(Reading time: 13 - 26 minutes)

சிறுகதை - நகரும் உண்மைகள் - ரவை

heathrow-airport-london

விமானத்தில், என் மனைவியும் நானும், சென்னையிலிருந்து லண்டன் வழியாக, அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகருக்கு பயணித்துக்கொண்டிருந்தோம்.

 இரவு நேரம்! ஜன்னல்கள் எல்லாம் மூடப்பட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாக விளக்கு, மங்கலாக வெளிச்சத்தை தந்துகொண்டு, டின்னர் முடிந்து, பயணிகள் உறக்கத்தில்ஆழ்ந்திருந்தபோது, என் மனைவி, மெல்லிய குரலில், என் காதுக்குள் கிசுகிசுத்தாள்.

 "இந்த விமானத்தில் நம்மையும் சேர்த்து முந்நூறு பேருக்கு மேல், இருக்கிறோம், சாப்பிடுகிறோம், உறங்குகிறோம், அங்குமிங்கும் பணிப்பெண்கள் நடக்கிறார்கள், நாமும் 'வாஷ் ரூம்' போய் வருகிறோம், கொஞ்சங்கூட அசைவேயின்றி அமர்ந்திருக்கிறோம், ........"

 " சுசீ! நீ என்ன சொல்ல நினைக்கிறாய் என்று நான் ஊகிப்பதை கேள்! விமானத்தின் கூரையே வானம், அதன் அடிபாகமே பூமி, என்று ஒருவன் நினைப்பது எத்தனை அறிவீனமோ, அதே அளவு மடமை, நாட்டு மக்கள் தங்கள் காலடியில் உள்ள பூமிக்கு சலனமேயில்லை என்று நம்புவது! சரியா?"

 " முக்கியமானது, நம் பார்வை நம்மை எப்படி தப்பான பாதைக்கு இட்டுச்செல்கிறது, பாருங்க! இந்த விமானம் பல கிலோமீட்டர் வேகத்தில், பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத்தை கடந்தாலும், அதில் பயணிக்கும் நமக்கு அப்படி தெரிகிறதோ? அதேபோல, பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு படுவேகமாக சூரியனையும் சுற்றிவருவதை பூமியில் வாழ்கிற நம்மால் உணரமுடியவில்லை!......"

 " கரெக்ட், சுசீ! தினமும் சூரியன் கிழக்கே உதிப்பதாகவும் மேற்கே மறைவதாகவும் பார்க்கிறோம், நம்புகிறோம், குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறோம். வேகமாக பூமி சுற்றும்போது, திசைகளும் இதர கிருகங்களும் மாறிக்கொண்டே இருக்காதா?"

 " அப்படித்தாங்க, நாம் மற்றொரு விஷயத்திலும் தப்பாக நம்புகிறோம். பார்ப்பதற்கு மனிதனின் சரீரம் திடமாக, ஸ்தூலமாக கண்களுக்கு தெரிந்தாலும், நம் உடம்பு உண்மையில் திடப்பொருளா? கோடானுகோடி செல்களும் டிஷ்யூக்களும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்து காட்சி தரும்போது, திடப்பொருளாக தெரிகிறது......."

 " சுசீ! விஞானிகளும் மருத்துவர்களும் ஆராய்ச்சியில் கண்டுபிடித்து உறுதியாக கூறுகிறார்கள், நமது உடலின் ஒவ்வொரு உறுப்புக்குமே வளர்வதற்கும், தன்னை அழித்துக்கொள்ளவும் திறமை உண்டாம், அதற்குத் தேவையான அறிவு உண்டாம், நாம் நினைப்பதுபோல, மூளை மட்டுமே அறிவின் பிறப்பிடம் என்பது சரியில்லையாம்!"

 " ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறார், 'உடலுக்கு முதுமை என்பதே கிடையாது, முதுமை நம் மனதின் கற்பனை!' இதெல்லாம் யோசிக்கவேண்டிய விஷயங்கள்!"

 " இது பரவாயில்லை, இன்னொருவர் சொல்லியிருக்கிறார், இந்த உலகமே மனிதனின் மனதில் பிறந்து, வளர்ந்து, தேய்ந்து, அழிகிறதாம்! அதற்கு ஆதாரமாக, உலகை ஒருவன் பார்ப்பதுபோல இன்னொருவன் பார்க்கவில்லை என்கிறார்............"

 "பாரதியார், தனது சுய சரிதையில், முதலில் என்ன சொல்லியிருக்கிறார், தெரியுமோ? 'வாழ்வு, முற்றும் கனவெனக் கூறியமறைவலோர்தம் உரை பிழையன்று காண்' என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் வேதவித்துக்களை ஆதாரமாகச் சொல்லி, இந்த வாழ்வு கொஞ்சநஞ்சமல்ல, முழுவதுமே ஒரு கனவுங்கிறான்.............."

 " இவைகளை நினைத்துப் பார்க்கும்போது, எது உண்மை, எது தோற்றம் என்று குழப்பமாயிருக்கிறது...."

 " சுசீ! நாம் பேசுவது, மற்றவர்களுக்கு தொந்தரவாயிருக்கும். சற்றுநேரம் தூங்குவோம்.........."

 " இப்பத்தானே நீங்க சொன்னீங்க, வாழ்க்கை முழுவதுமே கனவுன்னு! அதற்கு என்ன அர்த்தம்? ஏற்கெனவே, எங்கோ, யாரோ, தூங்குகிறவர் கனவிலே வருகிற கதாபாத்திரங்கள் நாம்! நாமும் தூங்கினா அந்தக் கனவிலே வருகிற பாத்திரங்கள் வேற யாராவதாக இருப்பார்கள், இல்லையா?"

 " சுசீ! உன் கனவிலே நான் பாத்திரமாக வருகிறேனா, அல்லது என் கனவிலே நீ பாத்திரமா?"

 இருவருமே சிரித்தோம்.

 பின்சீட் பயணியும் சிரித்தான்!

 நாங்கள் இருவரும் அதிர்ச்சியில் திரும்பிப் பார்த்தோம்.

 ஒரு இளைஞன்! பார்ப்பதற்கு தமிழன்போல் தெரிந்தது! நாங்கள் பேசியதை முழுக்க கேட்டுக்கொண்டிருப்பானோ!

 " சாரி சார்! வேறேதோ நினைவில் சிரித்தேன், நீங்க தூங்குங்க!"

 நாங்கள் இனி உஷாராக இருக்க தீர்மானித்தோம்.

 பொழுது விடிந்தது. பல் துலக்க, சுசீ 'வாஷ்ரூம்' சென்றபோது, பின்சீட்டிலிருந்த இளைஞன் என்னிடம்வந்தான்.

 " சார்! எனக்கு இதுதான் முதல் வெளிநாட்டுப் பயணம்! நியூயார்க் போகிறேன், லண்டனிலே, இந்த விமானத்திலிருந்து இறங்கி, நியூயார்க் செல்கிற விமானத்தில் ஏற, நீங்கள்தான் உதவி செய்யவேண்டும்..........."

 " நோ பிராப்ளம்! நாங்களும் நியூயார்க்தான் போகிறோம். நீயும் எங்களுடனேயே, லண்டனில் நான்கு மணி நேரம் தங்கியிருந்துவிட்டு, நியூயார்க் செல்கிற விமானத்தில் ஏறலாம்.........."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.