, இந்து மத இளைஞர்களிடையேதான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால், இருவரும் ஒரே மதம் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, ஒரு ஞாயிற்றுக்கிழமை அவன் வருவதற்கு சற்று தாமதமானதும், காரணம் கேட்டபோதுதான், " சர்ச்சுக்குப் போயிருந்தேன், லேட்டாகிவிட்டது" என்றான். " அப்ப நீ கிருஸ்துவனா?" என்று உடனடியாக என்னை அறியாமல் கேள்வி வந்துவிட்டது.

 "ஏன், வேறு மதம் என்பதால், என்னை காதலிக்க மாட்டாயா?"

 " சேச்சே! எனக்கு நீதான் முக்கியம். நமக்கிடையே மதமோ, சாதியோ, பணமோ, அந்தஸ்தோ எதுவும் தடையாயிருக்காது! ஆனால், என் பெற்றோர்தான் இதை ஏற்பார்களா என்று தெரியவில்லை. சரி, அதை விடு, நம் எதிர்கால வாழ்வைப் பற்றி பேசுவோம்!"

 இருவரும் நெருங்கி அமர்ந்து, நேரம் போவதே தெரியாமல், எதிர்காலம் பற்றி கற்பனையில் மிதந்தோம்!

 அவன் எம்.சி.ஏ. படித்து முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தான். நான் காஸ்ட் அகௌண்ட்ஸ் பாஸ் செய்து ஒரு ஆடிட்டர் கம்பெனியில் வேலையில் சேர்ந்திருந்தேன்.

 " ராஜா! நம்மை இணைத்த இந்த இசையை நாம் ஒருநாளும் மறக்கக்கூடாது. தினமும் இருவரும் இஷ்டம்போல் பாடி மகிழவேண்டும்."

 " மீரா! உன்னைப் போல, நானும் ஒரு நல்ல கம்பெனியில் சேர்ந்துவிடுகிறேன். இருவரும் காலையில் சேர்ந்தே வீட்டைவிட்டு கிளம்புவோம், அதேபோல, மாலை வீடு திரும்பும்போதும், சேர்ந்தே வருவோம். வீட்டிலிருக்கிற நேரத்தை இன்பமாக இணைந்து அனுபவிப்போம்.........."

 " ராஜா! இரவில், நான் உன் அணைப்பில் சின்னக் குழந்தைபோல உன்னை கட்டிக்கொண்டு ஜாலியா தூங்குவேன்.............."

 " மீரா! வார விடுமுறை நாள் ஞாயிறன்று, அருகிலுள்ள டூரிஸ்ட் இடங்களுக்கு சென்று வருவோம். தியேட்டரில் சினிமா பார்ப்போம். முடிந்ததும், ஓட்டலில் டின்னரை முடித்துக்கொண்டு வீடு திரும்பி, உன் பிடியில் நானும், என் அணைப்பில் நீயும், மெய் மறந்து தூங்குவோம்.........."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.