(Reading time: 13 - 26 minutes)

 இப்படியெல்லாம் சபேசன் மனதில் திட்டமிட்டவாறே, சேதுவின் பின்னே நடந்து வரும்போது, சேதுவுக்கு கைபேசியில் அழைப்பு வந்தது. பேசினான். 

 " அப்படியா, டாக்டர்! ஐ ஆம் சாரி! அந்த ரிபோர்ட்டுகளை நீங்களே வைச்சுக்குங்க, நாளைக்கு வந்து வாங்கிக்கிறேன். அப்பாவுக்கு ஹார்ட்டிலே எந்தக் குறையுமில்லே, ஸ்டிராங்காயிருக்குன்னு தெரிஞ்சபிறகு, ரிபோர்ட்டுகள் தேவையில்லாம போயிடுத்து! அதனாலத்தான், அதை எடுத்துக்கொண்டுவர, மறந்துட்டேன்."

 சபேசனுக்கு குழப்பமாக இருந்தது. தனக்கு எந்த ஆபத்தும் இல்லையென்றால், ஒண்ணு, அந்த சந்தோஷ சமாசாரத்தை சேது தன்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கவேண்டும், ஆனால் அவன் அதை செய்யவில்லை. ரெண்டாவது, சேது முகம் கறுத்து சுரத்தில்லாமல் இருப்பதற்கு வேறென்ன காரணம் இருக்கமுடியும்?

 சேதுவை கேட்பதா வேண்டாமா

 இந்தக் குழப்பத்தில், சபேசன் மூழ்கியிருக்கும்போதே, வீடு வந்துவிட்டது!

 அவனை, அவன் மனைவியும் தாயும் சூழ்ந்துகொண்டு, " என்னவாயிற்று?" என்று ஜாடையால் கேட்டனர்.

 " அம்மா! நான் இனிமேல் இந்த டாக்டரை பார்க்கமாட்டேம்மா! தேவைப்பட்டால், வேற டாக்டர் பார்ப்போம்!"

 " அதெல்லாம் சரிடா! அப்பா உடம்பைப் பற்றி என்ன சொன்னார்?"

 " அவருக்கு ஹார்ட் பலமாக எந்தக் குறையோ, நோயோ இல்லாம இருக்காம். இந்த நெஞ்சுவலி போக, மாத்திரை எழுதிக் கொடுத்திருக்கார்."

 " எவ்வளவு சந்தோஷமான விஷயம்! ஆமாம், நீ ஏன் முகத்தை சோகமா வைச்சுண்டு கடுகடுன்னு இருக்கே? ஏன் டாக்டரை மாற்றணுங்கறே?"

 " நீயே சொல்லும்மா, நியாயத்தை! அப்பா எழுதற கதைகளை நான் படிக்காத துஒரு குற்றமா? தமிழ் படிக்கத் தெரியாத து என் பிழையா? அவர் கேட்கறாரு, 'உங்கப்பா உன்னை வளர்க்க எத்தனை கஷ்டப்பட்டிருப்பாரு, அவர் எழுதற கதைகளை படிச்சிட்டு ஊரே பாராட்டறபோதாவது, உனக்கு தமிழ் படிக்க கற்றுக்கொண்டு அப்பா கதைகளை படித்து அவரை பாராட்டணும்னு தோணவே இல்லையா? அதான் பெரியவங்க சொல்லியிருக்காங்க, பெத்த மனம் பித்து, புள்ள மனம் கல்லுன்னு! எனக்கு பகல் முழுதும் வேலை இருந்தாலும், இரவு அரைமணி நேரம் புத்தகம், கதைகள் படிப்பேன், களைப்பெல்லாம் பறந்துபோய் நான் புது மனிதனாகிவிடுவேன்! ஆனா உனக்குத்தான் உங்க அப்பாவிடம் பாசமே இல்லையே! இருந்திருந்தால், இத்தனை வருஷமா தமிழ் படிக்க தெரிஞ்சிக்காமல் இருந்திருப்பியா? சேது! வெரி சாரி டு சே! உன்னைப் பார்க்கவே எனக்கு பிடிக்கலே, ப்ளீஸ்! நீ போய்ட்டு பிறகு வா!'ன்னு என்னை விரட்டினாரும்மா! இதுவரையிலும், என்னை யாரும் இந்தமாதிரி கண்டித்ததே கிடையாது, அப்பா, அம்மா உட்பட! இவர் யார் கன்னாபின்னான்னு என்னை திட்டறதுக்கு?"

 அதற்கு அவன் தாயும், மனைவியும் என்ன பதில் சொன்னார்கள் என்பதை தெரிந்துகொள்ள சபேசனுக்கு கொஞ்சங்கூட ஆர்வமில்லாமல், மனதுக்குள் சிரித்துக்கொண்டே அங்கிருந்து இடம் பெயர்ந்தார்!

 சேதுவின் சோகத்துக்கு காரணம் தெரிந்துவிட்டது, இனி வேறெந்த விஷயத்தையும் இழுத்துப் போட்டுக்கொள்ளாமல், அந்த 'த்ரில்' வாழ்வில் மூழ்கித் திளைக்கவளண்டும் என முடிவு எடுத்தார், சபேசன்! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.