(Reading time: 13 - 26 minutes)

சிறுகதை - அதிலே ஒரு த்ரில் இருக்கே! - ரவை

thrill

"ப்பா ஏன் இன்னிக்கி 'வாக்கிங்' போகலே? தினமும் காலையிலே ஆறரைக்கு போயிட்டு ஏழரைக்கு வருவாரே, இன்னிக்கு படுத்திண்டிருக்கார்?"

" போனாரே, நான் பார்த்தேனே! சரியா பாருங்க, அப்பா ரூமிலே படுத்திண்டா இருக்கார்?"

" நான் என்ன பொய்யா சொல்றேன்? நீயே வந்து பார்!"

மகனும் மருமகளும் வந்து பார்த்தபோது, அப்பாவுக்கு அம்மா மாத்திரை கொடுத்துக்கொண்டிருந்தாள்.

 " என்னம்மா ஆச்சு, அப்பாக்கு? இப்ப எதுக்கு மாத்திரை கொடுக்கிறே?"

 " சேது! அப்பாவுக்கு லேசா நெஞ்சுவலி இருக்காம், அதான் மாத்திரை கொடுக்கிறேன்......."

 " 'வாக்கிங்'போனதா மீரா சொல்றாளே?"

 " ஆமாம்மா! நான் வாசல் தெளித்து கோலம் போடறபோது, அப்பா போனாரே!"

 " அது உண்மைதான்! எப்பவும்போலஒரு மணி நடந்துட்டு வரத்தான் கிளம்பினாரு, ஆனால், பத்து நிமிஷத்துக்குள்ளேயே, நெஞ்சுவலி வந்துட்டுதாம், திரும்பி வந்து படுத்துட்டாரு..........."

 " அப்பா! இப்ப எப்படி இருக்கு?"

 " நௌ ஐ ஆம் ஆல்ரைட்! இப்ப நார்மலா இருக்கேன், நடக்கிறபோதுதான், மூச்சு முட்டறது, நெஞ்சு வலிக்கிறது.........."

 " டாக்டரிடம் அழைத்துப்போகட்டுமா?"

 " சேது! எனக்கு வயசாயிடுத்து, முப்பது வருஷமா ஹார்ட் பேஷண்ட்! பைபாஸ் சர்ஜரி பண்ணி இருபது வருஷமாச்சு! இந்த வயசிலே இதெல்லாம் சகஜம்! நீங்க எல்லாரும் நிம்மதியா உங்க வேலையை பாருங்க! நான் கொஞ்சநேரம் படுத்துக்கொண்டிருந்தால், சரியாகிடும்!"

 மீரா, கண்ஜாடை காட்டி சேதுவை தனியே அழைத்தாள்.

 " சேது! எனக்கென்னவோ, அப்பாவை உடனடியா டாக்டரிடம் அழைத்துப் போய்காட்டுவது நல்லதுன்னு தோணுது, ஏன்னா, எங்கம்மாவுக்கு இதேமாதிரி திடீர்னு ஒருநாள் வந்த நெஞ்சுவலியை சரியா கவனிக்காம, அன்னிக்கு ராத்திரியே இரத்த அழுத்தம் எகிறிப்போய், நடுராத்திரியிலே ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணினோம், ஏதோ மருந்து மாத்திரை தந்து அவளை காப்பாத்தினாங்க, ஆனால் இடதுபக்க உடம்பு செயலிழந்து போயிடுத்து, அப்பத்தான், டாக்டர் சொன்னார், 'நெஞ்சுவலி வந்தவுடனே ஆஸ்பத்திரிக்கு அழைத்துவந்திருந்தால், இந்த நிலைமை ஏற்படாம தவிர்த்திருக்கலாம்'னு சொன்னார்."

 அடுத்த நிமிடமே ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் டேவிட்டுக்கு போன்பண்ணி அபாயிண்ட்மெண்ட் வாங்கிண்டு, சேது, அப்பாவை அவரிடம் அழைத்துச் சென்றான்.

 வழக்கம்போல, புன்சிரிப்புடன், டாக்டர் டேவிட் நோயாளியை வரவேற்றார்.

 " என்ன சபேசன்! காலையிலேயே இப்படி உங்க மகனை பயமுறுத்தலாமா? நான்தான் சொல்லி யிருக்கிறேனே, உங்களுக்கு ஹார்ட் ரொம்ப ஸ்டிராங்னு, சரி, ஈ.சி.ஜி., இரத்தப் பரிசோதனை, சிறுநீர்பரிசோதனை, எடுத்துப் பார்ப்போம்அதிலே முடிவு எடுக்க முடியலேன்னா, பிறகு எகோ, ஸகேன்

பார்த்து ஆஞ்சியோ பண்ணவேண்டியிருந்தா, செய்துடுவோம். தைரியமாயிருங்க!"

 " டாக்டர்! முப்பது வருஷம் முன்புஒருநாள், இரவு ஒம்பதரை மணிக்கு என் மனைவி என்னை உங்களிடம் அழைத்து வந்ததிலிருந்து இன்றுவரை நான் உயிரோட நடமாடறது, உங்க தயவிலேதான்! எனக்கு ஒண்ணும் பயமில்லே, சேதுதான் முன்ஜாக்கிரதையா என்னை அழைத்து வந்திருக்கான், பத்தாயிரம் பணத்தோடதான் வந்திருக்கோம், திருப்பதி உண்டியல்லே போடறமாதிரி அந்தப் பணத்தை இங்கே செலவு செய்துட்டா, நோய் இருக்கிற இடம் தெரியாம ஓடிடாதா?"

 " சேது! உங்கப்பாவுக்கு வயசானாலும், குசும்பு போகலே பார்! நான் என்ன சும்மாவா பணம் வாங்கறேன்? நான் படிச்ச படிப்புக்கும், நாற்பது வருஷ அனுபவத்துக்கும் விலை கிடையாதா? கோடிக்கணக்கான ரூபாயிலே ஸ்கேன் மிஷின், எகோ மிஷின், எல்லா மிஷினும் வாங்கிப் போட்டிருக்கேன், அதுக்கு காசு வாங்கறேன், அது தப்பா?"

 " டாக்டர்! எங்கப்பா சார்பிலே, நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன், நீங்க தப்பா எடுத்துக்காதீங்க!"

 " அவரும் சரி, நானும் சரி, தமாஷா இப்படித்தான் பேசிப்போம். சேது! நீ பிறந்தபோதே, அவர் என் பேஷண்ட்! சரி, முதல்லே ஈ.சி.ஜி., இரத்தம், சிறுநீர் டெஸ்ட் முடிச்சிண்டு வாங்க! சொல்றேன்."

 மூன்று ரிபோர்ட்டுகளும் நோயாளிக்கு எந்த குறைபாடும்இல்லைனு தெரிவித்தன!

 " சேது! உங்கப்பாவுக்கு, எல்லாம் சரியாயிருக்கு, ஏன் நெஞ்சுவலி வந்ததுன்னு தெரிஞ்சிக்க, எகோவும் ஸ்கேனும் எடுத்துடு! பார்ப்போம்!"

 அந்த இரண்டு ரிபோர்ட்டுகளும் வந்ததும், டாக்டர் டேவிட் அவைகளை சற்று அதிக நேரம் எடுத்துக்கொண்டு ஆழ்ந்து படித்தார்.

 அப்போதே, சேதுவுக்கு அடிவயிற்றில் கிலி பிறந்தது! சபேசன் கவலையே படாமல் சிரித்துக்கொண்டிருந்தார். 

 " சரி, இந்த முறை ஆஞ்சியோ செய்யாமல் என்னை விடறதா, டாக்டருக்கு எண்ணமில்லை போலிருக்கு, பாவம், சேது! அவனுக்குத்தான் நிறைய செலவு!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.